வியாழன், 13 ஆகஸ்ட், 2020

என்னை வழிநடத்தும் சபரீசன்: கு.க. செல்வம் போடும் வெடி!

என்னை வழிநடத்தும் சபரீசன்: கு.க. செல்வம் போடும் வெடி! மின்னம்பலம் : திமுகவின் தலைமை நிலையச் செயலாளராகவும் அக்கட்சித் தலைவர் ஸ்டாலினின் முன்னாள் தொகுதியான ஆயிரம்விளக்கு தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கு.க. செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 13) திமுக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

கு.க. செல்வம் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லி சென்று பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தார். ஆனால் அதன்பின் அவர் பாஜகவில் சேர வில்லை என்று மறுத்து வந்தார். மறுநாள் ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு பாஜகவின் தமிழக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த சிறப்பு நிகழ்வில் செல்வம் கலந்து கொண்டார்.

உடனடியாக அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கிய திமுக தலைமை, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தற்காலிகமாக நீக்கியது. நிரந்தரமாக ஏன் நீக்கக் கூடாது என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசுக்கு ஆகஸ்டு 8 ஆம் தேதி பதில் அளித்த செல்வம், “அடுத்த கட்சித் தலைவர்களை சென்று சந்திப்பது தவறு என்று திமுக சட்ட விதிகள் இல்லை. என்னிடம் விசாரணை நடத்தாமலேயே என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்னிடம் விசாரணை நடத்தி அதன்பிறகு நடவடிக்கை எடுங்கள்” என்று பதிலளித்தார். இந்த நிலையில்தான் இன்று(ஆகஸ்டு 13) தற்காலிகமாக நீக்கப்பட்ட கு.க. செல்வத்தை நிரந்தரமாக நீக்கி திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.    .. இதற்கிடையில் திமுகவை சேர்ந்த சில நீண்ட நாள் நண்பர்கள் செல்வத்திடம் பேசியுள்ளார்கள். “நீங்க திமுகவை விட்டு போனத நினைச்சு கூட பாக்க முடியல. தலைவர் (ஸ்டாலின்) கூட எவ்வளவு நெருக்கமா இருந்தீங்க. கிட்டத்தட்ட 20 வருஷம் அவருக்கு ரொம்ப நெருக்கமானவரு நீங்க. அண்ணி (துர்கா) வெளியில் போக வேண்டும் என்றால் கூட உங்க வீட்டில் இருந்துதான் கார் வரும். தலைவர் வீட்டுக் கார்ல சில இடங்களுக்குப் போறதுல சிக்கல் இருக்கறதால உங்கள் கார்லதான் அவங்க போய்விட்டு வருவாங்க. தலைவரோடும் அவங்க குடும்பத்தோடும் இவ்வளவு நெருக்கமான உங்களுக்கு பிறகு என்ன வருத்தம்?” என்று கேட்டுள்ளனர்..

அப்போது கு.க. செல்வம் அவர்களிடம்,"இதெல்லாம் வெளிய சொல்லணுமானு பார்த்தேன். ஆரம்பத்திலிருந்தே தலைவரோட மாப்ளை சபரீசன்கிட்ட நான் நல்லா பழகிட்டிருக்கேன். அன்பழகன் காலமான பிறகு மாவட்ட பொறுப்பாளர் போடறதுக்கு முன்னாடி இளைஞரணி சிற்றரசு நியமனம் பத்தி சபரீசன்கிட்ட தலைமையில கேட்டிருக்காங்க. அப்ப சபரீசன், ’சென்னை மேற்கு மாவட்டத்தில் சீனியர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தரை போடலாம். இல்லேன்னா... அவங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு சிற்றரசுவை நியமிக்கலாம். இல்லேன்னா வீணா சலசலப்புதான் வரும். அது கட்சிக்கு நல்லதில்லை’னு சொல்லிருக்காரு. ஆனா இதை உதயநிதி ஏத்துக்கல.

சென்னையில் நமக்கு ஒரு ஆள் வேணும். அதுக்கு சிற்றரசு சரியாக இருப்பார்னு அன்பில் மகேஷ் உதயநிதியிடம் சொல்ல அன்பில் மகேஷ் பேச்சைக்கேட்டு உதயநிதி வலியுறுத்தியிருக்கிறாரு. அதை ஸ்டாலினும் ஏற்றுக் கொண்டுவிட்டார். சபரீசன் கிட்ட நான் இதைப் பத்தி வருத்தப்பட்டு சொன்னவுடன், ‘தலைரைப் பார்த்து பேசுங்க’னு சபரீசன் சொன்னாரு. நானும் அப்பாயின்ட்மென்ட் கேட்டேன். வீட்டுக்கு வரச் சொல்லிட்டாங்க. ஆனா கொஞ்ச நேரத்தில தலைவர் வீட்டுக்கு வர வேணாம்னு போன் பண்ணி சொல்லிட்டாங்க. நான் மறுபடியும் சபரீசனுக்கு போன் பண்ணி, ‘தலைவர் வீட்டுக்குள்ள எங்க வேணும்னாலும் போயிட்டு வர்ற அன்பும் சுதந்திரமும் எனக்குக் கொடுத்திருந்தாங்க. ஆனா இப்ப கேட்டுக்குள்ள கூட வரக் கூடாதுன்னு சொல்றாங்க இது என்ன தம்பி’னு வருத்தப்பட்டேன்.

அப்போதான் சபரீசன், ‘நீங்க ஒரு முடிவு எடுத்துடுங்க’னு என்கிட்ட சொன்னாரு. டெல்லியில் சில நபர்களிடம் பேசினார். டெல்லியிலிருந்து சில புள்ளிகள் தமிழக பாஜக தலைவர் முருகனிடம் பேச, அதற்கு அப்புறம் முருகன்தான் என்னிடம் தொடர்புகொண்டு என்னை டெல்லிக்கு அழைத்துச் சென்றார். இதற்கெல்லாம் ஏற்பாடு செய்து என்னை அனுப்பி வைத்ததே சபரீசன் தான். பிஜேபியும் திமுகவும் எதிர்காலத்தில் கூட்டணி வைக்கிறார்களோ இல்லையோ ஆனால் ரொம்ப விலகிப் போக மாட்டார்கள்” என்று தான் திமுகவில் இருந்து பாஜகவுக்கு போனது பற்றி சொல்லியிருக்கிறார் கு.க. செல்வம்.

கு.க. செல்வத்தின் நட்பு வட்டத்தில் இந்தத் தகவல் பரபரப்பாக பேசப்பட இதுகுறித்து சபரீசன் தரப்பிடமே பேசினோம். “கு.க. செல்வமும், சபரீசனும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதை அடிப்படையாக வைத்து இதுபோன்ற தகவல்களை சிலர் பரப்ப முனையலாம். இதற்கெல்லாம் சபரீசன் என்ன செய்ய முடியும்?” என்று திரும்பக் கேட்கிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: