புதன், 12 ஆகஸ்ட், 2020

1989-ஆம் ஆண்டு தேவி லாலின் உரையும் கனிமொழியும் .. . எச்ச ராஜாவுக்கு குட்டு வைத்த பி பி சி

BBC :  1989-ஆம் ஆண்டில் கனிமொழி, அவரது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு அருகே அமர்ந்தவாறு தேவிலாலின் உரையை மொழி பெயர்த்ததாக கூறப்படும் நிகழ்வாக சமூக வலைதளங்களில் உலா வரும் சில புகைப்படங்கள் குறித்த தகவலை பிபிசி ஆராய்ந்தது.  அந்த புகைப்படத்தின் அடிப்படையிலேயே ஹெச் .ராஜா தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டதால் அதன்
பின்னணியை அறிவது அவசியமானது.   அந்த படங்கள் அனைத்தும், தமிழ் திரைப்பட நடிகர் சிவகுமாரின் வீட்டில், அவரை திமுக தலைவர் கருணாநிதி, அவரது மகள் கனிமொழியுடன் சந்தித்தபோது எடுத்தவை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த படங்கள் எங்கு, எப்போது எடுக்கப்பட்டவை என்பதை அறிய, திரைப்பட நடிகர் சிவகுமாருடன் பிபிசி பேசியது.

அரசியல் கலப்பில்லாத வகையில் பேசுவதாக ஒப்புக் கொண்டு, அந்த படங்கள் எடுக்கப்பட்டதன் பின்னணியை சிவகுமார் விவரித்தார்.  நடிகர் சிவகுமார் விளக்கம்     "கலைஞர் கதை வசனம் எழுதிய பல படங்களில் ஒன்றான "பாடாத தேனீக்கள்" படத்தில் 1988-89 ஆண்டுகளில் நான் நடித்திருந்தேன். அப்போது அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு அமைந்தது".


"ஒரு நாள் எனது ஓவியங்களை வீட்டில் வந்து பார்க்க கனிமொழி விரும்பினார். பிறகு அவற்றை பார்க்க எனது தந்தையும் வரலாமா? என கனிமொழி கேட்டார். அதன்படியே, அடுத்த இரு நாட்களில் தனது குடும்பத்தாருடன் கலைஞர் எனது வீட்டுக்கு வந்து எனது ஓவியங்களை பார்வையிட்டார்."

"அப்போது கலைஞர் "ஒரு நடிகனின் ஓவியம் என்றால் ஏதோ பூசணிக்காயோ பொம்மையோ போட்டிருப்பார் என நினைத்தேன். என்ன இப்படி அருமையாக படைப்புகளை தீட்டியிருக்கிறீர்களே" என்று கேட்டார்.
மேலும், "எதற்காக நடிக்க வந்தாய்?" என கலைஞர் கேட்டபோது, "உங்களைப் போன்ற முக்கிய பிரபலங்கள் பார்க்க வருவார்களே" என்று பதில் அளித்தேன்.

பிறகு, "அனைத்து ஓவியங்களை பார்க்க எவ்வளவு நேரம் ஆகலாம்" என கலைஞர் கேட்டபோது, இன்னும் ஒரு மணி நேரம் தேவைப்படும் என்று கூறினேன்.
அப்போதுதான் கலைஞர், "இன்னும் சில மணி நேரத்தில் வி.பி. சிங்கின் கூட்டம் நடக்கவுள்ளது. அதில் பங்கேற்கச் செல்கிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும் கனிமொழியும் ஓவியங்களை தீட்டுவதில் ஆர்வம் உடையவர் என்பதால் அவரிடம், "ஓவியங்களை இருந்து பார்த்து விட்டு வருகிறாயா?" என கலைஞர் கேட்டபோது, "இல்லை அப்பா, நானும் வருகிறேன்" என கூறினார்.
"இப்படித்தான் அன்றைய தினம் அவர்கள் எனது வீட்டுக்கு வந்து ஓவியங்களை பார்த்து விட்டு வி.பி.சிங் கூட்டத்துக்குச் சென்றார்கள்" என்று சிவகுமார் 1989-ஆவது ஆண்டில் நடந்த, அந்த குறிப்பிட்ட நாளின் ஒன்றரை மணி நேர நிகழ்வை நினைவுக்கூர்ந்தார்.

இதையடுத்து ஹெச். ராஜாவின் டிவிட்டர் தகவல் குறித்த அவரது கருத்தை பெற பிபிசி தொடர்ச்சியாக முயன்றது. ஆனால், இந்த செய்தி வெளியிடப்படும் நேரம்வரை தமது தரப்பு விளக்கத்தை ஹெ. ராஜா தெரிவிக்கவில்லை.

~BBC Tamil Ka Amutharasan

கருத்துகள் இல்லை: