வியாழன், 6 ஆகஸ்ட், 2026

ஸ்டாலினை சந்தித்த 2 மதிமுக எம்.எல்.ஏ.க்கள்! வைகோ மீது குற்றச்சாட்டு!

 மின்னம்பலம் - Mathi  : மதிமுக எம்.எல்.ஏ.க்களான திமு ராசேந்திரன், சீர்காழி செந்தில்செல்வன் ஆகியோர், “அமைச்சர் பதவி தருவதாக சொன்ன ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் தாங்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் திமுக எம்.எல்.ஏ.க்களாகவே தொடருகிறோம்”g என்று அறிவித்துள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை திமு ராசேந்திரன், சீர்காழி செந்தில்செல்வன் ஆகியோர் இன்று ஆகஸ்ட் 5-ந் தேதி சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.


இதனையடுத்து செய்தியாளர்களிடம் திமு ராசேந்திரன், சீர்காழி செந்தில்செல்வன் ஆகியோர் கூட்டாக கூறியதாவது: பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களாகத் தொடர்கின்றோம்.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மறுமலர்ச்சி தி.மு.க வேட்பாளர்களாக, மதிப்பிற்குரிய தலைவர் வைகோ அவர்களால் நாங்கள் நிறுத்தப்பட்டோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எங்கள் இருவரையும் வெற்றி பெற வைத்த கடையநல்லூர், சீர்காழி தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும், எங்கள் வெற்றிக்கு அயராது பாடுபட்ட அனைவருக்கும் எங்களது பணிவான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

‘எனது தம்பிகளை வெற்றி பெற வைத்தால் 5 ஆண்டு காலத்திற்கு சிறப்பான சட்டமன்ற உறுப்பினர்களாக அவர்கள் செயல்படுவார்கள்’ என்று தேர்தல் பரப்புரையின் போது தலைவர் வைகோ அவர்கள் சொன்னார்கள்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு 23.05.2026 அன்று கடையநல்லூரில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்திலும் வைகோ அதைக் குறிப்பிட்டார்கள்.

மே 4 முதல் ஜூன் 15-ந் தேதி வரை சட்டமன்றத்தில் தி.மு.க கொறடா உத்தரவுப்படி நடந்து கொள்ளுங்கள் என்றும், நடந்து கொள்வார்கள் என்றும் ஊடகங்களில் சொன்ன பொதுச்செயலாளர் வைகோவின் நிலைப்பாடு, ஜூன் 16 அன்று தமிழ்நாடு அமைச்சர் ஒருவரின் சந்திப்புக்குப் பிறகு மாறத் தொடங்கியது.

சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து எங்களைப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ராஜினாமா செய்யச் சொன்னார்; எங்கள் ராஜினாமாவை அவர்கள் நிர்பந்தித்தார்கள்.

இதை அறிந்து கொண்ட தொகுதி மக்களும், பொதுநல அமைப்பினரும் ‘நீங்கள் ராஜினாமா செய்யக்கூடாது, சட்டமன்ற உறுப்பினராகவே தொடர வேண்டும்’ என்று அறிவுறுத்தினர்; வாக்களித்த எங்களுக்கு மரியாதை தரும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

இந்தக் கருத்துக்களைப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடம் நேரில் சொன்னோம்; அவர் அதனை ஏற்கவில்லை.

இருப்பினும், 6 மாத காலத்திற்கு அமைதியாக இருப்பது என்று முடிவெடுத்து 38 நாட்களாக அமைதி காத்து வந்தோம்.

இந்தச் சூழ்நிலையில், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள், ‘அவர்கள் இருவரும் ஒரு மாதத்திற்கு முன்பே விலை போய்விட்டார்கள்’ என்று பேட்டியளித்து, தொண்டர்கள் மத்தியில் எங்கள் மீது அவதூறு சேற்றை வீசத் தொடங்கியது எங்களை வேதனைக்கு உள்ளாக்கியது.

சுமார் 40 ஆண்டு காலமாக தலைவர் வைகோ பின்னால் எதைப் பற்றியும் கவலைப்படாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பயணித்த எங்களுக்கு இறுதியாக கிடைத்தது இதுபோன்ற இழிவான பழிச்சொல்லே. இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் துடிக்கிறோம்.

”ஆளுங்கட்சி கூட்டணியில் சேருவோம், மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படும், அமைச்சராக கூட ஆகலாம்” என்ற ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல், எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்த மனமில்லாமல் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.

சின்னஞ்சிறு வயது முதல் நாங்கள் நேசித்த திராவிட இயக்கத்தின் கம்பீரமான அடையாளமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களாகவே தொடர்ந்து பணியாற்றிட உறுதிகொண்டு, இந்திய நாடு வியந்து பார்த்த திராவிட மாடல் ஆட்சியை வழங்கிய போற்றுதலுக்குரிய முன்னாள் முதலமைச்சர், தி.மு.க தலைவர் மரியாதைக்குரிய மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம்.

எங்களை அன்போடு அழைத்து அரவணைத்து வாழ்த்திய கழகத் தலைவர் அவர்களுக்கும், அரசியல் வானில் நம்பிக்கைக்குரிய எதிர்காலமாக விளங்கும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், இயக்கத்தின் அனைத்து முன்னணியினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சி அமைக்கவும், திராவிட இயக்கக் கொள்கைகள் இம்மண்ணில் வலிமை பெறவும் சிப்பாய்களாக நின்று கடமையாற்றுவோம். வாக்களித்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்றிய மனநிறைவுடன் நாங்கள் எங்கள் பணியைத் தொடர்வோம்.

எங்களை பொதுவாழ்வில் ஈடுபடுத்திய தலைவர் வைகோ அவர்களுக்கும், கண்ணியமும் அன்பும் நிறைந்த உண்மையான மதிமுக நிர்வாகிகள் நண்பர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு எம்.எல்.ஏ.க்கள் திமு ராசேந்திரன் (கடையநல்லூர் எம்.எல்.ஏ.), செந்தில் செல்வன் (சீர்காழி எம்.எல்.ஏ.) தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு திமு ராசேந்திரன் அளித்த பதில்: நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னத்தில் போட்டியிடுகிற போதே, தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ உறுப்பினராகி அந்த உறுப்பினர் அட்டை பெற்றுத்தான் போட்டியிட்டிருக்கிறோம். ஆகவே திமுகவில் இப்போது இணைந்துள்ளோமா என்ற கேள்விக்கு இடமில்லை.

வைகோ அவர்களோடு நான் தனிப்பட்ட முறையில் கொண்ட உறவு நீண்ட காலமானது. பொதுமக்கள் விருப்பத்திற்கும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவே முடியாத ராஜினாமா என்கிற இதைச் சொல்லுகிற போது, என்னுடைய கருத்தை ஆழமாகப் பதிவு செய்தேன் என்பது பொதுக்குழுவில் நான் செய்தியாக வெளியிட்டிருந்தேன். கட்சிப் பதவி என்றால் தலைவர் விரும்புகிற எந்தக் கட்சியாக இருந்தாலும் அது தலைவருடைய விருப்பம். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பு என்பது மக்கள் நிறுத்தியது, தலைவர் வைகோ நிறுத்தினார். அதனால்தான் நாங்கள் இவ்வளவு நாள் பொறுமையாக இருக்கிறோம்.

ஆனால் வெற்றி பெற வைத்தது பொதுமக்கள். என்னை எதிர்த்து நின்றவர் 50,000 ஓட்டில் ஜெயிப்போம் என்கிறார், நான் 6,000 ஓட்டில் ஜெயித்திருக்கிறேன். வெற்றி பெற வைத்தது யார்? பொதுமக்கள்.

அவர்களின் விருப்பத்திற்கு எண்ணத்திற்குப் புறம்பாக, திரும்பவும் 4 மாதத்தில் ஜீப்பில் ஏறிவிட்டு ‘எனக்கு மீண்டும் வாக்களியுங்கள்’ என்று சொன்னால் அது முரண்பாடு. தலைவர் வைகோ அவர்களே ‘எங்கள் தம்பிகள் ஐந்தாண்டு காலம் சிறப்பாகப் பணியாற்றுவார்கள்’ என்று பிரச்சாரம் செய்திருக்கிறார்கள், நன்றி அறிவிப்பு கூட்டத்திலும் பேசியிருக்கிறார்கள். நான்கு மாதத்தில் ரிசைன் பண்ணிட்டு மக்களிடம் போனால், அந்த மக்களிடம் நாம் அதை எதிர்கொள்ள முடியாது. இதைத் தலைவர் வைகோவிடம் நேருக்கு நேர் பணிவோடும் அன்போடும் கண்ணீரோடும் சொல்லியிருக்கிறோம். அதில்தான் தலைவருக்கும் எங்களுக்கும் கசப்பு ஏற்பட்டிருக்கிறது.

இன்னொரு செய்தியையும் நான் சொல்கிறேன்: 6 மாத காலம், ஓராண்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து தலைவர் வைகோ அவர்களே எங்களுடைய முடிவு சரி என்று நினைக்கக்கூடிய நாள் உருவாகும். அன்றைக்கு அவருக்கும் எங்களுக்குமான அந்தப் பிரிவுத் துயர் நிரந்தரமாக விலகும். இவ்வாறு திமு ராசேந்திரன் கூறினார்.

கருத்துகள் இல்லை: