சனி, 14 ஆகஸ்ட், 2010

குமரன் பத்மநாதனுக்கு அரசாங்கம் காட்டும் மன்னிப்பு் ஏற்றுக்கொள்ளமுடியாதவை.ஆனந்தசங்கரி

கே.பி நடத்தப்படும் முறை ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை
- வி. ஆனந்தசங்கரி
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளும் இடம்பெயர்ந்த மக்களும் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதனுக்கு (கே.பி.)  அரசாங்கம் காட்டும் மன்னிப்பும் கே.பியை நடத்தும் முறையும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி கூறியுள்ளார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமித்தபோதே வி.ஆனந்தசங்கரி இவ்வாறு கூறினார். 10,500 இளைஞர்கள் இன்னும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஆனந்தசங்கரி, எமது பிள்ளைகளான அவர்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பது குற்றச்செயல் எனவும் விமர்சித்தார்.
  கே.பி. யிலும் அவரின் ஆதரவாளர்களிலும் அரசாங்கம் தங்கியிருப்பது குறித்தும் ஆனந்தசங்கரி  எச்சரித்தார். இலங்கையின் அபிவிருத்திக்காக அவர் முதலீடு செய்யப்போவதாகக் கூறப்படும் பணம் சட்டவிரோதமான, பாவக் காரியமான முறையில் திரட்டப்பட்டதாகும். அப்பணத்தை அபிவிருத்திக்குப் பயன்படுத்தவதன் மூலம் மேற்படி பாவத்தில் இந்நாடு பங்கு வகிக்க வேண்டுமென நான் எண்ண வில்லை என அவர் கூறினார். யாழ். மாவட்டத்திலுள்ள மக்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள மக்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வி. ஆனந்தசங்கரி கூறினார்.

கருத்துகள் இல்லை: