வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

பாஜ கூட்டணியில் மீண்டும் தேமுதிக? மோடி, அமித் ஷாவுடன் சுதீஷ் 'திடீர்' சந்திப்பு

உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு #AmitShah #LKSudhish  #PolimerNews

 dinamalar.com :  சென்னை : டில்லியில் அடுத்தடுத்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை, தேமுதிக பொருளாளரும், அக்கட்சி எம்பியுமான சுதீஷ், சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில், பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த காலங்களில், பாஜ மற்றும் அதிமுக கூட்டணியில், தேமுதிக இடம் பெற்று, தேர்தல்களை சந்தித்தது. இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், அதிமுக- பாஜ கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.
திமுக வழங்கிய ஒரு ராஜ்யசபா 'சீட்' வாயிலாக, தேமுதிக பொருளாளர் சுதீஷ், எம்பியானார். சட்டசபை தேர்தலில் பத்து தொகுதிகள் ஒதுக்கியதில், தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா மட்டும் வெற்றி பெற்றார்.



தேர்தலுக்கு பின், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள், அங்கிருந்து வெளியேறி, தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. ஆனால், தேமுதிக மட்டும் திமுக கூட்டணியில் தொடர்கிறது.

இந்த சூழ்நிலையில், தேமுதிக - எம்பி சுதீஷ், கடந்த, 3ம் தேதி, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, ( ஆகஸ்ட் 05) சுதீஷ் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் திமுக - தவெக நேரடி மோதல், 'இண்டி' கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியது உட்பட பல விஷயங்கள் குறித்து, இருவரும் பேசி உள்ளனர்.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அடுத்தடுத்து சுதீஷ் சந்தித்ததை தொடர்ந்து, பாஜ கூட்டணியில் மீண்டும் தேமுதிக இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, தேமுதிக நிர்வாகிகள் கூறியதாவது:
பாஜவுடன், தேமுதிகவுக்கு நட்பு இருக்கிறது. வேறு கூட்டணியில் இருந்தாலும், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது நன்மதிப்பு இருக்கிறது. அதன் அடிப்படையில், முதல் முறை எம்பியாகி உள்ள சுதீஷ், அவர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, மேகதாது அணை உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தினார். தமிழக அரசியல் சூழல் குறித்தும் பேசி உள்ளார். இதை வைத்து கூட்டணி என கூற முடியாது. எனினும், கூட்டணி மாற்றம் குறித்து, பிரேமலதா தான் முடிவெடுப்பார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை: