புதன், 8 ஏப்ரல், 2020

பெப்சிக்கு கிடைத்த நிதியுதவி எவ்வளவு: ஆர்.கே.செல்வமணி

பெப்சிக்கு கிடைத்த நிதியுதவி எவ்வளவு: ஆர்.கே.செல்வமணி
மின்னம்பலம் : பெப்சி தொழிலாளர்களுக்கு எவ்வளவு நிதியுதவி கிடைத்துள்ளது என்ற விவரத்தை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கிற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத்துறையினர், திரைப்பட வணிகம் சார்ந்த பல்வேறு தரப்பினர் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மார்ச் மாத இறுதியிலேயே படப்பிடிப்புகளை பெப்சி சங்கத்தினர் வைரஸ் தொற்றின் தீவிரத்தைக் கருதி நிறுத்தினர். இதனால் புதிய படங்களின் படப்பிடிப்பு, சீரியல்களின் படப்பிடிப்பு என அனைத்தும் நிறுத்தப்பட்டன. உலகெங்கிலும் நிகழ்ந்து வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன.
தமிழ்த் திரைப்படத் துறை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. வெளியீட்டுக்குத் தயாராக இருந்த நிறையத் திரைப்படங்கள் வெளியிட முடியாமலும், படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த திரைப்படங்கள் நிறுத்தப்பட்டதால் பல தொழிலாளர்களின் நிலை மோசமாகவுள்ளது. குறிப்பாக தினசரி தொழிலாளர்கள் எப்போது இயல்புநிலை திரும்புமோ என இந்த அசாதாரண சூழ்நிலையை கடக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
> எனவே தினசரி தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதேபோல் தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் கடிதமும் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரஜினி, அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்தனர். சிலர் அரிசி மூட்டை போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தந்து உதவி செய்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது இந்த உதவிகள் தொடர்பாக இன்று (ஏப்ரல் 8) பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி. அச்சந்திப்பில் முதலாவதாகத் தமிழக மக்களுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து தொடர்ந்து பேசிய செல்வமணி, “நிதியுதவி கோரி திரையுலகைச் சேர்ந்த அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதற்கு 2 கோடி 45 லட்ச ரூபாய் நிதியாக உதவி செய்துள்ளனர். 2400 அரிசி மூட்டைகள் உதவியாகக் கிடைத்துள்ளன. 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொரு சங்கத்துக்கும் 100 பேரை வரவழைத்து சமூக இடைவெளி விட்டு உதவிகள் செய்து வருகிறோம். இதுவரைக்கும் 15 ஆயிரம் பேருக்கு உதவி செய்திருக்கிறோம். இன்னும் 10 ஆயிரம் பேருக்குத் தேவைப்படுகிறது. ஒரு நபருக்கு 25 கிலோ அரிசியும், 500 ரூபாய் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கும் அளித்து வருகிறோம்.
25 ஆயிரம் பேருக்கும் கொடுப்பதற்கு 3.75 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. 2 கோடி 45 லட்ச ரூபாயை வைத்து முதலில் கொடுத்து வருகிறோம். இதர நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உதவி செய்வதை வைத்து இதை முடிக்கவுள்ளோம். அனைத்து உறுப்பினர்களுக்குமே இந்த உதவியைச் செய்வதாகக் கூறியுள்ளோம். அதை நிச்சயமாக இன்னும் 2 - 3 நாட்களுக்குள் முடித்துவிடுவோம்” எனக் கூறினார்.
மேலும் உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசிய அவர், “ரஜினி, அஜித், சிவகுமார் குடும்பத்தினர், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி எனத் தொடங்கி உதவி செய்த அனைவருக்கும் நன்றி. நிதியுதவி அளித்தவர்களில் திரையுலகைச் சேர்ந்த ஒருவர் தனது பெயரை வெளியே சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் 25 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். பசிப் பிணியைப் போக்கிய அனைவருக்கும் நன்றி. இது சாதாரண விஷயமல்ல. இந்தப் புண்ணியம் அனைத்துமே உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும்தான்.
உயர்ந்த நிலையில் இருக்கும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்குமே வேராக இருப்பது திரைப்படத் தொழிலாளர்கள்தான். இந்த வேருக்கு இப்போது தண்ணீர் ஊற்ற வேண்டும். இன்னும் 9 ஆயிரம் பேருக்கு உதவிகள் தேவை. அனைத்துத் திரையுலகினருமே உதவ வேண்டும். எவ்வளவு பணம் என்பது முக்கியமில்லை, மனம் தான் முக்கியம். உதவிகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் ஆர்.கே.செல்வமணி.
-முகேஷ் சுப்ரமணியம்

கருத்துகள் இல்லை: