புதன், 8 ஏப்ரல், 2020

மக்களைக் காத்த மலேசிய இந்திய காங்கிரஸ்

மக்களைக் காத்த மலேசிய இந்திய காங்கிரஸ்!  மின்னம்பலம் :  உலகம் முழுவதையும் உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மலேசிய இந்தியர்களைச் சத்தமின்றி மீட்டுச் சென்றிருக்கிறது அந்நாட்டு மலேசிய இந்திய காங்கிரஸ்.
21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அறிவிக்கப்பட்டபோது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களின் நிலைமை இந்தியர்களின் நிலைமையைக் காட்டிலும் கவலைக்கிடமானது. அதிலும் குறிப்பாக அந்த நேரத்தில் இந்தியாவிலிருந்த மலேசிய இந்தியர்கள் பலர் மீண்டும் தங்கள் நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.
இந்தியாவுக்குள் சர்வதேச விமானங்கள் வருவதும் இந்தியாவிலிருந்து புறப்பட்டு செல்வதும் தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த மலேசிய இந்தியர்கள் மீண்டும் மலேசியாவுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மலேசிய இந்தியர்கள் இதுபோன்று இந்தியாவிலும் பக்கத்து நாடான பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் தவிக்கின்ற தகவல் மலேசியாவில் உள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ டத்தோ விக்னேஸ்வரனுக்கும் துணைத் தலைவரான எம்.சரவணனுக்கும் கொண்டு செல்லப்பட்டது.
அவர்களை மலேசியாவுக்கு அழைத்துச் செல்வதற்காக மலேசிய மற்றும் இந்திய அரசுகளுடன் உடனடியாக மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் விக்னேஸ்வரனும் துணைத் தலைவர் சரவணனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதற்கிடையில் இந்திய விமான நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மலேசிய மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் தங்குமிட வசதிகளையும் மலேசிய இந்திய காங்கிரஸ் செய்து கொடுத்தது. இந்தத் தொடர் முயற்சியால் மலேசிய இந்திய அரசுகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தி இந்தியாவில் இருக்கும் ஆயிரக்கணக்கான மலேசிய மக்களைச் சிறப்பு விமானங்களைக் கொண்டு வந்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். சென்னையிலிருந்து எட்டு விமானங்கள், திருச்சியிலிருந்து ஆறு விமானங்கள், பஞ்சாப் அமிர்தசரஸிலிருந்து ஒரு விமானம், டெல்லியிலிருந்து மூன்று விமானங்கள் என்று மொத்தம் 18 விமானங்கள் மலேசியாவிலிருந்து கடந்த மார்ச் கடைசி வாரத்தில் இந்தியாவுக்கு வந்து இங்கே தவித்த மலேசிய இந்தியர்களைப் பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளது.
மீட்கப்பட்ட மலேசிய இந்தியர்கள் அனைவரும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் விக்னேஸ்வரனுக்கும் துணைத் தலைவர் சரவணனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள். அப்போது மலேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் விக்னேஸ்வரன், ‘மலேசியப் பிரஜை உலகத்தின் எந்த மூலையிலும் தனித்து விடப்படக் கூடாது. அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மலேசிய இந்திய காங்கிரஸ் அளிக்கும். அவர் ஒரு நபராக இருந்தாலும் மலேசியாவுக்கு அழைத்து வரும்’ என்று தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்தியர்களை இங்கிருந்து அழைத்துச் செல்வதற்காக மலேசியாவிலிருந்து விமானங்கள் காலியாக வந்த நிலையில்... அங்கே தவித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை அந்த விமானங்கள் மூலம் தமிழகத்துக்கு அழைத்து வரலாமா என்று தமிழக அரசிடம் கேட்கப்பட்டது. அப்போது தமிழக முதல்வர் தரப்பில். ‘ஏற்கனவே வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் ஒருவர் தோற்று ஏற்பட்டுள்ளது என்ற ஒரு தோற்றம் இருக்கிறது. இந்நிலையில் மலேசியாவிலிருந்து மேலும் நம் மக்களை அழைத்து வந்தால் அது அந்தக் கருத்தை இன்னும் வலுப்படுத்தி விடும். எனவே அவர்கள் இப்போது அங்கேயே இருக்கட்டும்’ என்று கூறிவிட்டாராம்.
நெருக்கடியான நேரத்தில் மலேசிய மக்களின் சிக்கல் தீர்க்கும் கட்சியாக விளங்குகிறது மலேசிய இந்திய காங்கிரஸ்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: