புதன், 12 ஆகஸ்ட், 2020

பெங்களூரில் கலவரம் வாகனங்கள் தீக்கிரை மூவர் உயிரிழப்பு நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் காயம் .. வீடியோ

மின்னம்பலம் :பெங்களூருவில் நேற்று நள்ளிரவு நடந்த வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புலிகேசி நகரைச் சேர்ந்தவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தி. இவரது தங்கை மகன் நவீன். நவீன் தனது முகநூல் பக்கத்தில் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிட்டு, பின்னர் அதனை நீக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.  இதுகுறித்து டி.ஜி.ஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்ததாகத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.         இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, புலிகேசி நகர் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் வீட்டருகே கூடிய ஒரு கும்பல் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், கற்களை வீசி ஜன்னல்கள், கதவுகளை உடைத்துள்ளது. வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதியிலிருந்து, அவதூறு கருத்தை பதிவிட்டதாக குற்றம்சாட்டப்படும் நவீன் அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தப்பிச் சென்றதாகத் தகவல் வெளியான நிலையில்,  அந்தக் கும்பல் அப்படியே காவல் நிலையம் நோக்கிச் சென்றுள்ளது.  காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ  வைக்கப்பட்டதில், 200 பைக்குகள் தீயில் சேதமடைந்தன, வன்முறையில் காவல் நிலையமும் சேதமடைந்துள்ளது.  

நேற்று இரவு டிஜி ஹள்ளி, கேஜி ஹள்ளி, புலிகேசி பகுதி ஆகிய இடங்களில்  வன்முறை வெடித்ததால், முதல்வர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் பேசி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார்,  லத்தி சார்ஜ், கண்ணீர் புகைக் குண்டு வீசி சம்பந்தப்பட்டவர்களை அங்கிருந்து கலைக்க முயன்றுள்ளனர். எனினும் தொடர்ந்து அப்பகுதியில் வன்முறை வெடிக்கவே, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதோடு, டிஜி ஹள்ளி, கேஜி ஹள்ளி பகுதிகளில் நடந்த வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது 60க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர்.  இரவில் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முகநூலில் அவதூறாக பதிவிட்ட நவீன் உட்பட, வன்முறையில் ஈடுபட்ட 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும்  பெங்களூரு காவல் ஆணையர் கமல்  பந்த் தெரிவித்துள்ளார்.  அதோடு பெங்களூர் முழுவதும் இன்று பொதுமக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டதோடு, டிஜி ஹள்ளி, கேஜி ஹள்ளி  ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள முதல்வர் எடியூரப்பா, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

-கவிபிரியா

கருத்துகள் இல்லை: