செவ்வாய், 21 ஏப்ரல், 2020

குருடாயில் நெகட்டிவ் ... எத்தனை நாடுகள் , நிறுவனங்கள் திவாலாகப் ... தெரியவில்லை.

Karthikeyan Fastura : குருடாயில் நெகட்டிவ் தொட்டதால் பொருளாதாரம் தன் உயிர் மூச்சு விட்டு விட்டது என்று நான் கூறியதை ரொம்பவும் அதீதமாக
கூறியதாக நினைக்கலாம்.
ஆனால் எங்களுடைய மொபைல் ஆப்பிற்காக பலகாலம் இந்தத் துறையை அனுதினமும் கவனித்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் சொல்கிறேன் உலகப் பொருளாதாரம் இதுவரை இயங்கிவந்த விதிகளை உடைத்துவிட்டது. இனி இயங்கப் போகும் பொருளாதாரம் பல புதிய விதிகளை கொண்டு இயங்கி ஆகவேண்டும் என்பதால் அவ்வாறு கூறினேன்.
குருடாயில் ஜூன் மாத காண்ட்ராக்ட் 20 டாலரில் விற்கிறது என்பதால் இன்னும் இது முடியவில்லை என்று கருதமுடியாது. அதுவும் விழுகவே செய்யும். இன்று இப்போது வரை 15$ க்கு விழுந்திருக்கிறது. இன்று இரவு இன்னும் விழவே செய்யும். இந்த கான்ட்ராக்ட்டை வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை என்றும் கவலை மறந்து இருக்க முடியாது.
இது ஒன்றும் பெரியவிஷயமில்லை என்று நம்பும்
நண்பர் ஒருவர் இப்படி கூறியிருந்தார் //தக்காளி விற்கும் ஓரு வியாபாரி, கடைசி நேரத்தில் விற்காத தக்காளிகளை கீழே கொட்டிவிட்டுப் போவதைப் போலத்தான் இது. கொட்டுவதற்கு குப்பை அள்ளுபவர்களுக்கு கொஞ்சம் காசும் அவர் கொடுக்க வேண்டியிருந்தது என்பதே இந்த நெகட்டிவ் விலை.//

தக்காளி வியாபாரத்தில் இது சகஜம். ஆனால் குருடாயில் வியாபாரத்தில் இதுவே முதல் முறை. குருடாயில் விற்பனை என்பது பல நூற்றாண்டுகளாக இருந்த ஒன்று. அதில் இதுவரை எப்பொழுதும் நேற்று நடந்தது போல் நடந்ததில்லை.
மாற்று எரிசக்தி வளர்ந்து எல்லா வாகனங்களும் மின்சக்திக்கு மாறினால் கூட குருடாயில் ஜீரோவை தொடுவதற்கான வாய்ப்புகள் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு கிடையாது என்று கருதப்பட்டது. ஏனென்றால் குருடாயிலிலிருந்து எரி பொருட்கள் மட்டுமல்ல நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு மூலப்பொருளாக அது இருக்கிறது.
சென்ற நூற்றாண்டில் குரூட் ஆயில் வர்த்தகம் தான் உலகநாடுகளின் பொருளாதாரத்தை கட்டிக் காத்து வந்தது. அதுவே பல போர்களுக்கும் காரணமாக இருந்தது. 2010 வரை அமெரிக்காவின் பொருளாதாரம் குருடாயில் மட்டுமே அதிகமாக நம்பி வந்தது. பின்னர் அவர்கள் செல் கற்களைக் கொண்டு பெட்ரோலியப் பொருட்களை உருவாக்கும் வித்தையை அறிந்து கொண்ட பின்பு அவர்களே உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்கள். அதன் விளைவாக 2014ல் ஒரு பேரல் 140 டாலர்கள் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த போது அங்கிருந்து விலக ஆரம்பித்தது படிப்படியாக விழுந்து 50 டாலர்களை தொட்டது. அது தான் உலகப் பொருளாதாரத்தின் மீது விழுந்த முதல் அடி
ரஷ்யா மற்றும் சீனாவின் பொருளாதாரத்தை அடிவாங்க அமெரிக்கா இந்த அளவிற்கு அடிமாட்டு விலைக்கு இறங்கவும் வளைகுடா நாடுகளும் இதில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. சில ஐரோப்பிய நாடுகளும் தென்னமெரிக்க நாடுகளும் கூட இதில் மிகப்பெரிய பொருளாதார அடியை சந்தித்தது. அன்று முதல் குருடாயில் வர்த்தகம் ஆண்டு சராசரியாக 50 டாலர்கள் என்ற அளவில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சென்றுகொண்டிருந்தது.
பொருளாதார தேக்க நிலை இவ்வாறுதான் உருவாகியது. அன்று ஆரம்பித்த அந்த உலகப் பொருளாதார தேக்கமானது படிப்படியாக சரிந்து இந்த கொரோனா வீழ்ச்சியில் முற்றிலுமாக படுத்த படுக்கைக்கு வந்தது. இதற்கிடையில் பங்குச்சந்தை விழாமல் இருக்க செயற்கையாக ஊதிப் பெருக்கப்பட்டது. பல பொருளாதார நிபுணர்கள் 2016க்கு பிறகு எச்சரித்துக் கொண்டே வந்தார்கள்.
ஆனால் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக கொரோனா வந்து மொத்த உலகத்தையும் முற்றிலும் செயலிழக்கச் செய்து, போக்குவரத்து களையும் முடக்க செய்துவிட்டது. இது குருடாயில் வர்த்தகத்தின் தேவையை முற்றிலுமாக காலி செய்தது. இதற்கு நடுவில் OPEC நாடுகள் கேட்டுக்கொண்டும் ரஷ்யா உற்பத்தியை குறைக்காமல் வைத்தார்கள். வேறு வழி கிடையாது. அந்த நாட்டின் பொருளாதாரம் எண்ணெய் வர்த்தகத்தை மட்டுமே பெரிதாக நம்பியிருந்தது.
உற்பத்தியை குறைத்தாலும் கூட போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் குருடாயில் விலை இறங்கித்தான் ஆகவேண்டும். நேற்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா பிரச்சனை இனிமேல்தான் அதிதீவிரமாக இருக்கப்போகிறது ஆகையால் நாடுகள் தங்களுக்குள் இருக்கும் பிணக்குகளை விடுத்து நாட்டின் தலைவர்கள் அரசியல் செய்வதை விடுத்து மக்களை காக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்
அவர்கள் சொல்வதைப் பார்க்கும்போது இந்த போக்குவரத்து நிறுத்தம் என்பது இன்னும் ஒரு வருட காலம் நீடிக்கும் எனும்போது குருடாயிலின் தேவை அதற்கு ஏற்ற வகையில் தான் இருக்கும். அப்படிப் பார்க்கையில் இனிவரும் காலங்களிலும் குருடாயில் விலை ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருப்பதற்கான வாய்ப்பு இருக்கும். அல்லது ஒரு மாதம் இதன் விலை பூஜ்ஜியத்தையும் மறு மாதம் 10 டாலர்கள் என்ற வகையிலும் செல்லும்.
எப்படிப் பார்த்தாலும் குருடாயிலை முக்கிய வணிகமாக கொண்ட உலகநாடுகளின் தாக்குப்பிடிக்கும் திறன் குறைந்துபோகும். அவர்கள் மாற்றுவழிகளை சிந்திக்க வேண்டும். அப்படிப் பார்த்தாலும் இது மிகவும் நெருக்கடியான காலகட்டம் என்பதால் பெரிய பொருளாதார ஏற்றம் வந்துவிடாது.
இதன் எதிரொலியாக பல்வேறு நாடுகளின் கரன்சி மதிப்பு கடுமையாக சரியக்கூடும். நேற்று கரன்சி மார்க்கெட்டிலும் ஆயில் உற்பத்தி நாடுகளின் கரன்சி மதிப்பு விழுக ஆரம்பித்துவிட்டது. எனவே எண்ணெய் வர்த்தகத்தை மையமாகக் கொண்ட உலகப் பொருளாதாரம் என்பது இறந்துதான் விட்டது. உள்நாட்டுப் பொருளாதாரம் மட்டுமே அந்தந்த நாடுகளை இப்போது காத்துக் கொண்டு வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் இதுதான் நிலைமை. பின்னர் படிப்படியாக சரிசெய்யப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக புதிய உலகப் பொருளாதாரம் என்பது கட்டமைக்கப்படும்.
புதிய உலக பொருளாதாரத்தின் அடிப்படை கொள்கைகளில் குருடாயிலுக்காண முக்கியத்துவம் என்பது இருக்கப்போவதில்லை. அல்லது மிக மிக குறைவாக இருக்கும். கல்வி, கலை, மருத்துவம், தொழில்நுட்பம், ஆண்-பெண் விகிதாச்சாரம், பிறப்பு மற்றும் இறப்பு விகிதம், மக்களடர்த்தி இதை மையமாக வைத்து Indices புள்ளிகள் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஒரு நாட்டின் பொருளாதாரம், கரன்சி மதிப்பு இருக்கும்.
இதற்கு நடுவில் எத்தனை நாடுகள் எத்தனை நிறுவனங்கள் திவாலாகப் போகிறதென்று தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: