திங்கள், 20 ஏப்ரல், 2020

சென்னை: கொரோனாவால் நரம்பியல் நிபுணர் பலி!

மின்னம்பலம் : சென்னை: கொரோனாவால் நரம்பியல் நிபுணர் பலி!கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. தமிழகத்தில் 1,477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ள சுகாதாரத் துறை தமிழகத்தில் இன்னும் மூன்றாம்கட்டமான சமூகப் பரவல் இல்லை என்று கூறி வருகிறது. ஆனால், நாள்தோறும் வேலைக்குச் செல்லும் முதல்கட்ட பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் ஆகியோர் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ஒருவர் சென்னையில் உயிரிழந்துள்ளார். சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் மூத்த மருத்துவராகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்த இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது மகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நரம்பியல் நிபுணர் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 19) மாலை அவர் உயிரிழந்தார்.
அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், “நேற்று மதியம் வரை அவரது உடல் நன்றாகவே இருந்தது. திடீரென மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து அவரை மீட்டுக் கொண்டுவர முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கூறுகையில், “அவருக்குத் தொற்று நோய் எப்படி ஏற்பட்டது என்பதற்கான சோர்ஸ் தெரியவில்லை” என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநரையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருக்கிறது.
முன்னதாக, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயதான நெல்லூர் மருத்துவர் ஒருவர் சென்னையில் உயிரிழந்தார். இந்த நிலையில் இரண்டாவது மருத்துவர் உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மட்டும், 3 மருத்துவர்கள், 2 பத்திரிகையாளர்கள், 2 காவல் துறையினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: