வெள்ளி, 24 ஏப்ரல், 2020

ஈழத்தமிழ் திரைப்பட முன்னோடி, தயாரிப்பாளர் திரு ஏ.ரகுநாதன் காலமானார் .. கொரோனா தொற்று..

இலங்கையின் ஆரம்ப கால தமிழ் திரைப்பட முன்னோடிகளில் ஒருவரான
திரு ஏ.ரகுநாதன் பாரிஸ் மருத்துவ மனையில் காலமானார்.
இவர் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாகவே காலமானார் என்று தெரிகிறது.
அமரர் ஏ.ரகுநாதன் அவர்கள் ஈழத்தமிழ் திரையுலகில் மிகபெரும் சாதனையை நிகழ்த்தியவர் ..
அவரது நிர்மலா திரைப்படம் பார்த்திருக்கிறேன். அந்த காலத்தின் சூழ்நிலை அவருக்கு கிடைத்த வாய்ப்பு போன்ற காரணிகளை தற்போது எண்ணிப்பார்க்கையில் உண்மையில் ஒரு பிரமிக்க தக்க சாதனையாகதான் தெரிகிறது.
வசூல் ரீதியில் பெரிய வெற்றியை பெறாத போதும் அவர் அடுத்த படமான தெய்வம் தந்த வீடு என்ற படத்தையும் தயாரித்து இருந்தார்.
அவர் காலத்தை முந்திக்கொண்டு கனவு கண்ட ஒரு முற்போக்கு இளம் கலைஞராகும். அவரது நிர்மலா திரைப்படத்துக்கு போட்டியாக  ஈழத்தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் "அரச கட்டளை" "பணமா பாசமா" "நான்" போன்ற பிரமாண்ட வெற்றி படங்களை திரையிட்டனர்.

 அப்போது  இலங்கை திரைப்பட விநியோகஸ்தர்கள் ஆக இருந்த மூவரும் தமிழர்களே!
அவர்கள்  கொஞ்சம் கூட நல்நோக்கம் அற்று   ஒரு உள்ளூர் திரைப்பட முயற்சியை துவம்சம் பண்ணுவதில்   அவ்வளவு ஆர்வம் காட்டினார்கள் , அப்படி ஒரு கோடரித்தனம்.
திரு ஏ.ரகுநாதனுக்கு ஏற்பட்ட இந்த நிலை ஏறக்குறைய இலங்கை தமிழ் திரைப்படங்களை தயாரித்த அத்தனை தமிழ் பட தயாரிப்பளர்களுக்கும் ஏற்பட்டது என்பது எல்லோரும் அறிந்ததே.
வாடைக்காற்று பொன்மணி போன்ற ஈழ தமிழ் படங்களுக்கு  நேர்ந்த கதி எல்லோரும் அறிந்ததே.!
 அமரர் வி பி கணேசனின் நான் உங்கள் தோழன் படத்துக்கும் இது போன்ற கதிதான் ஏற்பட்டது இதை பற்றி திரு மனோ கணேசன் (முன்னாள் அமைச்சர்) போன்றவர்கள் வாய்ப்பு வரும்போது அதிகம் கூறுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் .
 திரு ஏ.ரகுநாதன் தயாரித்த நிர்மலா திரைப்படம்தான் முதல் முதலில் ஓரளவாவது அதிக மக்களை கவர்ந்த ஈழத்து தமிழ் திரைப்படம் என்று எண்ணுகிறேன். ஒரு கலைஞராக அமரர் ரகுநாதன் அவர்கள் வெற்றி பெற்றவர்தான் .
அவரின் முயற்சி பலரை அந்த துறையில் ஈடு பட தூண்டியது என்பது மறைக்க முடியாத வரலாறு. அவரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது நினைவஞ்சலியை காணிக்கை ஆக்குகிறேன் ..

கருத்துகள் இல்லை: