திங்கள், 6 ஏப்ரல், 2020

ஊரடங்கை நீட்டிக்க கோரும் தெலுங்கானா முதல்வர்


tamil.oneindia.com : ஹைதராபாத்: கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை இன்னும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸுக்கு உலக நாடுகள் முழுவதும் மருந்து கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வரும் நிலையில், அந்த கொடிய நோயின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் இந்தியா உட்பட பல நாடுகளில் லாக்டவுன் கொண்டு வரப்பட்டுள்ளது. மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இப்போது எழுந்துள்ளன.;
இது தொடர்பாக பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பொருளாதாரத்தை எப்போது வேண்டுமானாலும் மீட்டுவிடலாம் ஆனால் பிரிந்த உயிரை மீட்க முடியாது என்றும், மனித உயிர் விலைமதிப்பற்றது எனவும் தெரிவித்துள்ளார்.

 கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஊரடங்கு ஒன்று தான் இப்போது இருக்கும் மிகச்சிறந்த ஆயுதம் என்றும், வேறுவழியில்லாததால் இதனை மக்கள் பொறுத்துக்கொண்டு வீடுகளில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.


நாளை மறுதினம் நாடாளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ள நிலையில் தெலுங்கானா முதல்வர் இந்த கோரிக்கையை விடுத்திருக்கிறார். இதனால் சந்திரசேகர் ராவ் கூறியப்படி ஊரடங்கை மேலும் நீடிப்பது தொடர்பாக அந்த கூட்டத்தில் விவாதிக்க மிக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக ஊரடங்கை தேசிய அளவில் மேலும் நீட்டிக்க வேண்டும் எனக் கூறியிருப்பவர் சந்திரசேகர் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு பலவீனமான முறையில் உள்ளதால் லாக்டவுன் மட்டுமே கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான சிறந்த ஆயுதம் என கே.சி.ஆர்.சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: