ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய சச்சின் பைலட்டிடமிருந்து, துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டன. இந்நிலையில், தனக்கு பெரும்பான்மையிருப்பதாக தெரிவித்த முதல்வர் கெலாட், அதை சட்டசபையில் நிரூபிக்க முடிவு செய்தார். கோரிக்கை. இதற்காக, சட்டசபையை கூட்ட வேண்டும் என கோரி, கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு, கெலாட் அரசு, நான்கு முறை கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஆக., 14ம் தேதி சட்டசபையை கூட்ட, கவர்னர் அனுமதி அளித்தார். இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, எம்.பி., ராகுல் ஆகியோரை, சச்சின் பைலட் சந்தித்துப் பேசினார். இதில் சமரசம் ஏற்பட்டது. கெலாட்டுடன் இணைந்து பணியாற்ற, சச்சின் பைலட் சம்மதித்தார்.
ஜெய்ப்பூரில், நேற்று முன்தினம் நடந்த, காங்., -
எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், கெலாட்டும், சச்சின் பைலட்டும்
பங்கேற்றனர். இதில், சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர முடிவு
செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக நடந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள்
கூட்டத்திலும், கெலாட் அரசு மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர
முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சட்ட சபை நேற்று காலை கூடியது.
அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை, அமைச்சர், சாந்தி தாரிவல் தாக்கல்
செய்தார். அவர் பேசுகையில், ''கர்நாடகா, மத்திய பிரதேச மாநிலங்களில்,
எதிர்க்கட்சிகளின் ஆட்சியை, பணம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி, மத்திய
பா.ஜ., அரசு கவிழ்த்து, ஜனநாயகத்துக்கு விரோதமாக ஆட்சியைப் பிடித்தது.
''ராஜஸ்தானிலும், அதேபோல், முயற்சித்தது. ஆனால், அதன் முயற்சி வெற்றி
பெறவில்லை,'' என்றார்.
விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர்
ராஜேந்திர ரத்தோர் பேசியதாவது: ராஜஸ்தானில், உட்கட்சி சண்டையால், காங்கிரஸ்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆட்சியை கவிழ்க்க, பா.ஜ.,
முயற்சித்ததாக, முதல்வர் கெலாட் குற்றம்சாட்டுகிறார். சமீபத்தில்,
காங்கிரசில், முதல்வர் - துணை முதல்வர் இடையே நடந்த மோதல் பற்றியும், துணை
முதல்வர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையும் எல்லாருக்கும் தெரியும்.
இப்போது, அவர்கள் சமாதானமாகி விட்டதாக நாடகமாடுகின்றனர். இவ்வாறு, அவர்
பேசினார்.
ஓட்டெடுப்பு:
இதையடுத்து,
சச்சின் பைலட் பேசியதாவது: என்னை குறிப்பிட்டு, எதிர்க்கட்சி தலைவர் ஏன்
பேசுகிறார் என தெரியவில்லை. நான் முன்பு அமர்ந்திருந்த இடம் கூட,
மாற்றப்பட்டு விட்டது. எதற்காக இந்த இருக்கையை, சபாநாயகரும், கொறடாவும்,
ஒதுக்கியுள்ளனர் என, இரண்டு நிமிடம் சிந்தித்தேன். இந்த பக்கம் ஆளும்
கட்சி; அந்த பக்கம் எதிர்க்கட்சி. எல்லையில் எனக்கு இருக்கை
வழங்கப்பட்டுள்ளது. எல்லையை பாதுகாக்க வலிமையான, திறமையான வீரர்களை தான்
அனுப்புவோம்.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் வலிமையான போர்
வீரனாகவே, எப்போதும் இருந்து வருகிறேன்; எப்போதும் இருப்பேன். எங்கள்
குறைகளை மருத்துவரிடம் தெரிவித்தோம். சிகிச்சைக்கு பின், இப்போது நலம்
அடைந்துள்ளோம். ஆட்சியும், கட்சியும் பாதுகாப்பாக உள்ளது. என்ன விலை
கொடுத்தேனும், அரசையும், கட்சியையும் பாதுகாப்பேன். இவ்வாறு, சச்சின் பைலட்
பேசினார்.
பின், நம்பிக்கை தீர்மானத்தின் மீது, குரல் ஓட்டு மூலம்,
ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றதாக
அறிவித்த சபாநாயகர் ஜோஷி, சபையை, 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நம்பிக்கை
தீர்மானத்தில் வெற்றி பெற்ற பின், முதல்வர் கெலாட் கூறியதாவது: நம்பிக்கை
தீர்மானத்தில் பெற்ற வெற்றி, மாநிலம் முழுதும் மகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம், கர்நாடகாவில் செய்த சதி திட்டத்தை,
ராஜஸ்தானிலும் அரங்கேற்ற நினைத்த பா.ஜ.,வுக்கு, சரியான தோல்வி
கிடைத்துள்ளது. இந்த வெற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க
நினைக்கும் சக்திகளுக்கு, எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இந்த வெற்றிக்கு,
ராஜஸ்தான் மக்களின் நம்பிக்கையும், எங்களின் ஒற்றுமையுமே காரணம். இவ்வாறு,
கெலாட் கூறினார்.
தீர்ப்பு ஒத்திவைப்பு:
ராஜஸ்தான் சட்டசபைக்கு, 2018ல் நடந்த தேர்தலில், பகுஜன் சமாஜ் சார்பில், ஆறு எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர். கடந்த ஆண்டு, செப்டம்பரில், இவர்கள் காங்கிரசில் இணைந்தனர். இவர்களை, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, பகுஜன் கட்சி விடுத்த கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் ஜோஷி, அவர்களை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களாக அங்கீகரித்தார்.இதை எதிர்த்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், பகுஜன், பா.ஜ., சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் கேட்டு, ஆறு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் சபாநாயகருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நீதிபதி, தீர்ப்பை, 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக