சனி, 18 டிசம்பர், 2021

மீண்டும் சென்னை சங்கமம்... நகரத்து வீதிகளில் நாட்டுப்புறக் கலைவிழா.

நகரத்து வீதிகளில் நாட்டுப்புறக் கலைவிழா... மீண்டு(ம்) வருமா சென்னை சங்கமம்!
மின்னம்பலம் : பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆயிற்று, அந்தக் கொண்டாட்டங்கள் முடிவடைந்து.. மீண்டும் அதே உற்சாகத்தோடும் உந்துதலோடும் வருமா, சென்னை சங்கமம் கலை விழா என ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள், தலைநகர கலாரசிகர்கள். அவர்கள் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கலைவடிவங்களை நிகழ்த்தும் ஆயிரக்கணக்கான கலைஞர்களும் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். நாட்டுப்புறக் கலைகளை நகரத்து வீதிகளில் நிகழ்த்துவோம் எனும் முழக்கத்தோடு, 2007ஆம் ஆண்டில் தொடங்கியது, சென்னை சங்கமம் கலை விழா. முக்கால் கோடி மக்களைக் கொண்ட சென்னைப் பெருநகரில் முந்நூறு ஏக்கர் தனி உலகில் இருக்கும் ஐ.ஐ.டி.வாசிகள் அதற்கு முன்னர் அங்கு ஒலித்திராத பறை இசை மேளங்கள் முழங்க, சங்கமம் விழாவைத் தொடங்கிவைத்தார், அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.

அறுநூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற முதலாமாண்டுக்கு அடுத்து, பங்களித்த கலைஞர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக ஆனது. கலைகள் நிகழ்த்தப்பட்ட பகுதிகள் கூடுதலாகி குறிப்பாக வடசென்னையின் பல பகுதிகளில் நாட்டுப்புறக் கலைகள் பலவும் புத்தம்புதிதாக அறிமுகம்செய்யப்பட்டதைப் போலவும் ஆனது. நிகழ்த்தப்பட்ட கலை வடிவங்களும் வகைகளும் முந்தைய ஆண்டைவிட கூடுதலாக்கப்பட்டன. சில மாற்றங்களும் சேர்க்கைகளும் அதில் இடம்பெற்றன. தொடக்க ஆண்டின் அதே பிரம்மாண்டத்துடன், சென்னையின் வீதிகளில் விதம்விதமாக வித்தாரம்காட்டி மக்களைக் கலைகளால், கட்டிப்போட்டனர், நாட்டுப்புறக் கலைஞர்கள்.

தமிழ்நாட்டின் பல்வேறு கலைவடிவங்களை ரசிக்கவைத்தது மட்டுமின்றி, தமிழ் மண்ணின் பல சுவைகளை தலைநகர வாசிகள் ஒருகை பார்த்துவிடவும் செய்தனர், சங்கமம் ஏற்பாட்டாளர்கள். ஒவ்வொரு பகுதியிலும் தயாரிக்கப்படும் பிரத்யேக உணவுவகைகளை அவற்றின் சுவைமாறாமல் சென்னையில் கிடைக்கச் செய்தது, இரண்டாம் ஆண்டு சங்கமம்.

தமிழ்நாட்டு அரசின் கலை, பண்பாட்டுத் துறையும் தமிழ் மையமும் இணைந்து நடத்திய சங்கமம் கலைவிழாவுக்கு, மூன்றாம் ஆண்டு புரவலர் கிடைப்பதில் சுணக்கம் ஏற்பட்டது.

அதைச் சரிசெய்யும்படியாக அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தன் சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை அளித்தார். வழக்கமான கலைநிகழ்த்துகையுடன், பெரும் கவிதை நிகழ்வும் நடத்தப்பட்டது. அதில், 100 கவிஞர்கள் கவிதை பாடலும் அரங்கேறியது. இந்திய அளவில் பெரும் திறந்தவெளித் திருவிழா என்கிற பெயரும் கிடைத்தது.

அடுத்த ஆண்டு தொடக்க விழா தீவுத்திடலில் நடைபெற்றது. அதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். அரங்க நிகழ்ச்சிகளும் பூங்காக்கள், திடல்கள், கடற்கரை போன்ற திறந்தவெளி நிகழ்ச்சிகளும் வழக்கம்போல நடத்தப்பட்டன.

கடைசியாக அரசு ஆதரவுடன் நடைபெற்ற சங்கமம் விழா, 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்டதுதான். அதற்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசாங்கம் அமைந்ததும், சங்கமம் கலை விழாவுக்கு அரசின் துணைதரவு கிடைக்காமல் போனது. தமிழ் மையம் தனியாக நடத்த முயன்றும் அது அவ்வளவாகக் கைகூடவில்லை.

ஆனாலும் சங்கமம் கலை விழாவின் நினைவுகளை தமிழகத்தின் நாட்டுப்புறத்துக் கலைஞர்கள் இன்னும் ஈரம் காயாமல் மனதில் வைத்திருக்கிறார்கள். இன்னொரு புறம், உலகையே உலுக்கிப்போட்ட கொரோனா அவர்களின் வாழ்வாதாரத்தையும் நசுக்காமல் விட்டுவிடவில்லை.

நடனக் கலைஞர் துர்கா

கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாக கரகம் முதலிய பல நடனக்கலைகளை நிகழ்த்திவரும் சேலம் துர்காவிடம் பேசினோம். சங்கமம் என்றவுடனே அவ்வளவு உற்சாகம் அவருக்கு.

” கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் பல நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டாலும், சங்கமம் கலைவிழா எல்லா கலைஞர்களுக்கும் இருப்பதிலேயே பெரியது. அந்த அளவுக்கு கலைஞர்கள் விரும்பக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக இருந்ததை மூத்த கலைஞர்கள் இன்னும் சொல்வார்கள். மீண்டும் அந்த விழாவை நடத்தினால் இப்போதைய நெருக்கடிக்கு வழி பிறக்கும். பொதுவாக ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை வரைதான் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தொழில் இருக்கும். அப்போது கிடைக்கும் வருமானம்தான், ஆண்டு முழுவதற்குமானது.. இந்தக் கொரோனா வேறு பிரச்னைகளை மேற்கொண்டும் அதிகப்படுத்திவிட்டது.

அரசியல், கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு இன்னும் அனுமதி வரவில்லை.

கலைஞர்கள் பெரும் இக்கட்டில்தான் இருக்கிறோம். நகர்ப்புரத்தில் இருப்பவர்கள் வாடகை தரமுடியாமல், கிடைக்கிற வேலைகளைச் செய்வதற்காக மாவட்டம்விட்டு மாவட்டம் வந்திருக்கிறோம். இப்படி வரமுடியாதவர்களின் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. தற்கொலைவரை போயிருக்கிறது, நிலைமை. சங்கமம் விழாவை முன்னைப்போல இந்த ஆண்டும் நடத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தால், கலைகளும் கலைஞர்களின் வாழ்வாதாரமும் நல்ல நிலையை அடையும்.” என ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டார், கலைஞர் துர்கா.

மணி

நெல்லை வட்டாரத்தைச் சேர்ந்த வில்லுப்பாட்டுக் கலைஞர் தம்பதியரான மணி - சங்கரம்மாள் ஆகியோரும், மிகுந்த எதிர்பார்ப்புடன் இதே கோரிக்கையை மு.க.ஸ்டாலின் அரசாங்கத்திடம் முன்வைக்கிறார்கள்.

குடம், உடுக்கைக் கலைஞரான மணியும் பாட்டுக் கலைஞரான சங்கரம்மாளும் கலையையே வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். இவர்களைப் போலவே கலையே வாழ்க்கையாக இருந்துவரும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு, தை மாதம் தொடங்கி புரட்டாசிவரை கோயில் கொடை, அதுசார்ந்த விழாக்களென நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கேரள மாநிலத்தின் வர்க்களை, நெடுமங்காடு, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் இருக்கும். எல்லாம் அந்த ஆறு மாதங்கள்தான். ஆகையால் அதைத்தாண்டிய வருவாய்வழி என்பது கிட்டத்தட்ட இல்லை என்றுதான் சொல்லமுடியும்.

இப்படியான நிலையில், சங்கமம் போன்ற அரசின் நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் கலைஞர்களுக்கு, பரவலான அறிமுகமும் அந்தந்த மாவட்ட அளவில் உரிய அங்கீகாரமும் கிடைக்கும்.

அதுவும் இப்போதைய கையடக்க உலகத்தில், ”உலகம் முழுவதற்கும் நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். நல்ல பெயர் வரும். ஆறு மாதம் மட்டுமல்லாமல் மீத மாதங்களிலும் வருவாய்க்கு வாய்ப்பு உண்டாகும். வேறென்ன..?” என புதிய முதலமைச்சரின் மீது நம்பிக்கை வைத்தபடிப் பேசுகிறார், சங்கரம்மாள்.

சங்கரம்மாள்

இதுவல்லாமல் பல சங்கதிகளை சத்தமில்லாமல் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது, சென்னை சங்கமம் என்பது பரவலாக அறியப்படாத ஒன்று.

அரசின் பண்பாட்டுத் துறை அதனளவில் சங்கமம் விழாவில் பங்களிப்புசெய்தது இருக்க, தமிழ் மையத்தின் சார்பில், சங்கமத்தில் பங்கேற்கும் கலைஞர்களுக்கென பிரத்யேகமான சீருடைகள் வழங்கப்பட்டன. எங்கோ கடைகளில் கிடைப்பதை அப்படியே வாங்கித்தராமல், திரைப்படங்களில் கலை இயக்குநர் பணியைச் செய்யும் நுண்கலைக் கல்லூரியில் பட்டம் படித்த ஓவியக்கலைஞர்கள் மூலம், சங்கமத்துக்காகவே, ஒவ்வொரு வகைக் கலைஞர்களுக்கும் ஒரேவடிவ சீருடையை உருவாக்கி, ஒருவருக்கு இரண்டு செட் சீருடைகள் வழங்கப்பட்டன.

ஓவியக் கலைஞர் புருசோத்தமன்

“அப்போதுதான் முதல் முறையாக இப்படி முறையான சீருடையை அணிந்துகொண்டு பங்கேற்றதாக நூற்றுக்கணக்கான கலைஞர்கள் எங்களிடம் நெகிழ்ச்சியோடு கூறினார்கள். நான்கு நாள்கள் நிகழ்ச்சி என்றால் இரண்டு செட் உடைகளையும் கசங்காமல் பயன்படுத்த வாய்ப்பாக அமைந்தது. அப்போது தந்த சீருடையை இப்போதுவரை வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். பலர் அந்த மாதிரியில் தைத்துக்கொள்ளவும் ஆர்வம் காட்டுகிறார்கள். நாட்டுப்புறக் கலைஞர்களிடம் சங்கமம் ஒரு மிடுக்கையும் கம்பீரத்தையும் ஏற்படுத்தியதை அருகிருந்து பார்த்திருக்கிறேன். வெறும் பணம் என்பதைத்தாண்டி, சங்கமம் கலைவிழா கலைஞர்களுக்கு உற்சாகத்தைத் தருவதாகவும் ஊக்குவிப்பாகவும் இருக்கும். இது கலைஞர்களுக்கு அவசியம்.” என மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார், ஓவியக் கலைஞர் புருசோத்தமன்.

இவரை எங்கோ பார்த்தமாதிரி எண்ணம் வருகிறதா?... ஆம், அவரேதான் இவர்.... (பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி படங்களில் நடித்தவர், அடுத்த படமான ’நட்சத்திரம் நகர்கிறது’ படத்திலும் நடித்துவருகிறார்.)

இந்தக் கலைஞர்களையும் ஒரு சுழற்று சுழற்றிவிட்ட கொரோனா உச்சகட்ட பாதிப்பின்போது, இவர்களுக்காக இணையத்தில் உதவிதிரட்டினார், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப் போல, நாட்டுப்புறக் கலையையே வாழ்க்கையாகக் கொண்டவர்களுக்கும் வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடாக, ஆறு மாதங்களுக்காவது அரசே வழிவகை செய்யவேண்டும் என்று அவர் கூறியது, இன்றைக்கும் மிகப் பொருத்தம்.

கலைகளைச் செழிப்பாக வைத்திருக்க, கலைஞர்களின் வாழ்வை உயிர்ப்போடு வைத்திருப்பது அவசியம் என்பதுடன், இன்னுமொரு நல்ல விளைவையும் சென்னை சங்கமம் உண்டாக்கமுடியும் என்கிறார், ஆய்வாளர் கஜேந்திரன்.

தலைநகர் சென்னையின் தவறான பிள்ளைகளாக மட்டும் காணப்படும் குறிப்பிட்ட கல்லூரிகளின் மாணவர்களை, குறிப்பாக அவர்களில் கலை, இலக்கியப் படைப்பாற்றல் உள்ளவர்களை இந்த விழாவின் தொண்டர்களாக, தன்னார்வலர்களாக ஈடுபடுத்தலாம்; அது அவர்களிடம் உருவாக்கும் தாக்கமும் படைப்பாற்றல் தூண்டலும் இந்த நகருக்கு மேலும் ஒரு அரும்பயன் தருவதாக இருக்கும் என உறுதிபடச் சொல்கிறார், அவர்.

சங்கமத்துக்கு முன்னரோ பின்னரோ இங்கு நாட்டுப்புறக் கலை நிகழ்த்தலே இல்லையென்று சொல்லிவிடமுடியாது.. ஆனால், சம்பிரதாய, பண்பாட்டுச் சடங்குகளிலும் இல்லாத மரியாதையும் மதிப்பும் அரசால் நடத்தப்படும், சாதிசமயச்சார்பற்ற பொதுவிழாவில் மட்டுமே சாத்தியம் என்பதை சங்கமம் கலைஞர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் வெளிப்படுத்துகிறார்கள்.

சமூகநீதி, சமயச்சார்பற்ற தன்மையைத் தூக்கிப்பிடித்த கருணாநிதி ஆட்சியின் நீட்சியாகவே இப்படி ஒரு எதிர்பார்ப்பை அவர்கள் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்!

- இர. இரா. தமிழ்க்கனல்

கருத்துகள் இல்லை: