திங்கள், 20 ஏப்ரல், 2020

கச்சா எண்ணை அடிமட்ட விலையை தொட்டிருப்பதால் மீண்டும் மேலே வந்துதான் ஆக வேண்டும்?

Karthikeyan Fastura : குருடாயில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு
மிக மோசமாக இன்று விழுந்து பேரல் 10.98 டாலருக்கு என்ற அளவில்
வந்திருக்கிறது. குருடாயில் என்பது உலக இயக்கத்திற்கான ரத்த ஓட்டம் போல. ரத்த ஓட்டம் குறைந்து காணப்படுவது பொருளாதாரம் ICUவில் இருப்பதைத்தான் காட்டுகிறது.
இந்த அளவுக்கு குறைவது பல வளைகுடா நாடுகளையும் ஐரோப்பிய நாடுகளையும் கடுமையாகத் தாக்குவதால் வருவாய் குறைந்து பெரும் பொருளாதார சரிவை தாக்குதல் ஏற்படுத்தும். இது அங்கு வேலை பார்க்கும் இந்தியர்களையும் சேர்த்து பதம் பார்க்கும். வேலைவாய்ப்பு இழப்புகள் தவிர்க்க முடியாது. விமானப் போக்குவரத்து தொடங்கியவுடன் அங்கு இருக்கும் பலரும் வெளியேற்றப்படலாம்.

ஏனென்றால் இந்த நாடுகளுக்கு migrant workersஐ சும்மா வைத்துக்கொண்டு சோறு போட முடியாது. மேலும் இந்த பொருளாதார புயலில் இருந்து மீள்வதற்கு குறைந்தது ஐந்து ஆண்டுகள் முதல் பத்தாண்டுகள் ஆகலாம் என்பதால் அத்தனை காலத்திற்கும் தங்களது வருவாயும் சேர்த்து அடிபடுவதால் தங்கள் குடி மக்களை காப்பாற்றுவதற்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டி இருப்பதால் இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்து நாட்டினரையும் குடியுரிமை பெற்றவர்களை தவிர அனைவரையும் வெளியேற்றி தான் ஆகவேண்டும்.
குருடாயில் விலை குறைவதால் இந்திய அரசிற்கு லாபம் தான்.இந்தியர்களுக்கு லாபமில்லை. அம்பானிக்கு சொல்லவே வேண்டியதில்லை. நிச்சயம் லாபம் தான். எப்படி என்று கேட்பீர்கள் முன்பு எழுதிய பதிவில் நான் இட்ட கமெண்ட்டை இங்கு கொடுக்கிறேன்

இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் 35%க்கு மேல் தனியார் வசம் உள்ளது. அதில் 60% ரிலையன்ஸ்க்கு சொந்தமானது . இது 2016 டேட்டா. அதன் பிறகு சில அரசு சுத்திகரிப்பு நிறுவனங்களை ரிலையன்ஸ் வாங்கியது. ஆக இன்னமும் அதிக மார்க்கெட் ஷேர் அவர்களிடம் இருக்கவே வாய்ப்பு அதிகம்.
கச்சா எண்ணை சுத்திகரிப்பு ஒரு Fixed Costல் நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக 20%(தோராயமாக) என்று சதவீதத்தில் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் அரசு விலையை குறைக்கும்போது இதுவும் குறையும். ஏற்றும் போது ஏறவும் செய்யும்.
உதாரணத்திற்கு குருடாயில்க்கு நிகராக பெட்ரோல் விலையை லிட்டர் ரூபாய் 50க்கு வந்தால் கூட ரிலையன்ஸுக்கு செல்லும் தொகை 15.8 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக குறையும். 33% லாபத்தை விட்டு கொடுப்பார்களா ? ஒரு ரூபாய் இதில் குறைந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் இழப்பு ஒருநாளைக்கு பெட்ரோலில் 70 கோடி ரூபாய்கள், டீசலில் 25 கோடிகள். வருடத்திற்கு கிட்டத்தட்ட 3600 கோடிகள் இழப்பு ஏற்படும். வெறும் ஒரு ரூபாய்க்கு. 5 ரூபாய் குறைந்தால் இதனை 5ஆல் பெருக்கி கொள்ளுங்கள். 18000 கோடிகள் ஒரு வருடத்திற்கு இழப்பு ஏற்படும். இது போக 1700 பெட்ரோல் பங்க்களை நாடு முழுவதும் திறந்திருக்கிறார்கள். ஒரு லிட்டரில் அவர்களுக்கு கிடைக்கும் ஷேர் 2.50பைசா அதிகமாக கிடைக்கும் என்பதால்.
ஏற்கனவே அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 30 சதவீதம் விழுந்திருக்கிறது என்பதால் குருடாயில் விலை சரிந்தாலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க விடமாட்டார்கள்.
பொதுவாக குருடாயில் விலை ஏறும்போது இன்ஃப்லேஷன் கூடவே ஏறும். இன்ஃப்லேஷன் ஏறும்போது ரூபாய் மதிப்பு கீழே விழும். ஆனால் இன்று இந்த இன்ஃப்லேஷன் கணக்கெல்லாம் தாண்டி பொருளாதார சங்கிலி உடைந்து போயிருக்கிறது என்பதால் பெட்ரோல் டீசல் விலையை குறைத்தால் கூட ரூபாய் மதிப்பு ஏறுவதற்கு வழியில்லை.
இதில் ஏதாவது நல்ல செய்தி உண்டா என்றால் பங்குச்சந்தையில் ஈடுபடும் எண்ணம் உள்ளவர்கள் குறிப்பாக தினசரி வர்த்தகத்தில் ஆர்வமுள்ளவர்கள் கமாடிட்டி சந்தையில் கவனம் செலுத்தலாம். குருடாயில் தனது அடிமட்ட விலையை தொட்டிருப்பதால் இது மீண்டும் கண்டிப்பாக மேலே வந்துதான் ஆக வேண்டும். இந்த சூழலில் கமாடிட்டி மார்க்கெட்டினை கற்றுக்கொண்டு இறங்கி முதலீடு செய்து லாபம் பார்க்கலாம். இதில் 50% ரிஸ்க் இருக்கிறது என்பதை இந்த இடத்தில் நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
பங்குச் சந்தையைப் பொறுத்தவரை இந்திய ஆயில் நிறுவனங்கள் பங்கு இந்த காலகட்டத்தில் மேலும் கீழும் சென்று வரும். ஏனென்றால் அவர்களுக்கு கிடைக்கும் லாப அளவு அதிகரித்தாலும் விற்பனை என்பது முன்னைக் காட்டிலும் பாதியாக உள்ளது. ஊரடங்கு கைவிடப்படும் போது தான் அந்தப் பங்குகளின் விலைகள் மேலே ஏறும். ஆகவே இரண்டாம் காலாண்டு முடியும்வரை காத்திருப்பது நல்லது

கருத்துகள் இல்லை: