செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

போலி ஆவணம் மூலம் எந்திரன் படம் விநியோகம்: 2 பேர் கைது

போலி ஆவணங்கள் தயாரித்து எந்திரன் படத்தின் தெலுங்கு பதிப்பான ரோபோவின் விநியோக உரிமையை, பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட உதயக்குமாரும், சுரேந்தனும் சென்னையில் உள்ள ஒரு சினிமா அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
சன் பிச்சர்ஸ் தயாரித்து, ரஜினி நடிப்பில் வெளிவர உள்ள எந்திரன் படத்தின் தெலுங்கு பதிப்பான ரோபோவின் விநியோக உரிமையை, உதயக்குமார் மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவரும் திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்கு போலி ஆவணங்களை காட்டி விற்பனை செய்துள்ளனர்.
27 கோடி ரூபாய்க்கு படத்தின் உரிமையை விலை பேசிய இவர்கள், 2 கோடி ரூபாயை முன்பணமாக பெற்றுள்ளனர். இதையடுத்து ரோபாவுக்கான விநியோக உரிமத்தை விலைக்கு வாங்கியுள்ளதாக, திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் விளம்பரம் செய்ய தொடங்கியது. 
இதுகுறித்து அறிந்த சன் பிச்சர்ஸ் நிறுவனம் காவல்துறையில் புகார் செய்தது. புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உதயக்குமாரும், சுரேந்தனும் போலி ஆவணங்கள் தயாரித்து எந்திரன் படத்தின் தெலுங்கு பதிப்பான ரோபோவின் விநியோக உரிமையை, பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே எந்திரன் படத்தின் எந்த மொழிக்கான விநியோக உரிமையையும், யாருக்கும் விற்பனை செய்யவில்லை என்று சன் பிச்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: