ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

மூணாறு நிலச்சரிவு: ஒரே இடத்தில் 8 உடல்கள்... 42 ஆக அதிகரித்த உயிரிழப்பு எண்ணிக்கை

எம்.கணேஷ்- தினேஷ் ராமையா - ஈ.ஜெ.நந்தகுமார் -- விகடன் : மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்திருக்கிறது. மூணாறு அருகே ராஜமலைப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு மொத்தமாகப் புதைந்தது. மொத்தம் 40 வீடுகள் இருந்த நிலையில், சுமார் 25 வீடுகளில் தொழிலாளர்கள் வசித்து வந்திருக்கிறார்கள்.      தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 83 பேர் இந்த நிலசரிவில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இருக்கும் காட்டாற்றில் இருந்து ஆறு உடல்கள் மற்றும் மண்ணில் இருந்து 30 பேரின் உடல்கள் என மொத்தம் 36 பேரின் உடல்களை மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் மீட்டனர்.          மண் சரிவில் சிக்கிய 12 நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.          

தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன், தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் தன்னார்வலர்களாக மீட்புப் பணிகளில் இணைந்திருக்கிறார்கள். இந்தநிலையில், தொடர் மழை மற்றும் வெளிச்சமின்மையால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால், பகல் நேரத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்தன. போலீஸாரின் மோப்ப நாயும் மீட்புப் பணியின்போது பயன்படுத்தப்பட்டது.

 

மூணாறு நிலச்சரிவு
மூணாறு நிலச்சரிவு
மோப்ப நாய் உதவியுடன் உடல்களைத் தேடும் பணி நடைபெற்றது. ஒரே இடத்தில் இருந்து 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 20 ஆண்கள், 19 பெண், 7 வயதுச் சிறுமி மற்றும் 13, 14 வயதுடைய சிறுவர்கள் 2 பேர் என 42 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் ஏற்கெனவே 5 ஹிட்டாச்சி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், மேலும் ஒரு வாகனம் மீட்புப் பணியில் இணைந்துள்ளது. வெளிச்சமின்மை மற்றும் மழை காரணமாக மீட்புப் பணிகள் இன்று நிறுத்தப்பட்டு, நாளை தொடரும் என்று கேரள அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: