சமூக இடைவெளியோடும், மாஸ்க் அணிந்தும் ஏராளமான திமுக நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பிரசாந்த் கிஷோர் திமுகவுக்காக தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஆய்வில் கொங்கு பகுதியில் திமுகவுக்கு 3% வாக்குச் சரிவு ஏற்பட்டிருப்பதாக ரிசல்ட் கொடுத்திருப்பதை மின்னம்பலத்தில் கொங்கு சர்வே: அதிர்ச்சியில் ஸ்டாலின். என்ற தலைப்பில் செய்தியாக கொடுத்திருந்தோம். இந்நிலையில் ஏற்கனவே திமுகவை சோதித்துக் கொண்டிருக்கும் கொங்கு திமுக மீண்டும் பலவீனம் அடைய கூடாது என்ற காரணத்துக்காக நேருவை அனுப்பி கொங்கு திமுகவை ஸ்கேன் செய்து வரச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதன் அடிப்படையிலேயே கோவை திமுகவில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி நிர்வாகிகளின் கருத்தை மனம் திறந்து பேசும்படி கூறினார் நேரு.
ஆகஸ்டு 10 ஆம் தேதி கோவை மாநகர் கிழக்கு, மாநகர் மேற்கு ஆகிய மாவட்ட திமுகவினரின் ஆய்வுக் கூட்டத்தை திமுக அலுவலகத்தில் கூட்டினார் நேரு. அவரோடு திமுக கொறடா திண்டுக்கல் சக்கரபாணி, மதுரை மாவட்டச் செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோரும் வந்திருந்தனர். சக்கரபாணி கொங்கு திமுகவைப் பற்றி நன்கு அறிந்தவர் என்பதாலும் கவுண்டர் சமுதாயத்தினர் என்பதாலும் அவரை அழைத்து வந்திருப்பதாக கூட்டத்தில் கிசுகிசுத்துக் கொண்டனர். மதுரை மூர்த்தி நேருவுடன் சமீபநாட்களாக எங்கே போனாலும் பயணம் செய்கிறார். ‘ஏன் திண்டுக்கல்ல துணைப் பொதுச் செயலாளர் ஐபி இருக்காரு. அவரை விட்டுட்டு சக்கரபாணியைக் கூட்டிட்டு வந்திருக்காரு நேரு?’ என்ற குரல்களும் கூட்டத்தில் கேட்காமல் இல்லை.
நிகழ்ச்சியில் நேரு முதலில் பேசினார்.
“அடுத்து நாமதான் ஆட்சிக்கு வரப் போறோம். ஆனா கோயம்புத்தூர் உள்ளிட்ட கொங்கு திமுகவின் நிலைமை என்னானு உங்களுக்குத் தெரியும். கொங்கு திமுகவை வலிமைப்படுத்தணும். நம்ம கட்சியில இருக்கிற பிரச்சினைகளை தீர்க்குறதுக்கும் அதிருப்தியாளர்கள் இருந்திங்கன்னா அவங்களோட பேசறதுக்கும்தான் என்னை தலைவர் அனுப்பி வச்சிருக்காரு. சின்ன பிரச்சினையா இருந்தா பேசி சால்வ் பண்ணுவோம், பெரிய பிரச்சினையா இருந்தா நடவடிக்கை எடுக்கவும் தலைவர் உத்தரவாதம் கொடுத்திருக்காரு. சில பேர் மேல ஒருதலை பட்சமா தலைமைக்கு புகார் கொடுத்து அவங்களை நீக்க வச்சிட்டதாகவும் கேள்விப்பட்டேன். அப்படி யாராவது தவறா கட்சியிலேர்ந்து நீக்கப்பட்டிருந்தா அவங்களை மீண்டும் பொறுப்புக்கு போடுறதுக்கும் நான் பாக்குறேன். இப்ப நீங்க பேசலாம்” என்று அமர்ந்தார் கே.என். நேரு.
பீளமேடு வட்டச் செயலாளர் சேரலாதன் எழுந்தார். “கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் - மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. உங்களையெல்லாம் அதாவது தலைமையெல்லாம் ஏமாத்திக்கிட்டிருக்காருங்க. எதேச்சதிகாரத்தோட நடந்துக்குறாரு. கட்சிக்காரங்ககிட்ட சரியான நல்ல அணுகுமுறை இல்லை. அவர் நிறைய போராட்டம், ஆர்பாட்டம் நடத்துறதா வாட்ஸப், பேஸ்புக், ட்விட்டர்ல எல்லாம் வரும். ஆனா தலைமைய ஏமாத்துறாருனு நான் சொல்றேன்.,
கோவை மாநகராட்சியில 3600 கோடி ரூபாய் செலவில் 24 மணி நேரம் நீர் கொடுக்கும் திட்டம். அதை பிரான்ஸ் நிறுவனம் சூயஸ்தான் எடுத்திருக்குது. இந்தத் திட்டத்தைக் கண்டிச்சு பத்து போராட்டம் நடத்தியாச்சு. போராட்டம்னா என்ன.... ஒரு மணி நேரம் கோஷம் போட்டு ஆர்பாட்டம் பண்ணுவோம் அவ்வளவுதான். அத்தோட நிறுத்திக்கிறார் கார்த்திக். ஸ்ட்ராங்கா எதையும் செய்யல. நாம ஆளுங்கட்சிக்கிட்டயும் கம்பெனிகிட்டையும் பணம் வாங்கிட்டதா மக்கள் பேசறாங்க. எங்க ஏரியாவுல பீளமேடு பகுதி செயலாளர் இறந்துவிட்டார். அவருக்கு பதிலா தனக்கு வேண்டப்பட்ட ஒருவரை பகுதியா போட்டுக்கிட்டாரு. தகுதியுள்ள என்னை புறக்கணிச்சுட்டாரு” என்று அடுக்கிக் கொண்டே போனார் சேரலாதன். அவருக்கு பதவி கிடைக்கலங்கறதுக்காக இப்படி சொல்றாருங்க என்றனர் கார்த்திக்கின் ஆதரவாளர்கள்.
இந்த சலசலப்புகளையெல்லாம் குறித்துக் கொண்டார் கே. என்.நேரு.
கோவை மாநகர் மேற்கு ஆய்வுக் கூட்டத்தில் பொறுப்பாளர் முத்துசாமி நியமிக்கப்பட்டு சில மாதங்களே ஆகிறபடியால் அவர் மீது பெரிய புகார்கள் இல்லை. ஆனபோதும் கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல்கள் பற்றி விரிவாக விசாரணை நடத்தியுள்ளார் நேரு.
ஆகஸ்டு 11 ஆம் தேதி வடக்கு, தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட அவைத் தலைவர் கணேசமூர்த்திக்கும், அதிமுக எம்.எல்.ஏ. அருண்குமாருக்குமான நெருக்கம் பற்றி பேரூர் கழக செயலாளர் விஸ்வ பிரகாஷ் சொல்லச் சொல்ல நேருவே ஆடிப் போனார். அருண்குமார் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றிய தலைவராக இருந்தப்ப கணேசமூர்த்தி அங்க கவுன்சிலரா இருந்தவர். அப்ப ஏற்பட்ட நட்பு இன்னும் நீடிக்குது. கணேசமூர்த்தி எலக்ட்ரிகல்ஸ் பொருட்கள் சப்ளை பண்ற பிசினஸ் பார்க்குறாரு. அருண்குமார் எம்.எல்.ஏ. ஃபண்டுல நடக்குற திட்டங்களுக்கெல்லாம் இவர்தான் எலக்ட்ரிகல்ஸ் சப்ளை பண்ணிக்கிட்டிருக்காரு. இதெல்லாம் கேட்டா அதிமுகவோட சேர்ந்துக்கிட்டு என்னை பொய்வழக்கு போட்டு உள்ள வச்சிட்டாரு. பேரூராட்சியில கணேசமூர்த்தி கடைகள் எடுத்திருக்காரு. இப்படி இருந்தா திமுக காரன் எப்படி அதிமுகவை எதிர்க்க முடியும்? என்று விஸ்வ பிரகாஷ் கூற கணேசமூர்த்தியோ இதையெல்லாம் மறுத்தார். ஆனால் அருண் குமார் எம்.எல்.ஏ.வின் திட்டங்களுக்கு கணேசமூர்த்தியின் எலக்ட்ரிகல்ஸ் சப்ளை நடப்பதற்கும், கடைகள் விவகாரத்திலும் ஆதாரங்களை நேருவிடம் கொடுத்துவிட்டார் விஸ்வ பிரகாஷ்.
கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ் கட்சியினரை முறையாக அணுகுவதில்லை என்றும், எதையுமே தான் மட்டுமே முடிவுச் செய்வதாகவும் அதிகமான புகார்கள் கூறப்பட்டன. அதிகபட்ச புகார்களுக்கு ஆளானது தென்றல் செல்வராஜ்தான் என்கிறார்கள்.
இதுபோல் அதிமுகவினருக்கும் திமுகவினருக்குமான தொடர்பு பற்றி பலரும் நொந்து போய் பேசியிருக்கிறார்கள். கூட்டத்தின் முடிவில் பேசிய கே. என். நேரு,
“கோவை அதிமுகவுலயே வேலுமணியை போல்டா எதிர்த்துக்கிட்டு நிக்கிற முதல் ஆள் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன்தான். இவங்க அப்பா காலத்துலேர்ந்து நாப்பது வருஷமா செங்கல் சூளை தொழில் நடத்துறாங்க. அதை வேலுமணி குறிவச்சி நட்டம் பண்ணினாரு. அதனால சி.ஆர். ராமச்சந்திரன் தான் செங்கல் பிசினஸ் பண்ண பரம்பரை தோட்டத்தை வித்துட்டு, அந்த காசுல வேற இடம் வாங்கி விவசாயம் பண்றாரு. தொழில் நடத்துனாதானே தொந்தரவு பண்றே... தொழிலே வேணாம்னு வேலுமணியை எதிர்க்கறதுக்காக அந்த பூமியை வித்துட்டாரு. வேலுமணியை உண்மையாக எதிர்க்க கூடிய முதல் ஆள் ராமச்சந்திரன் தான். இது தலைவருக்கு தெரியும். இதேபோல நீங்க எல்லாரும் மாறணும். கட்சிக்காக உழைக்கணும், கட்சியை முதன்மையா கருதணும்” என்று குறிப்பிட்டார் நேரு.
முதல் நாள் ஆய்வுக் கூட்டம் முடிந்ததும் நேரு திமுகவில் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து சில வருடங்கள் முன் கோஷ்டி காரணம் உட்பட பல காரணங்களுக்காக நீக்கப்பட்ட முன்னாள் மாசெ வீரகோபால், நாச்சிமுத்து, மீனாலோகு உள்ளிட்டோரை அழைத்தார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு போன் போட்டு, இவர்களிடம் கொடுத்தார். அவர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘பதவி இல்லைங்குறதுக்காக வருத்தப்படாதீங்க. கோவை திமுகவுல என்ன நடக்குதுனு எனக்குத் தெரியும். உங்களுக்கு உரிய வாய்ப்பு கிடைக்கும். தொடர்ந்து கட்சிப் பணி செய்யுங்க. நான் பாத்துக்குறேன்” என்று ஸ்டாலின் ஆறுதலாகப் பேசியிருக்கிறார்.
நேருவின் ஆய்வுக் கூட்டங்களும், ஸ்டாலினின் ஆறுதல் பேச்சுகளும் கோவை திமுகவில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்று காத்திருக்கிறார்கள் நிர்வாகிகள்.
-ஆரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக