செவ்வாய், 7 ஏப்ரல், 2020

உழவில்லா விவசாயம்.. வீட்டுத் தோட்டம் - 2

Farm to Table : வீட்டுத் தோட்டம் - 2
உழவில்லா விவசாயம்
"வீட்டுத் தோட்டம் என்பது நிலத்தை கொத்தி உழுது, புற்களை செருக்கி, தினமும் விளக்குமாறு கொண்டு கூட்டி மணற்தரையாக்குவது அல்ல" என்று கடந்த பதிவில் குறிப்பிட்டு இருப்பதால் அதிலிருந்தே இந்த பதிவையும் ஆரம்பிக்கலாம்.
நாம் இயந்திரங்களின் துணையின்றி தோட்டங்கள் செய்த காலத்தில், முதல் வேலையாக பலர் சேர்ந்து மண்வெட்டிகளால் புற்களை செருக்கி அதை வாரிக் குவித்துவிடுவோம். பின்னர் நிலத்தை ஆழமாக கொத்தி அதன் பின்னர் அதை மீண்டும் இரெண்டாவது உழவு போன்று மென்மையாக கொத்திய பின்னரே நாற்று நடவு செய்வோம். நீர் பாய்ச்சுவதற்கு ஏதுவாக பாத்திகள் அமைத்துக் கொள்ளவே இவற்றை செய்யவேண்டிய தேவை இருந்தது. ஆனால் வீட்டுத் தோட்டத்தில் இந்த வேலைகள் எதுவும் தேவையற்றது. அதனால் செலவும் குறைகிறது, உடல் உழைப்பும் குறைகிறது. ஆகவே வீட்டுத் தோட்டம் செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகி விட்டது.

புல், பூண்டுகளை முற்றாக அகற்றுவதாலும், உழவு செய்வதாலும் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதிப்புகளுக்கு உள்ளாகிறன. மழை, காற்று போன்ற காரணிகளால் மண்ணரிப்பு ஏற்பட்டு மண்ணில் இருக்கக் கூடிய தாவரங்களுக்கான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சேதனப் பொருட்கள் நிரந்தரமாக இழக்கப்படுகிறது. மழைநீர் முற்றாக வழிந்து ஓடாமல் நிலத்தினுள் ஊறவைப்பதும் புற்களின் வேலை. புற்கள் இல்லாத திறந்த நிலம் சூரிய வெப்பத்தால் மேலும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
மேலும், நாம் தெரிந்தோ தெரியாமலோ தொடர்ந்து செய்யும் ஒரு தவறு குப்பைகளை எரித்தல். உக்கக்கூடிய பயனுள்ள பொருட்களான காய்ந்த இலைகள், சமயலரைக் கழிவுகள், புல், பூண்டுகளுக்கு மனிதன் வைத்த பெயர் குப்பை. தயவு செய்து இந்த குப்பை எரிக்கும் காலாச்சாரத்தை கைவிடுகிறோம் என்று சத்தியம் செய்து கொள்வோமாக. அவற்றை நம்பிதான் எல்லா ஓகானிக் பண்ணைகளும் இருக்கின்றன.
எடுத்த எடுப்பிலேயே ஓகானிக் தோட்டம் என்று போய்விடாதீர்கள். அதற்கு அதிக செலவாகும். அதிகளவில் உயிரினத்தொகுதி (Biomass) தேவை. உயிரினத்தொகுதியை மக்கிய குப்பைகளாக மாற்ற பெரியளவில் பொறிமுறைகள் தேவைப்படுகிறது. மேற்கு நாடுகளில் உள்ளவை போன்று இலங்கையில் அதற்கான வசதிகள் இன்றுவரை இல்லை. உதாரணத்துக்கு, அமெரிக்காவில் கிலோ ஒரு ரூபாவிற்கு மக்கிய குப்பைகள் மொத்த விலையில் கிடைக்கும். இலங்கையில் அது முடியவே முடியாத ஒன்று.
எப்படியோ, நீங்கள் நச்சு மருந்துக்களை வீட்டுத் தோட்டங்களில் பயன்படுத்த முடியாது. ஆகவே உங்களால் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் பாதுகாப்பானதாகவே இருக்கப் போகிறது.
கொள்கலன்கள் மற்றும் செடி வளர்ப்பு பைகளில் வீட்டுத் தோட்டம் செய்வதானது மண்ணை சீமெந்தால் மூடி வைத்திருக்கும் பணக்காரர்களுக்கும், மொட்டை மாடியில் பயிர் வளர்க்க விரும்புபவர்களுக்கும் பொருத்தமானது.
மண்ணுள்ளவர்கள் நேரடியாக மண்ணிலேயே பயிர் செய்வதுதான் சிறப்பானது. அப்போதுதான் ஒரு நீண்டகால அடிப்படையில் மண்ணை வளப்படுத்தி முழு அளவிலான சேதன விவசாயத்துக்கு நாம் செல்லமுடியும். குழி நடவு, உயர் பாத்தி நடவு மற்றும் வரம்பு சால் நடவு முறைகளை நாம் தேவைக்கேற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி.
நிறைய தகவல்களுடன் மேலும் தொடரும்...
நண்பர்களே வீட்டுத் தோட்டம் பற்றிய எனது பதிவுகள் தொடர்ச்சியாக வரவுள்ளது. பிடித்திருந்தால் தயவு செய்து Like பண்ணுங்கள். கருத்துக்களை போடுங்கள். மறந்திடாமல் தேவைப் படுவோருக்கு share பண்ணுங்கள்.
Photo - by Anaya Katlego. Unsplash

கருத்துகள் இல்லை: