வியாழன், 23 ஏப்ரல், 2020

மீண்டும் பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியுமா?


மீண்டும் பழைய இயல்பு வாழ்க்கைக்கு  திரும்ப முடியுமா?மின்னம்பலம்: கொரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்தும் மருந்துகள், தற்போதுதான் விலங்குகளை தாண்டி மனிதர்களுக்கு சோதனை செய்யும் நிலையை எட்டியுள்ளது. இங்கிலாந்தில் இன்று, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இந்த வைரஸ் தொற்றுக்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி முதற்கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த செய்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஊரடங்கால் தவித்துக் கொண்டிருக்கும் பலகோடி மக்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது. மருந்து கண்டுபிடிப்பது வெற்றிகரமாக முடிந்தால் மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பலாம் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்இந்தியா டுடே செய்தி நிறுவனத்திடம் பேசிய முன்னணி வைராலஜி நிபுணர் டாக்டர் இயன் லிப்கின், வைரசுக்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பது தான் அதிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி ஆகும் என்று கூறியுள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் அறிஞர்கள் இந்த வருட இறுதி, அதாவது டிசம்பர் மாதத்திற்கு உள்ளாக கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று நம்புகிறார்கள்.


இந்நிலையில் உலகின் முன்னணி மருத்துவ பத்திரிகையான ”’தி லான்செட்’ எடிட்டர் ரிச்சர்ட் ஹார்டன் இதுகுறித்து கூறும்போது, மருந்து கண்டுபிடித்த பின்னரும் பழைய வாழ்க்கைக்கு திரும்புவது அவ்வளவு எளிதானது அல்ல என்று கூறியுள்ளார். அவர் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திடம் கூறுகையில் ”மாற்று மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்த கொரோனா வைரஸ் நிரந்தரமாக உலகை மாற்றிவிடும். குறிப்பாக மனிதர்களுக்கு இடையிலான தொடர்பை இந்த வைரஸ் மாற்றப் போகிறது” என்று கூறியிருக்கிறார்.
”டிசம்பருக்குள் மருந்து கண்டுபிடிக்கப் படலாம் அல்லது கண்டுபிடிக்கப்படாமல் கூட இருக்கலாம். எனவேதான் நாம் நமது வாழ்க்கை முறையை மாற்றி உள்ளோம். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகமூடிகள் அணிந்து கொள்வது, வீட்டிலிருந்து வேலை செய்வது இவை அனைத்தையும் மருந்து கண்டுபிடித்தவுடன் விட்டுவிட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப முடியாது. நாம் ஒருவரோடு ஒருவர் உரையாடும் விதத்தில் இந்த நோய், நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதற்காக இந்த நோய் உலகிலேயே நிரந்தரமாக தங்கிவிடாது. சிறிது காலத்திற்கு பிறகு கண்டிப்பாக அது தானே அடங்கிவிடும். தற்போது நாடுகள் அவை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் உள்ளன. ஊரடங்கு முயற்சி வெற்றிபெற்றால் கண்டிப்பாக இந்த கொடூர நோய்க்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். இறுதியாக வைரஸ் பரவல் தடுத்து நிறுத்தப்பட்டு நாம் இயல்பான வாழ்க்கையை நோக்கி செல்ல துவங்கலாம். இயல்பானது என்றால் கொரோனா வருவதற்கு முன்பு இருந்தது போன்று முழுக்க இயல்பான வாழ்க்கை அல்ல. சமூக இடைவெளியை கடைபிடித்துக் கொண்டு முகமூடிகளை அணிந்து கொண்டு, நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட சுகாதாரத்தை பேணி நம்முடைய வாழ்க்கையை தொடரலாம் என்று கூறியுள்ளார்.
மருந்து கண்டறியப்பட்டால் எல்லாம் பழைய படி மாறி விடும் என சாமானிய மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் ரிச்சர்ட் கூறியிருக்கும் தகவல் மக்களிடையே சற்று பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
பவித்ரா குமரேசன்

கருத்துகள் இல்லை: