திங்கள், 6 ஏப்ரல், 2020

கொரோனா :இந்தியாவில் 30 லட்சம் பாலியல் தொழிலாளர்களின் நிலை என்ன தெரியுமா?

Malini Hema :; கொரோனா வைரஸ்: இந்தியாவில் இருக்கும் 30 லட்சம் பாலியல் தொழிலாளர்களின் நிலை என்ன தெரியுமா?
"சமூக இடைவெளி போன்றவற்றைப் பின்பற்றலாம். ஆனால் எங்களால் எங்கள் தொழிலை செய்ய முடியாமல் போகிறது. இதனால் எங்களுக்கு வருமானம் இல்லாமல் போகிறது" என்கிறார் நாசிக்கை சேர்ந்த ரேகா.
கொரோனாத் தொற்று பரவல் காரணமாக சிவப்பு விளக்கு பகுதியில் இருக்கும் பாலியல் தொழிலாளர்களின் வேலை நின்றுவிட்டது. முடக்கம் அறிவிக்கும் முன்னரே பாலியல் தொழிலாளர்கள் தாமாகவே முன் வந்து தொழிலை நிறுத்தி விட்டனர். வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாலியல் தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியா முழுவதும் சுமார் 30 லட்சம் பெண்கள் இந்தப் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

தொழில் இப்போது நின்றுவிட்டதால், பாலியல் தொழிலாளர்கள் வருமானத்தை இழந்தனர். இவர்களைச் சார்ந்து இருக்கும் சின்ன கடைகள் வைத்திருப்பவர்கள், ஏஜெண்டுகள் என அனைவரின் வருமானமும் நின்று விட்டது.
வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அத்தகைய உதவிகள் சென்று சேரும் கடைசி சமூகக் குழுவினராக பாலியல் தொழிலை நம்பியுள்ளவர்களே இருக்கிறார்கள் என்கிறார் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் நலனுக்காக இயங்கும் ஷ்ரம்ஜீவி சங்காதன் எனும் அமைப்பின் டாக்டர் ஸ்வாதி கான்.
இதனால் இந்தியா முழுவதுமுள்ள பாலியல் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தொண்டு நிறுவனங்களின் உதவியை எதிர்பார்த்துள்ளனர்.
"இந்தியப் பிரதமர் ஊரடங்கை அறிவிக்கும் முன்னரே, எங்கள் சிவப்பு விளக்கு பகுதியின் செயல்பாட்டை நிறுத்திவிட்டோம். பிறருக்கு நோய் பரவக்கூடாது என்பதால் அவ்வாறு செய்தோம். இப்போது எங்கள் குழந்தைகள் குறித்தும் நாங்கள் யோசிக்க வேண்டியுள்ளது" என்று பாலியல் தொழிலாளி ரேகா கூறுகிறார்.
ராணி கலா பிவண்டியை சேர்ந்த பாலியல் தொழிலாளி.
"இந்த பகுதியில் ஹெச்ஐவி மற்றும் காச நோய் உள்ள பலர் உள்ளனர். அவர்களைப் போல் இருப்பவர்கள் மருத்துவமனைக்கு செல்வது கடினமான ஒன்றாகும்" என்கிறார் ராணி. "அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து மருந்து அளித்து வருகிறோம். அவர்களில் யாருக்காவது உடல்நிலை மோசமானால் அவர்களுக்கு உதவ தொண்டு நிறுவனத்தின் ஆம்புலென்ஸ் வரும்", என்று கூறினார் ராணி.
சில தொண்டு நிறுவனங்கள் தினமும் இந்த பாலியல் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி கொண்டுள்ளது.
பசியால் யாரும் இறக்கக்கூடாது என்பதே எங்கள் லட்சியம். கொரோனா வைரஸ் பரவுவதை பார்க்கும்போது இன்னும் ஆறு மாதங்களுக்கு தேவையானவற்றை நாங்கள் தயார் செய்ய வேண்டும். வரும் நாட்களில் முடக்கம் முடிவு பெற்றாலும் சமூக விலகல் காரணமாக ஆறு மாதங்களுக்கு இந்த பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வேலையை செய்ய முடியாது என்கிறார் டாக்டர். ஸ்வாதி.
என்னுடைய வீட்டின் அருகில் ஒரு பெண் இருக்கிறார். அவர் வீட்டில் மொத்தம் எட்டு பேர். ஒரு பாக்கெட் உணவை அவர் எப்படி எட்டு பேருக்கு கொடுப்பார்? இறுதியில் நான் தான் அவருக்கு 10,000 ரூபாய் கடன் தந்தேன். எங்களுக்கு வேறு வழி இல்லை. எங்களுக்கு நாங்களே உதவி செய்து கொள்கிறோம்.
இந்த பகுதியில் வாழும் நிறைய பேருக்கு தங்க வேறு இடம் இல்லை. சிலர் மற்றவர்களுடன் சேர்ந்து ஒரு அறையில் வாழ்கின்றனர். சிலர் ஹாலில் தங்கியுள்ளனர். அப்படி வாழ்வது ஆபத்துதானே எனக் கேட்கிறார் ரேகா.
அசாவரி தேஷ்பாண்டே பிரவார் மருத்துவ முகாமின் ஒருங்கிணைப்பாளர். அவரின் நிறுவனம் நாசிக்கில் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து மற்றும் தேவையான பொருட்களை வழங்குகிறது.
இந்த சூழலில் இவர்கள் தங்கள் வேலையை செய்யத் தொடங்க இன்னும் பல மாதங்கள் ஆகும். இச்சூழலில் சில நிறுவனங்கள் இவர்களுக்கு வேறு சிறு தொழில் கற்றுகொடுக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் வருவாய் ஈட்டலாம்.
அவர்களுக்கு கைத்தொழில் கற்று தந்துக்கொண்டிருக்கிறோம். காகிதப்பைகள் எப்படி செய்வது என கற்று தருகிறோம். முகக்கவசம் செய்வதையும் கற்று தருகிறோம். இதற்காக நாங்கள் முதலில் மக்கள் நலத்துறையோடு இணைந்தோம் என அசாவரி கூறுகிறார்.
டாக்டர் ஸ்வாதியும் இதேபோன்ற அனுபவத்தைதான் கூறுகிறார். இவர்கள் தற்போது 24 மணி நேரமும் வேலையில்லாமல் வீட்டில் உள்ளனர். இவர்களின் பணவரவு நின்று விட்டது. இதனால் மன உளைச்சலில் இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஆங்கிலம் பேச மற்றும் வேறு சில கலைகளும் கற்று தரப்படுகிறது.
ஆங்கிலம் கற்று கொடுப்பதற்காக ஒருவர் எங்கள் குழுவில் இருக்கிறார். இதற்கு முன்பும் இவர்களுக்கு இவ்வாறு கற்று கொடுக்க முயற்சித்துள்ளோம். ஆனால் அப்போது அவர்கள் அதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் இப்போது கவனம் செலுத்துகின்றனர் எனக் கூறுகிறார் டாக்டர் ஸ்வாதி.
அனகா ஃபாடக்,
பிபிசி வழியாக

கருத்துகள் இல்லை: