திங்கள், 6 ஏப்ரல், 2020

1972ஆம் ஆண்டிலேயே அனைத்து தமிழக கிராமங்களும் மின் இணைப்பு

Muralidharan Kasi Viswanathan : TNEB - Powering the Progress of Tamilnadu
எம். பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவுக்குவந்து, முதல்வராக சி.என். அண்ணாதுரை முதல்வரானார். 1968ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 32100 கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 1971ன் இறுதியில் 48,717 கிராமங்களுக்கு மின் இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. 5, 73, 951 பம்ப் செட்களுக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டுவிட்டது. அதாவது மூன்றே ஆண்டுகளில் 16,000 கிராமங்கள் மின் இணைப்பைப் பெற்றன.
மீதமிருந்த கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்க 71-72ல் 9000 கிராமங்களுக்கும் 72-73ல் 7600 கிராமங்களுக்கும் மின் இணைப்புக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 71 ஏப்ரல் முதல் டிசம்பருக்குள் 10, 272 கிராமங்களுக்கும் 44,019 பம்ப் செட்களுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்த அனைத்து கிராமங்களும் மின் இணைப்பைப் பெற்றுவிட்டன.
(இப்போது தமிழ்நாட்டில் மின் இணைப்பு இல்லாத கிராமங்கள் இல்லையா என்றால், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன என்பதுதான் பதில். ஆனால், அவை மின் இணைப்பு வழங்க முடியாதவை அல்லது தேவைப்படாதவை.)

அந்த காலகட்டத்தில் பல தனியார் மின் விநியோக நிறுவனங்கள் இயங்கிவந்தன. அவற்றையெல்லாம் தகுந்த நிதி ஒதுக்கீடு செய்து, தொடர்ந்து தமிழக அரசு தேசியமயமாக்கிவந்தது.
1970ஆம் ஆண்டில் மட்டும் மாயவரம், மன்னார்குடி, திருவாரூர் பகுதிகளில் மின் விநியோக நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன. அதே ஆண்டில், கடம்பாரை, பாண்டியார் - மோயார் , மேல் மணிமுத்தாறு, கீழ் காவிரி, குன்னூர் - கல்லார், கீழ் மோயார், நடுவட்டம் - சோழட்டிபுழா புனல் மின் நிலையங்களுக்கான ஆய்வுப் பணிகள் நடத்தப்பட்டன.
பசுமைப் புரட்சிக்கு பிந்தைய அந்த காலகட்டத்தில் விவசாய பம்ப் செட்களுக்கு மின் இணைப்பு தருவது மிக முக்கியமானதாக இருந்தது. மூன்றாவது ஐந்தாண்டு திட்ட காலத்தின் (1961-66) இறுதியில் தமிழ்நாட்டில் 2,56,594 பம்ப்செட்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், நான்காவது ஐந்தாண்டு திட்ட கால இறுதியில், அதாவது 1971 மார்ச்சில் இரு மடங்குகளுக்கும் மேலாக அதிகரிக்கப்பட்டிருந்தது. அதாவது 5,30,002 பம்ப்செட்கள் மின் இணைப்பை பெற்றிருந்தன.
1971 ஜனவரி 31ஆம் தேதிவாக்கில் இந்தியாவில் இருந்த பம்ப்செட்களின் எண்ணிக்கை 15.65 லட்சம். அதில் தமிழகத்தில் மட்டும் 5.14 லட்சம் பம்ப் செட்கள் இருந்தன. அதாவது இந்தியாவில் மின் இணைப்பு பெற்ற பம்ப்செட்களில் 3ல் ஒன்று தமிழ்நாட்டில் இருந்தது.

கருத்துகள் இல்லை: