வெள்ளி, 10 ஏப்ரல், 2020

திருவிழாக்கள், ஊர்வலத்திற்கு அனுமதியா?

திருவிழாக்கள், ஊர்வலத்திற்கு அனுமதியா?minnambalam.com :ஊரடங்கு காலத்தில் திருவிழாக்கள், ஊர்வலங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதோடு, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் நாட்களில் ஈஸ்டர் பண்டிகை, தமிழ் வருடப் பிறப்பு, கேரளாவில் விஷு ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படும். மேலும், தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஊர்களில் சித்திரை மாதத்தில்தான் திருவிழாக்கள் நடைபெறும்ஊரடங்கு ஏப்ரல் 14ஆம் தேதியுடன் முடியவுள்ளதால் அதற்கடுத்து வரும் நாட்களில் திருவிழா போன்றவற்றிற்கு அனுமதி கேட்டு காவல் துறையினரிடம் மனுக்கள் குவிந்தன. எனினும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன. இதனிடையே பல இடங்களில் காவல் துறைக்கு தெரியாமல் இரவோடு இரவாக திருவிழாவை நடத்தி முடிக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கும் காலகட்டத்தில் எந்த விழாக்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், “ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த மாதத்தில் எந்த சமூக/மத கூட்டங்கள், ஊர்வலங்கள், திருவிழாக்கள் போன்றவைகளுக்கோ, தனிநபர் சார்ந்த விழாவுக்கோ அனுமதிக்க கூடாது, அதனை கட்டுப்பாடுடன் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மத்திய உள் துறை இணைச் செயலாளர் புன்யா சாலியா ஸ்ரீவத்சா தெரிவித்தார்.
எழில்

கருத்துகள் இல்லை: