வியாழன், 12 ஆகஸ்ட், 2010

வடக்கிலிருந்து புலிகளினால இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின்

வடக்கிலிருந்து  புலிகளினால் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வாக்குரிமைகள் இதுவரை தொடர்ந்தும் அவர்களது தாயக நிலத்தொடர்போடு உறுதிப்படுத்தப்பட்டு வந்துள்ளன.அதன் பயனாக அவர்கள் தங்களது நாடாளுமன்ற உறுப்புரிமையினை தக்கவைத்துக்கொண்டிருந்தனர்.

இந்த உரிமையை இல்லாமல் செய்யும் நோக்குடன் தேர்தல் திணைக்களம் ஒரு புதிய திட்டத்தை அமுல்படுத்த தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருவதனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கின்றது".

-இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சென்ற 14ம் திகதி ஜூலை மாதம்"பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தந்து புத்தளம் மாவட்டத்தில் வதிகின்ற குடும்பங்களின் தலைமைக் குடியிருப்பாளர்களுக்கு விடுக்கப்படும் வேண்டுகோள்"என்ற தலைப்பில் வெளியாகியூள்ள ஒரு அறிவித்தலின் படி நீண்டகாலமாக தாயக நிலத்தொடர்பற்று இடம்பெயர்ந்தோராக வாழ்ந்துவரும் அனைவரும் புத்தளம் தொகுதியின்

வாக்காளர்களாகவே இனிமேல் பதிந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தப்படுகின்றனர்.

நடைபெறவுள்ள மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் திட்டமிட்டு அவர்களது உறுப்புரிமைகளை இல்லாதொழிப்பதற்கான ஒருமுயற்சியாகவே இதனை அவர்கள் கருதுகின்றனர்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக இடம்பெயர்ந்தவர்களாக அங்கீகரிக்கப்பட்ட இவர்களை யுத்தம் முடிந்த கையுடன் துரிதமாக உரிய இடங்களில் குடியமர்த்தும் முயற்சியில் ஈடுபட வேண்டிய அரசு மாறாக அவர்களை தமது தாயக தொகுதிகளில் இருந்து அவசர அவசரமாக நிரந்தரமாக விரட்டியடிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

யுத்தம் முடியும் வரை இடம் பெயர்ந்தவர்களின் பட்டியல்களில் இவர்களின் கணிசமான எண்ணிக்கையை ஒரு வலுவான தரவாக சர்வதேச சமூகத்திற்கு காட்டி அனுதாபத்தையும்,உதவிகளையும் பெற்று வந்த அரசாங்கம் தற்போது இந்த புதிய யுக்தியால் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை திடீரென குறைத்துக் காட்டுவதன் மூலம் துரிதமான மீள் குடியேற்றத்திட்டமொன்றினை அமுல்படுத்தி விட்டதாக காட்ட முயற்சிக்கின்றதா என எண்ணத் தோன்றுகின்றது.

வாக்குரிமை என்பது நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்குமுரிய பிரத்தியோகமான ஜனநாயக உரிமையாகும்.பிறந்த மண்ணுடன் தொடர்புள்ள இந்த உரிமையை தீர்மானிக்கும் அதிகாரம் அவர்களுக்கே உரியதாகும்.விடுதலைப்புலிகள் இனச்சுத்திகரிப்புச் செய்து எந்த நோக்கத்திற்காக வடமாகாண முஸ்லிம்களை துரத்தி அடித்தார்களோ அந்த நோக்கத்தை நியாயப்படுத்துவது போல தேர்தல் திணைக்களம் நடந்து கொள்வது வேதனைக்குரியது.

20வருடங்களுக்குமுன்னர் இடம் பெயர்ந்தவர்கள் தங்களது தற்காலிக இருப்பிடங்களை கல்வீடுகளாக்கியுள்ள ஒரே காரணத்திற்காக அவர்கள் தற்போது வசிக்கின்ற இடங்களை தாரைவார்த்து விட்டு வெளியேற வேண்டும் என அரசாங்கத்திலுள்ள ஒரு அமைச்சரால் ஏற்கனவே ஒருவேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதனை வலுப்படுத்துவது போன்று தற்போதைய புதியநகர்வுகள் தென்படுகின்றது. கல்வீடுகளில் வசிக்கின்றார்கள் என்ற காரணத்துக்காக புத்தளத்திலிருந்து வெளியேறுங்கள் என்று ஒரு பக்கமும் மன்னாரில் வாக்காளர்களாக இருக்கமுடியாது என்று மறுபக்கமும் இவர்கள் எச்சரிக்கப்படுவது எவ்வகையில் நியாயமாகும்?

இடம் பெயர்ந்தவர்கள் என்ற அடையாளத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக நிரந்தரமாக கொட்டில்களில் காலாகாலமாக அல்லலுறத்தான் வேண்டும் என எதிர்பார்ப்பதென்பது மனிதவதைக்கொப்பானதாகும்.மீள்குடியேற்றம் என்ற போர்வையில் கோடிக்கணக்கான பணம் வீண்விரயம் செய்யப்பட்ட கடந்த காலங்களில்

உண்மையில் எவ்வித மீள்குடியேற்றமும் அர்த்தபுஷ்டியாக நடைபெறவில்லை என்ற உண்மை எங்கு வெளியே தெரிந்து விடுமோ என்பதற்காக இவ்வாறான அரைகுறை நடவடிக்கை களில் அரச திணைக்களங்கள் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக பலவிதமான வேதனைகளையும்,சோதனைகளையும், அரசியல் பழிவாங்கல்களையும் தாங்கிக்கொண்டு தாக்குப்பிடித்து வந்துள்ள ஒரு சமூகம் தனது வாக்குரிமையை பிறந்த மண்ணுடன் தொடர்பு படுத்திக் கொள்ளும் உரிமையை இழக்க முடியாது.ஒருவரது வாக்குரிமை எங்கு இருக்க வேண்டும் என்பதனை தீர்மானிக்கும் உரிமையில் வேறு எவரும் கைவைப்பதற்கு நாம் அனுமதிக்க முடியாது.ுத்தளத்தில் இடம் பெயர்ந்து வாழும் சகலரையும் உடனடியாக மீள்குடியேறுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.அவர்கள் இழந்து விட்ட வாழ்வாதாரம் மீளக்கட்டியெழுப்பப்படுவதற்கு போதுமான நஷ்டஈடுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

நாட்டின் எந்தப்பாகத்திலும் சொத்துரிமையை அனுபவிக்கும் கௌரவமான அந்தஸ்து இடம் பெயர்ந்தவர்களுக்கும் உண்டு என்ற அங்கீகாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தமது சொந்த நிலங்களுக்கு மீளும் உரிமைகள் இடம் பெயர்ந்த சகலருக்கும் வலுவாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.யுத்தம் முடிந்ததை மட்டும் கொண்டாடி மகிழ்வதால் மட்டும் சகஜ நிலைமை தோன்றிவிடாது.யுத்தம் உருவானதற்கான காரணங்களை இனங்கண்டு அவற்றிற்கான பரிகாரங்களை காண்பதும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களினதும் இடம் பெயர்ந்தவர்களினதும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது என்பனவும் சகஜ நிலையை கொண்டு வருவதற்கான முக்கியகாரணிகளாகும்.

எனவே, அர்த்தமற்ற மனச்சஞ்சலத்தை ஏற்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவதிலிருந்து அரச திணைக்களங்கள் தவிர்ந்து கொள்வதுடன்,இரண்டு தசாப்தங்களாக இடம் பெயர்ந்துள்ள முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைத் தீர்வூக்கு முன்னுரிமை கொடுத்து நடைமுறைப்படுத்துவதற்கான விசேட செயலணி ஒன்றினை உடனடியாக அமைத்து அரசியல் சார்பற்ற அனுகுமுறையை அமுல்படுத்துமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை: