மதத்தின் பெயரில் யானைகள் சுரண்டப்படுவதைத் தடுக்கும் பணியில் கடந்த ஏழு ஆண்டுகளாக சங்கீதா ஈடுபட்டுள்ளார். “தனது சொந்த படைப்பு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதை எந்த கடவுளால் பொறுத்துக்கொள்ள முடியும்? இது முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாத ஒன்று” என்று அவர் பிபிசியிடம் கூறினார். கேரளாவில் பிறந்து, தற்போது கனடாவின் டொரோண்டோ நகரில் வசித்து வரும் ஆவணப்பட தயாரிப்பாளரான இவர், தான் இளம் வயத்தில் மற்ற சிறுவர்களை போன்று யானைகளை காணும்போதெல்லாம் மிகவும் உற்சாகமடைந்ததாக கூறுகிறார்.“என் சிறு வயதில் யானைகள் அணிவகுத்துச் செல்லப்பட்டதை கண்டபோது, அவை மிகவும் அழகாக இருப்பதாக நான் நினைத்தேன்” என்று சங்கீதா கூறுகிறார். இவ்வாறு அணிவகுத்து செல்லப்படும் யானைகள் அனுபவிக்கும் கோரமான விஷயங்களை சில காலத்திற்கு பின்னரே அவர் அறிந்தார்.
கொடூரமான காயங்கள்
பல ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்து வரும் அவர், தனது தந்தையின் முதலாமாண்டு நினைவு தினத்திற்காக 2013இல் இந்தியா வந்திருந்தார். அந்த பயணத்தின் போது, சங்கீதா யானைகளை விழாக்காலத்தில் அணிவிக்கப்படும் ஆபரணங்கள் மற்றும் உடைகள் இல்லாமல் பார்த்தபோது கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.
“பல யானைகள் இடுப்பில் பயங்கரமான காயங்களையும், புற்றுநோய் கட்டிகளையும் கொண்டிருந்ததுடன் அவற்றின் கணுக்காலில் இருந்து இரத்தம் வழிக்கொண்டிருந்தன. மேலும், அவற்றில் பல கண்பார்வையை இழந்திருந்தன.”
வேலைகளிலும் சர்க்கஸ் போன்ற நிகழ்வுகளிலும் ஈடுபடுத்தப்படும் விலங்குகள் குறித்த விடயங்கள் ஏற்கனவே பலரால் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், சங்கீதாவின் ஆவணப்படமான, ‘விலங்கிடப்பட்ட கடவுள்கள்’, கோயில் யானைகளின் துயர கதைகளை அம்பலப்படுத்துகிறது.
“அவை ஆதரவின்றி, கனமான சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்ததை பார்த்தபோது மிகவும் துயரகரமாக இருந்தது.”
நீடித்து நிற்கும் நற்பெயர்
இந்து மற்றும் பௌத்த மத கலாசாரங்கள் யானைகளுக்கு சிறப்பு மரியாதையை அளிக்கின்றன. பல நூற்றாண்டுகளாக, கோயில்களும் மடங்களும் மத சடங்குங்களை செய்ய அவற்றைப் பயன்படுத்துகின்றன. பக்தர்கள் கூட யானைகளிடமிருந்து ஆசீர்வாதம் பெறுகிறார்கள்.
சில யானைகளின் புகழ் அவை இறந்த பின்பும் பூமியில் நீடித்து நிலைக்கின்றன.
கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கோயிலுக்கு அருகில் கேசவன் என்ற யானையின் பெரியளவிலான கான்கிரீட் சிலையை நீங்கள் காணலாம். அதன் தந்தங்கள் கோயிலின் நுழைவாயிலை அலங்கரிக்கின்றன.
இரட்டை வேடம்
1976ஆம் ஆண்டு தனது 72ஆவது வயதில் உயிரிழப்பதற்கு முன்பு, கேசவன் என்ற அந்த யானை கோயிலை மூன்று முறை சுற்றிவந்ததாக கூறப்படுகிறது.
ஒரு கோயில் யானை இறந்துவிட்டால் அது பிரபலமானதோ, இல்லையோ சம்பவ இடத்தில் கூடும் மக்கள் அதன் இழப்பை எண்ணி வருந்துவது வழக்கம்.
“அவர்கள் யானைகளை சித்திரவதை செய்கிறார்கள், அவை இறந்த பிறகு உண்மையிலேயே வருத்தப்படுவதை போன்று முதலை கண்ணீர் வடிக்கிறார்கள்” என்று சங்கீதா கூறுகிறார்.
இந்து மதத்தை பின்பற்றும் தான் கோயில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுப்பதற்காக குரல் கொடுத்து வருவதாக கூறுகிறார்.
இந்தியாவில் வலுக்கட்டாயமாக பிடித்துவைக்கப்பட்டுள்ள 2,500 யானைகளில் ஐந்தில் ஒரு பங்கு கேரளாவில் உள்ளன. அவை கோயில்கள் மற்றும் தனிநபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
யானைகளின் கலாச்சார மற்றும் மத அடையாளத்தை சங்கீதா புரிந்துகொள்வதாக சங்கீதா கூறுகிறார்.
ஆனால், உயிரியல் மற்றும் சூழலியல் பட்டதாரி என்ற முறையில், யானைகள் மிகவும் புத்திசாலியான, உணர்ச்சிமிக்க சமூக விலங்கு என்று அவருக்கு தெரியும். யானைகள் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்காக காடுகளில் அதிக தூரம் பயணிப்பவை.
பட்டாசுகள்
கோடைகாலங்களில் கடுமையான வெப்பம் மிகுந்ததாக இருக்கும் கான்கிரீட் தளங்கள் மற்றும் கற்களால் கட்டப்பட்ட நடைபாதைகளில் நடப்பதற்கு யானைகள் மிகவும் சிரமப்படுகின்றன.
விழாக்காலங்களை குறிக்கும் இசைக்கருவிகள், உரத்த சத்தங்கள், கூட்டங்கள் மற்றும் பட்டாசுகள் உள்ளிட்டவற்றால் யானைகள் தூண்டப்படுகின்றன.
யானைகள் சொல்படி கேட்பதை உறுதிசெய்வதற்காக அவை துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றன.
“ஒரு கைப்பிடியுடன் இணைக்கப்பட்ட ஒரு கூர்மையான உலோகக் கொக்கி, கூர்மையான சங்கிலிகள் போன்ற கொடூரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி யானைகள் சித்தரவதைக்குட்படுத்தப்படுகின்றன” என்று சங்கீதா கூறுகிறார்.
செயலிழந்த தும்பிக்கை
தனது ஆவணப்படத்திற்காக யானைகள் வளர்ப்பு முதல் அவை கொடுமைப்படுத்தப்படுவது வரை சுமார் 25 மணிநேர காணொளியை இவர் படமாக்கியுள்ளார்.
கேரளாவின் திருவம்பாடி கோயில் நிர்வாகத்துக்கு சொந்தமான ராமபத்ரான் என்ற யானை மீது நடத்தப்பட்ட இரக்கமற்ற துன்புறுத்தல் சார்ந்த சம்பவங்களை விவரிக்கும் போது உணர்ச்சிவசப்படும் சங்கீதாவின் குரல் குரல் ஒருகட்டத்தில் தழுதழுக்கிறது.
“இந்த யானை அடிப்பட்ட தனது தும்பிக்கையை நீர் தொட்டியில் நனைப்பதைப் பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது. அதனால் தண்ணீரை கூட உறிஞ்சி குடிக்க இயலவில்லை.”
இந்திய விலங்குகள் நல வாரியம் கருணைக் கொலைக்கு பரிந்துரைக்கும் அளவுக்கு அதன் நிலை மிகவும் மோசமடைந்தது. ஆனால் அது கடைசி வரை கோவில் விழாக்களில் பயன்படுத்தப்பட்டது.
வகை வகையான கொடூரங்கள்
மற்றொரு யானையின் உடலிலிருந்து சீழும், இரத்தமும் வழிவதை இவர் பார்க்க நேர்ந்தது.
“இறுக்கமாக கட்டப்பட்ட சங்கிலியால் யானையின் சதைப்பகுதியிலிருந்து, இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. மனிதர்களால் இதை எப்படிச் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை” என்று அவர் கூறுகிறார்.
பணம் கொழிக்கும் தொழில்
“இந்த தொழிலில் பெரும் பணம் விளையாடுவதால் லாபி குழுக்கள் மிகவும் வலுவாக உள்ளன. ஒருசில யானைகள் ஒரு விழாவில் பங்கேற்பதற்காக ஏழு லட்சத்துக்கும் அதிகமான பணம் கட்டணமாக பெறப்படுகிறது.
குறிப்பாக, தெச்சிக்கோட்டுகாவ் ராமச்சந்திரன் என்ற யானை, கணிசமான வருமானத்தை ஈட்டுகிறது.
இது ஆசியாவின் மிக உயரமான சிறைப்பிடிக்கப்பட்ட யானையாக கருதப்படுகிறது.
திருச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் யானைகள் அணிவகுப்பின் போது இந்த யானை தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களை ஈர்க்கும் பிரபல யானையாக விளங்குகிறது. இந்த யானையை பற்றி ஒரு விக்கிபீடியா பக்கம்கூட உள்ளது.
இப்போது ராமச்சந்திரனுக்கு 56 வயதாகிறது. பகுதியளவு பார்வையற்ற இது மன அழுத்தம் காரணமாக பலமுறை மதம்பிடித்து ஓடியுள்ளதோடு, இதுவரை குறைந்தது ஆறு பேரைக் கொன்றுள்ளது. இருப்பினும், இந்த யானையை ஓய்வு பெற செய்ய வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் கடும் எதிர்ப்பை சந்தித்தன.
இந்த யானை இன்னமும்கூட கூட்டத்தை கவர்ந்தெழுகிறது.
“இந்த யானைகள் தீராத மனித விருப்பத்திற்கு சேவை செய்ய உருவாக்கப்பட்டவை அல்ல” என்று சங்கீதா தனது எதிர்ப்பை பதிவு செய்கிறார்.
அதிக பணம் சம்பாதிக்க புதிதுபுதிதாக திருவிழாக்கள் உருவாக்கப்படுகின்றன என்று அவர் கூறுகிறார்.
ஆசிய யானைகளில், ஆண் யானைகளுக்கு மட்டுமே தந்தங்கள் உள்ளன. அவைதான் கேரளாவிலுள்ள கோயில் நிகர்வாகத்தினரால் விரும்பப்படுகின்றன. ஆனால் பெண் யானைகள் தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
‘லட்சுமியை நேசிக்க தொடங்கினேன்’
2014ஆம் ஆண்டில், சிறைபிடிக்கப்பட்ட பெண் யானை ஒன்றை கண்ட சங்கீதா அதைக் கண்டு மயங்கினார். “நான் லட்சுமியைப் பார்த்த தருணத்திலேயே அதை நேசிக்க தொடங்கிவிட்டேன்.”
“நான் அவளைத் தொட்டேன். நான் என் கையை அவள் கழுத்துக்கு கீழே வைத்து அவள் மார்பைத் தொட்டேன். நான் அதைச் செய்தவுடனேயே, அவள் தனது தந்தத்தை என் கைமீது வைத்து வாசனையை நுகர்ந்தாள். யானைகள் மிகுந்த வாசனை உணர்திறன் கொண்டவை.”
சங்கீதா அந்த யானையின் மீது தண்ணீர் ஊற்றி, அன்னாசிப்பழங்களையும் வாழைப்பழங்களையும் கொடுத்ததார். இருவருக்குமிடையேயான பிணைப்பு வலுவடைந்தது. ஒரு வருடம் கழித்து லட்சுமியை சந்தித்தபோது சங்கீதா அதிர்ச்சியடைய நேரிட்டது.
“அதன் கண்களிலிருந்து கண்ணீர் வெளியேற்றுவதைக் கண்டு நான் பெரும் வருத்தத்திற்குள்ளானேன். அது தனது தந்தத்தை எடுத்து என் மீது உரசியது.”
ஒருமுறை லட்சுமி பாகனின் உணவை எடுத்து உண்டுவிட்டாள். அந்த கோபத்தில் பாகன் இரக்கமின்றி தாக்கியதில் அது குருடானது.
“நான் ஓராண்டுக்கு முன்பு பார்த்த பழுப்பு நிற கண் இப்போது ஒரு வடுவாக காட்சியளிக்கிறது. இது விலங்குகள் எப்படி துன்புறுத்தலுக்கும், சுரண்டலுக்கும் உள்ளாகுகின்றன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.”
லட்சுமிக்கு உண்மையில் பசியாக இருந்திருக்கும் என்றும் அதனாலேயே அது பாகனின் உணவை சாப்பிட்டிருக்க வேண்டுமென்றும் சங்கீதா கருதுகிறார்.
“கோயில்களில் யானைகளுக்கு சரிவர உணவளிப்பதில்லை. கோயிலுக்குள் அவை மலம் கழிக்கக் கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.”
சங்கீதா புகார் அளித்து, அந்த பாகனை பணிநீக்கம் செய்ய வைத்தார். அது லட்சுமியின் நிலையை இன்னும் மோசமாக்கிவிட்டது.
இதுமட்டுமின்றி, பாகன்களின் சொற்படி கேட்பதற்காக யானைகள் பல நாட்கள் கட்டிவைக்கப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது.
நீளும் சட்டவிரோத செயல்பாடுகள்
கேரளாவை போன்று பௌத்த மதத்தை தழுவும் இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் மத சடங்குகளில் யானைகள் உட்படுத்தப்படுவதாக சங்கீதா கூறுகிறார்.
குறிப்பாக, யானைகள் வற்புறுத்தப்பட்டு இனச்சேர்க்கைக்கு உட்படுத்தப்படுவது ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு சமம் என்றும் அவ்வாறு பிறக்கும் யானைகள் கிட்டத்தட்ட தனது வாழ்க்கை முழுவதும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வேலையையே செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
பெண் சாதனையாளர்களுக்கான இந்திய அரசின் உயரிய விருதை சங்கீதா பெற்றிருக்கிறார். ஆனால், அவரது சொந்த மாநிலத்தில் கருத்தொற்றுமை நிலவவில்லை.
சரியான உணவு, சிகிச்சை மற்றும் ஓய்வு கிடைக்கக் கூடிய புத்துயிர் முகாம்களுக்கு யானைகளை அனுப்ப கோயில் நிர்வாகத்தினர் தயக்கம் காட்டுகிறார்கள். இந்த நிலைப்பாடு மாற வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.
“நானும், என்னைப் போன்ற செயற்பாட்டாளர்களும் நேரடியாகவும், சமூக ஊடகங்களிலும் அச்சுறுத்தலுக்கும், கேலிக்கும் உள்ளாக்கப்படுகிறோம். ஆனால், இவற்றையெல்லாம் செய்வதால் நான் சோர்வடைந்துவிடுவேன் என்று அவர்கள் நினைப்பார்களேயானால் அது முற்றிலும் தவறானது. எங்களது குரல்கள் மென்மேலும் வலுவடைந்து வருகின்றன” என்று அவர் கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக