ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த தலைவர் ஒருவர் பேசுகையில், “டெல்லியில் உள்ள பிஜேபி தலைமை, தமிழகத்தின் எந்த பிஜேபி தலைவரையும் நம்புவதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் சுயநலமிகள் என்றே தலைமை கருதுகிறது. செல்வத்தை திமுகவில் இருந்து பிஜேபிக்கு எடுக்கும் நடவடிக்கை, தமிழகத்தில் ஒரு பிஜேபி தலைவருக்கும் தெரியாது. தமிழக பாஜக தலைவர் முருகனை தவிர, ஒருவருக்கும் விஷயம் தெரியாது.
செல்வத்தை பிஜேபியில் சேர்ப்பதால், பிஜேபிக்கு பெரிய பலமெல்லாம் வந்து விடப் போவதில்லை. இத்தகைய நடவடிக்கைகள் மூலம், திமுகவை உளவியல் ரீதியாக குலைக்க வேண்டும் என்பதே நோக்கம். திமுக போன்ற தமிழகத்தின் பெரிய கட்சியில் இருந்தே எங்களால் தலைவர்களை இழுக்க முடியும் என்பதையே இதன் மூலம் உணர்த்த விரும்புகிறோம்” என்றார்.
அந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சொல்வது உண்மையே. 2021 தேர்தலில், திமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தாலும், கட்சியினுள்ளே குழப்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
கலைஞர் மறைவுக்கு பிறகு, ஸ்டாலின் கட்சி தலைமையேற்பதில் எந்த சிக்கலும் எழவில்லை. பல வருடங்களாக, ஸ்டாலினை கலைஞர் தயார்படுத்தி வந்திருந்தார். ஒரே நாளில், ஸ்டாலின் தலைமை பொறுப்புக்கு வந்துவிடவில்லை. பல ஆண்டுகளாக இந்த இடத்துக்கு வருவதற்கு உழைத்தார். கலைஞரின் மகன் என்பதற்காகவே உயரத்துக்கு அழைத்து வரப்பட்டார் என்ற பெயர் வந்து விடக்கூடாது என்பதில் கலைஞர் கவனமாக இருந்தார். 1976ம் ஆண்டில் ஸ்டாலின் பொதுக்குழு உறுப்பினராக்கப்பட்டார். 1980ல் திமுக இளைஞரணியை தொடங்கினார் ஸ்டாலின். குறுகிய காலத்திலேயே, இளைஞரணியை ஒரு வலுவான அமைப்பாக ஸ்டாலின் உருவாக்கினார்.
1996ம் ஆண்டில்தான், ஸ்டாலின் சென்னை மேயராக்கப்பட்டார். பின்னர் உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என்று படிப்படியாகத்தான் வளர்ந்தார். இன்று, ஸ்டாலினின் தலைமையை கேள்வி கேட்க, கட்சியில் ஒருவரும் இல்லை.
ஆனால், உதயநிதி விவகாரம் அப்படி அல்ல. அவர் கட்சியின் மீது திணிக்கப்படுகிறார் என்பதே பெரும்பாலானோர் கருத்தாக இருக்கிறது.
2006 திமுக ஆட்சியில்தான் உதயநிதி ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் என்ற பெயரில், ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார். பின்னர் “ஒரு கல் ஒரு கண்ணாடி” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.
திமுகவில் நிலவும் சிக்கல்கள் குறித்து கருத்து தெரிவித்த டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர், இவ்வாறு கூறினார்.
“கருணாநிதி ஒரு அரசியல் சாணக்யர் என்பதில் சந்தேகம் இல்லை. அரை நூற்றாண்டாக தமிழக அரசியலை தன்னைச் சுற்றி சுழல வைத்தார். தன் வாழ்வில் எத்தனையோ சிக்கல்களை கருணாநிதி சந்தித்திருந்தாலும், அத்தனையிலும் அவர் வெற்றியடைந்தார். ஆனால் கருணாநிதியாலே சமாளிக்க முடியாமல் போனது அவரின் குடும்பத்தைத்தான். அவரின் 2006 ஆட்சியில் இது வெளிப்படையாக தெரிந்தது. மறைந்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமி, ஒரு முறை “ஏராளமான குடும்ப உறுப்பினர்களை கட்சியில் பதவிக்கு கொண்டு வந்தது கருணாநிதி செய்த பெரிய தவறு” என்று குறிப்பிட்டார்.
திமுகவில் பல அதிகார மையங்கள் உருவாக இது காரணமாக இருந்தது. இத்தகைய அதிகார மையங்கள் இயங்கியது கருணாநிதிக்கு தெரியுமா இல்லையா என்று புரியவில்லை. ஆனால், 2011ல் திமுக படுதோல்வி அடைவதற்கு இது ஒரு காரணமாக அமைந்தது.
இன்று கருணாநிதி சந்தித்த அதே சிக்கலை, ஸ்டாலின் சந்தித்துக் கொண்டிருக்கிறார். கட்சியின் எதிர்காலம் கருதி, ஸ்டாலின் ஒரு உறுதியான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். வேட்பாளர் தேர்வு முதல், கட்சி நிர்வாகிகள் நியமனம் வரை ஒவ்வொன்றிலும், ஸ்டாலின் குடும்பத்தினரின் தலையீடு இருப்பது ஒன்றும் ரகசியம் அல்ல.
திமுகவில், அன்பில் மகேஷ் மற்றும் உதயநிதி ஆகிய இருவரும் முக்கிய அதிகார மையங்களாக உருவாகி விட்டனர் என்பதை திமுகவின் மூத்த தலைவர்களே ஒப்புக் கொள்கின்றனர். இளைஞர் அணி அலுவலகமான அன்பகம், அறிவாலயத்தில் நுழையும் ஏணிப்படியாக உருவெடுத்துள்ளது. கு.க.செல்வம் திமுகவை விட்டு வெளியேறியதில், உதயநிதி மற்றும் அவர் நண்பர்களுக்கு பங்கிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. கு.க.செல்வம் பெரும் செல்வாக்கு உள்ள தலைவராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் பதவியில் உள்ள ஒரு எம்.எல்.ஏ என்பதை மறுக்க முடியாது. அன்பகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அறிவாலயத்தில் செயல்படுத்தப்படுகிறது என்ற கருத்து கட்சியினுள் வலுவாகிக் கொண்டிருக்கிறது.
கட்சியின் மூத்த தலைவர்களோடு ஸ்டாலின் விவாதங்களை அதிகரிக்க வேண்டும்.
மூத்த தலைவர்களோடு ஆலோசனை செய்வதோடு, அவர்களுக்கு உரிய மரியாதையை ஸ்டாலின் அளிக்க வேண்டும். அவர்களுக்கு உள்ள மனக்குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இதுதான், கட்சியை கட்டுக்கோப்பாக நடத்த உதவும்.
ஸ்டாலின் குறைகளை சுட்டிக்காட்டுவதை விரும்புவதில்லை என்பது கட்சியில் பலரிடையே நிலவும் கருத்து. கசப்பாக இருப்பினும், ஸ்டாலின் உண்மை நிலையை அறிந்தே ஆக வேண்டும். உண்மை நிலையை அறியாமல் போனதால்தான் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், திமுக முழு வெற்றிபெற முடியாமல் போனது. பெற்றிருந்தால் இன்று ஸ்டாலின் முதல்வர். இந்நிலை நீடித்தால் 2021 தேர்தலிலும் சிக்கல் ஏற்படும்.
அன்பகத்தின் செயல்பாடுகளுக்கு ஸ்டாலின் கடிவாளம் போடத் தவறினால், அவரின் தலைமையே நகைப்புக்கு ஆளாக நேரிடும்” என்றார் அந்த பத்திரிக்கையாளர்.
எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் இறந்தபிறகு திமுகவில் புதிய பிரச்சனைகள் தொடங்கின. அன்பழகன் கொரோனா தொற்றால் 10 ஜூன் 2020 அன்று மறைந்தார். திமுகவின் மாவட்ட செயலாளர் பதவி என்பது அதிகாரமிக்கது என்பதால் இந்தப் பதவியை அடைவதென்பது ஒவ்வொரு திமுக தொண்டனின் கனவாகவே இருக்கிறது. அன்பழகன் மறைந்த பிறகு இந்தப் பொறுப்புக்கு சில பெயர்கள் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தன. ராமலிங்கம், ஏழுமலை, அன்புதுரை, காமராஜ், மதன் மோகன், கணபதி, வேலு, பரமசிவம், கருணாநிதி, ராஜன், நந்தனம் மதி இவர்கள் எல்லோரும் கட்சிக்காக பல வருடங்களாக வேலை செய்தவர்கள். ஸ்டாலினின் ஆதரவாளரான அட்வகேட் ஜின்னாவும் கூட பந்தயத்தில் இருந்தார். ஆனால் அன்பழகனுக்குப் பிறகு அந்தப் பொறுப்பு யாரும் எதிர்பாராத விதமாக சிற்றரசுக்கு தூக்கிக் கொடுக்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் மற்றும் மகேஷ் பொய்யாமொழிக்கு தீவிர ஆதரவாளராக இருந்ததாலேயே சிற்றசுக்கு இந்தப் பதவி என்கிறார்கள் கட்சியினர். கட்சி அடுக்கில் பார்த்தால் சிற்றரசு ஒரு ஜூனியர் தான். அவரை விட அனுபவம் கொண்டவர்கள் பலரும் ஏமாற்றத்தில் இருப்பது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. சிற்றசுவுக்கு இந்தப் பொறுப்பு கொடுத்திருப்பதை தங்களுக்கு ஏற்பட்ட அவமானமாகவே இவர்கள் நினைக்கிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த திமுகவின் மூத்த உறுப்பினர் நம்மிடம் இப்படி சொன்னார், “சிற்றரசு கட்சிக்கு புது முகம். நேற்று வரை, கட்சியின் மூத்தவர்களின் கார் கதவுகளை திறந்து விட்டுக் கொண்டிருந்தார். நான் எப்படி அவருக்கு கீழே வேலை செய்ய முடியும்? இப்போது அவர் கார் கதவை நான் திறந்து விட வேண்டுமா? திமுகவைப் பொறுத்தவரை மாவட்ட செயலாளர் பதவி என்பது கெளரவமானது. நான் இதனை மாவட்ட கலெக்டர் பதவிக்கு ஒப்பாக சொல்வேன். இப்போது இந்தப் பதவிக்கான மரியாதையே குறைந்து போய்விட்டது”
நவம்பர் 2019ல் உதயநிதி ஸ்டாலினை சென்னை மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கு சிற்றரசு கட்சியில் பரிந்துரை செய்தார். இதை தகுதியாக வைத்து தான் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டதா?
திமுகவில் ஒருமாவட்ட செயலாளர் பதவியை ஒருவருக்குக் கொடுப்பதற்கு முன் பலவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். அவருக்கு ஆள் பலம், அந்தப் பகுதியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு, பேச்சுத் திறமை, ஒருங்கிணைக்கும் திறன், சாதி, அனுபவம், அரசியல அறிவு இதெல்லாம் முக்கியம். இதில சிற்றராசு எதிலுமே சேர்த்துக் கொள்ள முடியாது. மற்ற தொண்டர்களை அவர் எப்படி மரியாதையுடன் வேலை வாங்குவார்? ஒவ்வொருவரும் வெற்றியை நோக்கி பாடுபடுவது வரை சிற்றசுவின் நியமனம் பிரச்சனை தராது. ஆனால் தொலைநோக்குப் பார்வையில் பார்த்தால், மாவட்டச் செயலாளராக சிற்றரசுவின் நியமனம் என்பது சென்னையில் கட்சியை பாதிக்கும்” என்றார்.
கட்சித் தாவிய கு.க செல்வத்துக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து இப்படி சொல்கிறார்கள், “இந்த பிரச்சனை மட்டும் சுமூகமாகத் தீர்க்கப்பட்டிருந்தால் செல்வம் திமுகவிலேயே இருந்திருப்பார் என்கிறார்கள். கடந்த உள்கட்சி தேர்தலிலேயே கூட அன்பழகனுக்கு எதிராக போட்டியிடத் தயாராக இருந்திருக்கிறார் செல்வம். முக ஸ்டாலின் தான் கு.க செல்வத்தை சமாதனப்படுத்தி வருங்காலத்தில் பொறுப்பு தருவதாக அமைதிபடுத்தியிருக்கிறார்.
ஜெ.அன்பழகன் மறைந்ததும், பொறுப்பு தனக்குத் தரப்படுமென்றே நம்பியிருந்திருக்கிறார் செல்வம். சிற்றரசுவை மாவட்ட செயலாளராக நியமிப்பதற்கு முன்பு செல்வத்திடம் ஆலோசிக்கக் கூட இல்லை.
அதிகாரம் யாரிடத்தில் இப்போது இருக்கிறது என்று செல்வத்துக்கு தெரியும் என்பதால் செல்வம் தன்னுடைய அதிருப்தியை உதயநிதி ஸ்டாலினிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்தார். உதயநிதி அவரை சந்திக்கவேயில்லை. அதனால்தான் யாரும் எதிர்பாராத ஒரு காரியத்தை செய்துவிட்டார். பிஜேபி ஒரு பரபரப்புக்காக தன்னை ஒருவார காலம் வைத்திருந்து கருவேப்பிலை போல தூக்கிப்போட்டு விடும் என்று செல்வத்துக்கு தெரியும். ஆனால் உதயநிதியால் ஏற்பட்ட அவமானத்தை செல்வத்தால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. உதயநிதியை சந்திக்க முயன்று தோற்ற செல்வம் தனக்கு நெருக்கமானவர்களிடம் இப்படி சொல்லியிருக்கிறார், “என் வயசு என்ன உதயநிதி வயசு என்ன ? அவர் என்னைப் பார்க்ககூட மாட்டாரா? அப்புறம் நான் எதற்கு திமுகவில் இருக்க வேண்டும்? தொடர்ச்சியா அவமானப்படறதுக்கா?” என்றிருக்கிறார்.
The News Minute க்கு அளித்த நேர்காணலிலும் செல்வம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கு.க.செல்வம், திமுகவை விட்டு வெளியேறியது திமுக ஒரு கட்டுக்கோப்பான கட்சி என்ற பிம்பத்தை உடைத்துள்ளது. எப்படியாவது 2021 தேர்தலில் தமிழகத்தில் வலுவாக கால் பதிக்க வேண்டும் என்று தீவிர முனைப்போடு இருக்கும் பிஜேபி, தமிழகத்தின் அனைத்து கட்சிகளில் இருந்தும் தலைவர்களை இழுக்க பிரயத்தனம் செய்து வருகிறது. உளவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், வன்னியர் சமூகத்திலிருந்து தலைவர்களை இழுப்பதற்கு பிஜேபி முயற்சிகள் எடுத்து வருவதாக கூறினார். தமிழகத்தின் பெரிய சமூகமான வன்னியர் சமூகம் பிஜேபி வளர்ச்சிக்கு உதவும் என்று கட்சித் தலைமை நம்புவதாகவும் கூறினார்.
திமுகவில் உதயநிதி மற்றும் அன்பில் மகேஷின் ஆதிக்கம் இருப்பது அனைவரும் தெரிந்ததே. ஞாயிறன்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வந்த கட்டுரையும் இதையே சுட்டிக்காட்டுகிறது. இணைப்பு. முரசொலியில் வரும் கட்சி விளம்பரங்களில் பெரும்பாலானவை உதயநிதியின் படத்தை தாங்கியே வருகிறது. உதயநிதியை மூன்றாம் கலைஞர் என்று அழைத்து போஸ்ட்டர் அடிக்கும் அளவுக்கு கட்சிக்குள் உதயநிதிக்காக ஜால்ரா அடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இவையெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாமல் நடக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. சாலையெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் திமுக போஸ்டர்களில் கலைஞரை விட பெரிதாக உதயநிதி சிரித்துக் கொண்டிருப்பதை ஸ்டாலின் பார்த்திருக்க மாட்டாரா என்ன ?
இந்த குற்றச்ச்சாட்டுகளை அன்பில் மகேஷ் உறுதியாக மறுக்கிறார். “தலைவர் ஸ்டாலின் ஒருவர் பேச்சை கேட்டு மட்டும் முடிவெடுக்கும் தலைவர் அல்ல. திருச்சியில் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு நான் திருச்சி மாவட்ட விவகாரங்களைத்தான் கவனித்து வருகிறேன். இதர விவகாரங்களில் நான் தலையிடுவது அல்ல.
சிற்றரசுவை மாவட்ட செயலாளராக்க நான்தான் பரிந்துரைத்தேன் என்பது உண்மையல்ல” என்றார்.
அன்பில் மகேஷைப் போலவே, உதயநிதி ஸ்டாலினும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.
“சிற்றரசுவை மாவட்ட செயலாளராக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கவில்லை. கட்சி தொடர்பான முடிவுகளை தலைவர்தான் எடுப்பார். இளைஞர் அணியை தாண்டி எந்த முடிவுகளையும் நான் எடுப்பதில்லை. இளைஞர் அணியில் அமைப்பாளராக இருந்த சிற்றரசு மிகச் சிறப்பாக செயல்பட்டார்.
திமுகவை விட்டு வெளியேறிய அண்ணன் கு.க.செல்வம் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். குழந்தை மனதுடையவர் அவர். அவருக்கு என்ன நெருக்கடி என்று எனக்கு தெரியவில்லை. அவர் என்னை பார்க்க முயற்சித்தபோது, நான் மறுத்ததாக சொல்வதில் உண்மையில்லை. அவர் எப்போது வேண்டுமானாலும் என்னை தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கலாம். 45 நாட்களுக்கு முன்னதாக அவர் வள்ளுவர் கோட்டம் அருகே, கொரொனா தொடர்பாக நிவாரண உதவிகள் அளிக்கும் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார். அப்போது கூட நான், நீங்கள் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதிக்கு எம்.எல்.ஏ ஆகி மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றிட வேண்டும் என்றே பேசினேன். செல்வம் அவர் தொகுதியில் என்ன நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தாலும் நான் மறுக்காமல் சென்றிருக்கிறேன்.”
உதயநிதியும், அன்பில் மகேஷும் அவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்தாலும், கட்சியினுள் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது.
கு.க. செல்வம் திமுகவை விட்டு வெளியேறியது குறித்து கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் உதயநிதி, கு.க.செல்வத்தை குழந்தை போல சாக்லேட் கொடுத்து ஏமாற்றி அழைத்துச் சென்றுவிட்டனர் என்றார். அந்த குழந்தையைத்தான் திமுக ஆயிரம் விளக்கு தொகுதியில் நிற்கவைத்து எம்.எல்.ஏ ஆக்கினார்களா ? கட்சியின் ஒரு மூத்த உறுப்பினரை இப்படித்தான் விமர்சிப்பதா மு.க.ஸ்டாலின், திமுக என்ற கட்சியின் தலைவராக சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும். அவர் இளைஞர் அணி செயலாளர் கிடையாது. திமுக என்ற கட்சி, தமிழக வரலாறோடு பிணைந்துள்ளது. திராவிட இயக்கத்தின் கொள்கைகளை இன்றும் கட்டிக்காக்கும் ஒரே இயக்கம் திமுக மட்டுமே. அதிமுக தன் மீது காவிச் சாயம் பூசிக் கொண்டுள்ளதால், திராவிட இயக்க கொள்கைகளை திமுக மட்டுமே கட்டிக் காக்க வேண்டும்.
2021ல் ஸ்டாலின் சந்திக்க இருக்கும் தேர்தல், வழக்கமான தேர்தலாக இருக்காது. தத்துவார்த்தங்களின் மோதலாகத்தான் 2021 தேர்தல் அமையப் போகிறது. பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் என்ற இரு பெரும் இயக்கங்களை எதிர்த்து ஸ்டாலின் தேர்தலை சந்திக்கப் போகிறார். தேர்தல் நெருங்க நெருங்க, தீவிரமான மதவாதத்தை பிஜேபி கையில் எடுக்கும். ஒன்றுமில்லாத கந்தர் சஷ்டி கவச விவகாரத்தை பிஜேபி 25 நாட்களாக ஊதிப் பெரிதாக்கி வருவதிலிருந்தே நாம் இதை புரிந்துகொள்ள முடியும்.
ஸ்டாலின் பிஜேபியோடு மட்டுமல்லாமல், அதன் துணை அமைப்புகளான நீதித் துறை, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ, மத்திய உளவுத்துறை, வருவாய் புலனாய்வுத் துறை என்று பல்முனை தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டும்.
அதிமுக தேர்தலில் திமுகவை தோற்கடிக்க முயலும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்போ, திமுக என்ற இயக்கத்தை அடியோடு அழிக்க முயற்சிக்கும். பெரியார், அண்ணா போன்றோர் வளர்த்தெடுத்த திராவிட சித்தாந்தத்தையே துடைத்தெறிய ஆர்.எஸ்.எஸ் முயலும்.
இவை அனைத்தையும் மனதில் வைத்தே, ஸ்டாலின் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். ஒரு பிரசாந்த் கிஷோர் மந்திரக் கோலை வைத்து தேர்தலில் வெற்றியை தேடித் தருவார் என்று ஸ்டாலின் நினைத்தால் அவர் பெரும் தவறிழைக்கிறார் என்றே பொருள். ஒரு தேர்தல் விற்பன்னரால் தேர்தலில் வெற்றியை தேடித் தர முடியும் என்றால் அவர்களே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட மாட்டார்களா ?
2021 தேர்தல் திமுகவுக்கான தேர்தல் மட்டுமல்ல. தமிழ் மண், தமிழர் அடையாளம் பண்பாட்டுக் கூறுகளின் பாதுகாப்பு குறித்த தேர்தல். தமிழகத்தை மதவெறி மாநிலமாக்க முயலும் பாசிச சக்திகளுக்கு எதிரான தேர்தல். தமிழகத்தில் கலவரத்தை தூண்ட நினைக்கும் சக்திகளுக்கு எதிரான தேர்தல். சமஸ்கிருதத்தை திணிக்கும் சக்திகளுக்கு எதிரான தேர்தல். பாசிசத்துக்கு எதிரான தேர்தல்.
இதை முக.ஸ்டாலின் உணர வேண்டும்.
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
கலைஞர் கருணாநிதி உரை
செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக