வெள்ளி, 10 ஏப்ரல், 2020

புலிகளின் வெருகல் (கிழக்கு மாகாணம்) படுகொலைகள் 16 ஆண்டு நினைவு .. 2004 ஏப்ரல்10 ம் திகதி

புலிகளின் தோல்வி முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றதாக கருதுவது ஒரு வரலாற்று தவறு . உண்மையில்  புலிகளின் வெருகல் படுகொலைகள்தான் அதற்கு மூல காரணம் . நாம் எமது உரிமைகளை கேட்ட மாத்திரத்தில் ஒரே நாளில் துரோகிகளாக்கப்பட்டோம். அப்படிஎன்றால் பிரிந்து செல்வோம் என்றார்கள். விளைவு  புலிகள் தங்களின் போராளிகள்  (கிழக்கு) மீதே  படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டார்கள்.
ilankainet.com - பீமன் :
புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறுவதாக கருணா அறிவித்த பின்னர், கிழக்கை புலிகள் கனரக ஆயுதங்களுடன் ஆக்கிரமித்து அந்த மண்ணின் புதல்வர் புதல்வியரை கொடூரமாக கொன்றொழித்த அந்த கரிநாளுக்கு இன்றுடன் 16 வருடங்கள். இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொண்ட கபட ஒப்பந்தத்தூடாக கிழக்கினை ஆக்கிரமித்த வன்னிப்புலிகள் தங்களுடன் ஒன்றாக உண்டு , உறங்கி , உறவாடிய சகதோழர்-தோழியரின் உடல்களின் மீதேறிநின்று விடுதலைப் போராட்டத்திற்கு கிழக்கின் மக்கள் செய்த அர்ப்பணிப்புக்களுக்கு நன்றிக்கடன் செலுத்திய நாளுக்கு இன்றுடன் 16 வருடங்கள்.
இந்தநாளில் புலிகள் மேற்கொண்ட கொடூரங்களை வரலாறு என்ன நிபந்தனையுடன் இலகுவாக மன்னித்துவிட்டது என்ற கேள்வியுடன் சிலரது மனச்சாட்சியின் கதவுகளை தட்ட முயற்சிக்கின்றேன்.
சுதந்திர தமிழீழத்திற்காக போராடுகின்றோம் என்று பறைசாற்றிய அமைப்பொன்றிலிருந்து ஒரு பிராந்தியத்தை ( கிழக்கு மாகாணம்)  சேர்ந்த போராளிகள் அதே இலக்கிற்காக நாம் தனித்து போரிடப்போகின்றோம் எங்களுக்கு அதற்கு அனுமதி தாருங்கள் , வழிவிடுங்கள் என்று அனுமதிகோரியபோது, அடிமை ஒப்பந்தத்தை மீறியதாக அவர்கள் மீது ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டது.


2004 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ம் திகதி அதிகாலை சுமார் ஒரு மணியளவில் கிழக்கின் போராளிகளை வேட்டையாட ஆரம்பித்தது புலிகளின் தலைமை. இதற்காக புலிகளின் தலைமை கிழக்கின் போராளிகளை கொண்டே அவர்களை அழிப்பது என்ற வஞ்சகத்திட்டத்தினை தீட்டியது. இவ்வேட்டைக்கு கிழக்கின் முக்கிய தாக்குதல் அணி ஒன்றையே தெரிவு செய்தது. ஜெயந்தன் படையணியை முன்னணியில் அனுப்பியது. அப்படையணியை ஜெயார்த்தன் என்பவன் தலைமைதாங்கிச் சென்றான். பின்னால் பால்ராஜ் தவிர்ந்த புலிகளின் முக்கிய வட தளபதிகள் யாவரும் களமிறங்கியிருந்தனர். பானு, சொர்ணம் , ஜெயம் , தீபன் போன்ற தளபதிகள் கிழக்கில் புலிவேட்டைக்கு களமிறங்கினர்.


தரை மார்க்கமாகவும் கடல்மார்க்கமாகவும் புலிகள் தங்கள் சகோதரர்களை படுகொலை செய்ய விரைந்து கொண்டிருந்தபோது இலங்கை அரசு கைகட்டி ஜாலியாக பார்த்திருந்தது. இவ்விடயத்தில் இலங்கை அரசை எந்தவகையிலும் யாராலும் குறைகூறமுடியாது, எதிரிப்படை இரண்டாக பிரிந்து போர்புரிந்து தங்களைத்தாங்களே அழித்துக்கொள்ள முனையும்போது எப்படை அதை தடுத்து நிறுத்தும்?

கடற்புலிகளின் போர்படகுகள் வந்துகுவிந்தது. சூசை தவிர முக்கிய கடற்புலித் தளபதிகள் யாவரும் கிழக்கின் கரைகளில் தரையிறங்கினர். இலங்கைக் கடற்படை தனது கடமைகளை கவனித்துக்கொண்டிருந்தது , புலிகளின் எந்தப்படகையும் இடைமறித்து என்ன சங்கதி என்று கேட்கவில்லை. ஆனால் இவ்விடத்தில் ஒரு விடயத்தை குறிப்பிட்டாகவேண்டும் இக்கால கட்டத்தில் வடபுலத்து கடற்படை கட்டளை மையத் தளபதியாக றியர் அட்மிரல் சரத் வீரசேகர இருந்தார். அவர் வடகடற்பரப்பில் கடற்புலிகளின் சகல அசைவுகளையும் கண்காணித்தார். சமாதான காலத்தில் தீவுப்பகுதியினுள் நுழைந்து அங்கு தங்கியிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் மீது தாக்குதல் நடாத்த புலிகள் திட்டமிட்டனர். ஆனால் அவ்வாறானதோர் தாக்குலுக்கு சரத் வீரசேகர எந்த இடத்தையும் வழங்கவில்லை. புலிகள் சமாதான காலத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியினுள் செல்லும்போது சயனைட் குப்பிகளை அணிந்தவாறு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கடற்படையின் கட்டுப்பாட்டினுள்ளிருந்த திவகப்பகுதியினுள் சயனைட்வில்லைகளுடன் செல்வதற்குகூட அவர் அனுமதி வழங்கவில்லை. இதனால் புலிகள் அவரை ரணிலிடம் போட்டுக்கொடுத்தனர். ரணில் அரசாங்கம் சமாதான முயற்சிகளுக்கான விரோதி என்று றியர் அட்மிரல் வீரசேகரவைச் சாடியது. அவருடைய கடுமையான செயற்பாடுகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருந்த ஒஸ்ரின் பெர்ணான்டோ வீரசேகரவிடம் விளக்கம்கூட கோரியிருந்தார். இதை எதற்காக குறிப்பிட்டேன் என்றால், சரத் வீரசேகர போன்றதோர் கடற்படை தளபதி கிழக்கில் இருந்திருந்தால் சிலவேளை கிழக்கின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

கடற்புலிகள் , திருமைலைப் பகுதியிலிருந்து பஸ்களில் வந்திறங்கிய வன்னிப்புலிகள், ஏற்கனவே கருணாவின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களுள் பிரபாகரன் தலைமையின் திட்டத்தின்பெயரில் ஊடுருவியிருந்த புலிகள் யாவரும் கட்டளைக்காக காத்திருந்தனர். 10ம் திகதி காலை ஒரு மணியளவில் தாக்குதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது புலிகளின் கனரக ஆயுதங்கள் தங்கள் சகோதரர்களை நோக்கி குண்டுகளை கக்கின.

கிழக்குபுலிகள் திக்குமுக்காடினர் சுதாகரித்துக்கொள்வதற்குள் பலர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதை உணர்ந்தனர். கருணா பிரிந்தவுடன் கிழக்கில் இயக்கத்தை கலைப்பதாக அறிவித்திருந்தார். உறுப்பினர்களை தங்களது வீடுகளுக்குச் செல்லுமாறும் வேவையேற்படின் அழைப்பதாகவும் கூறியிருந்தார். அந்த அறிவிப்புடன் கைகளிலிருந்த துப்பாக்கிகளை வீசிவிட்டு பிச்சைவேண்டாம் நாயைப்பிடி என பலர் மட்டக்களப்பை விட்டே ஒடியிருந்தனர். இவர்கள் எவரும் மேற்குலக நாடுகளுக்கு செல்ல வசதி படைத்தவர்கள் கிடையாது. தங்களது வசதிக்கேற்றவாறு பலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கான முகவர்களை கண்டுபிடித்து கொழும்பிலேயே தங்கிவிட்டனர்.

கருணாவிற்கு நெருக்கமான சில தளபதிகள் தங்களது பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்புக்காக சில போராளிகளை வைத்திருந்தனர். எல்லைப் பாதுகாப்பு அந்தளவு பலமானதாக இருக்கவில்லை. காரணம் ஏற்கனவே புலிகள் ஊடுருவியிருந்தனர்.

கிழக்கு புலிகள் இவ்வாறு அசட்டையாக இருந்துள்ளதற்கான காரணம், புலிகளின் தலைவர் பிரபாகரனில் அவர்கள் வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கையாகும். கருணா பிரிந்துசெல்வதாக அறிவித்தபோது „சகோதர யுத்தம் ஒன்றுக்கு இடமில்லை என்றும் ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமால் இப்பிரச்சினையை முடித்துவைப்பதாக' பிரபாகரன் அறிவித்திருந்தார். அதன் பிரகாரமே தாம் எந்தவொரு தயார்படுத்தலுமின்றி இருந்தாக உயிர் தப்பியுள்ள கருணா தரப்பு தளபதிகள் தெரிவிக்கின்றனர்.

உளரீதியாக நலிவடைந்த நிலையில் காணப்பட்ட தமது சகாக்கள் மீது புலிகள் 10ம் திகதி காலை சகோதர யுத்தத்தை ஆரம்பித்தனர். அந்தயுத்தமானது அந்நிய நாடொன்றின் மீது படையெடுப்பதையும் தாண்டிய காட்டுமிராண்டி யுத்தமாக காணப்பட்டுள்ளது. கண்மூடித்தனமாக தமது சகோதரர்களை புலிகள் சுட்டுக்கொன்றனர், உயிருடன் பிடிபட்டவர்களை சங்கிலிகளில் விலங்குகளைப்போல் பிணைத்தனர். வெருகல் பிரதேசமெங்கும் மரணஓலம் கிளம்பியது. சுமார் சகல கிழக்கு புலிகளும் கைது செய்யப்பட்டனர்.

மரணஓலம் கிழம்பியபோது இவ்வணிகளுக்கு தலைமைதாங்கி வந்திருந்த பானுவை கிழக்கு தளபதிகளில் ஒருவரும் தற்போது தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் உப தலைவராகவும் இருக்கின்ற ஜெயம் வோக்கி டோக்கியில் தொடர்பு கொண்டு „ தலைவர் ஒரு துளி இரத்தம்கூட சிந்தாது கிழக்கை மீட்பேன் என்று அறிவித்திருந்தாரே, நாங்கள் எதிரிக்கு படுத்தபாயில் வைத்து அடித்தார்போல் நீங்கள் எங்களுக்கு படுத்த பாயில் அடிக்கின்றீர்களே இது தர்மமாகுமா' என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பானு „உனது தியாகங்களை தலைவர் இன்றும் மதிக்கின்றார், நான் இங்கு வரும்போது „தவறுதலாகவேனும் ஜெயம் இறக்க நேரிட்டால் அவரை மாவீரர்பட்டியலில் சேர்த்துவிடுங்களென்று தலைவர் என்னிடம் கூறினார். எனவே நீ உடனடியாக எங்கள் பக்கம் வா' என்று கேட்டுள்ளார். பானுவின் வலையில் விழ மறுத்த ஜெயம் நீங்கள் எம்மீது போர்தொடுத்துள்ளீர்கள் கிழக்கு போராளிகளின் போர்வலு யாதென்று உங்களுக்கு தெரியும் போர் என்றால் போர்தான் என்றுள்ளார். இதன் மூலம் புலிகளின் மாவீரர் பட்டியல் எத்தனை புனிதமானது என்பதை உணர முடிகின்றது.

இதோ பார் எண்ணி 30 நிமிடங்களில் உன்தலை சிதறுகின்றது எனக்கூறிய பானு சல்லித்தீவு பிரதேசமெங்கும் கண்மூடிதனமான ஆட்டிலறித் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்பிரதேசத்தில் ஜெயத்தின் இரகசியத் தளம் ஒன்று இருந்துள்ளது. மீன்வாடி மற்றும் சிறு தொழிற்சாலை என்ற பெயரில் இயங்கிவந்த இரகசியத் தளம் அது. அதன் நோக்கம் அரசுடனான பேச்சுவார்த்தைகள் முறியும்போது, இத்தளத்திலிருந்து மட்டக்களப்பு நகரை தாக்கி கைப்பற்றுவது. அதற்கான திட்டமும் பொறுப்பும் ஜெயத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. எனவே ஜெயம் அங்கேதான் இருக்கின்றார் என்பதை துல்லியமாக அறிந்து வைத்திருந்த புலிகள் கனரக ஆயுதங்கள் மற்றும் ஆட்டிலறிகள் கொண்டு சல்லித்தீவெங்கும் குண்டு மழைபொழிந்தனர். இப்பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த மதனா படையணியின் தளபதி சாவித்திரி முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான வேலரசி உட்பட பலரது உடல்கள் சிதறியது. ஆனால் அப்போது ஜெயம் அங்கிருக்கவில்லை.

மட்டக்களப்பில் கருணாவின் ஆட்கள் நின்ற பிரதேசமெங்கும் கனரக ஆயுதங்களைக்கொண்டு தாக்கினர். கருணா தரப்பு துருப்புக்கள் மற்றும் தளபதிகள் நகருகின்ற வாகனங்கள் மீது அதிசக்திவாய்ந்த கிளேமோர்கள் கொண்டு பக்கவிளைவுகள் பற்றி சிந்திக்காத தாக்குதல் நடைபெற்றது. கிழக்கின் மக்கள் வரலாற்றில் கண்டிராத சமர்க்களம் ஒன்றை கண்டனர். உடலங்கள் துண்டுதுண்டாக சிதறின. சிதறும் உடலங்கள் தமது சதோதர சகோதரியரது என புலிகள் சிறிதும் கவலைகொள்ளவில்லை. உயிர் தப்பியுள்ளோரை சரணடையுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டது அவ்வாறு சரணடந்தவர்கள் சிலர் அவ்விடத்தே சுட்டுக்கொல்லப்பட்டனர், பலர் சங்கிலிகளின் பிணைக்கப்பட்டனர். அத்துடன் கருணாவின் முக்கிய தளபதிகளது குடும்பத்தினர் தேடித்தேடி வேட்டையாடப்பட்டனர். அவர்களும் சங்கிலிகளில் பிணைக்கப்பட்டனர். அவ்வாறு சங்கிலிகளில் பிணக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் மற்றும் தளபதிகளின் குடும்ப அங்கத்தினர் சுமார் 500 பேர் உடனடியாக கால்நடையாக வன்னிக்கு துப்பாக்கி முனையில் நகர்த்தப்பட்டனர். சிலர் அதிவேக படகுகளில் கொண்டு செல்லப்பட்டனர்.

பொழுதுவிடிந்து வெளியே வந்த மக்கள் தமது உடன்பிறப்புக்கள் உடல் சிதறிக்கிடக்க கண்டனர். சிதறிய உடற்பாகங்களை அணுக எவரும் அனுமதிக்கப்படவில்லை. நாய்களும் நரிகளும் தங்கள் பாட்டுக்கு புகுந்து விளையாடின. பிரதேசமெங்கும் இரத்தவாடை வீசியது. புலிகளின் ஆக்கிரமிப்பு படையினர் வீடுவீடாக சென்று சல்லடைபோட்டு தேடுதல் நடாத்தினர். கொழுத்தும் வெயிலில் வெந்துவேகிய உடல்கள் நாற்றமெடுக்க தொடங்கின. சடலங்களைக் அணுகக்கூட உறவினர்கள் அனுமதிக்கப்படவில்லை மயான பூமியில் பிண மற்றும் இரத்தவாடைக்குள் மக்கள் திறந்தவெளிக்கைதிகளாக வைக்கப்பட்டனர். தங்களது உடன்பிறபுகள் உடல்சிதறிக்கிடக்க இறுதிக்கடமைகள்கூட செய்யமுடியாத அடிமைகளாக அவர்கள் ஆயுதமுனையில் வைக்கப்பட்டிருந்தனர்.

மறுநாள் 11ம் திகதி பிற்பகல் புலிகள் வெந்துவெதுங்கி நாற்றமெடுத்துக்கிடந்த உடல்களை ட்ரக்; ரக வாகனங்களில் அள்ளிச்சென்று கதிரவெளிக்காட்டுக்குள் நூற்றுக்கணக்கான சடலங்கைளை பாரிய படுகுழிகளில்போட்டு புதைத்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான சடலங்கள் வெருகல் ஆற்றின் மறுகரைக்கு எடுத்துச்செல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. உறவினர்களுக்கு ஆகக்குறைந்தது புதைக்கப்பட்ட இடம்தொடர்பான தகவல்கூட வழங்கப்படவில்லை.

நயவஞ்சகத்தனமாக வலையில் சிக்கவைத்து சரணடைய பண்ணிய முக்கிய தளபதிகள் பலரை புலிகளின் மட்டக்களப்பு புலனாய்வுப் பொறுப்பாளராகவிருந்த கீர்த்தி என்பவன் பாரமெடுத்தான். புலிகளமைப்பில் முக்கிய தளபதிகளாகவிருந்த ராபட், ஜிம்கெலித்தாத்தா, துரை, ஸ்ரேன்லி உட்பட பல தளபதிகள் , பொறுப்பாளர்கள் , சிறந்த போராளிகள் எனச் சுமார் 130 பேர்வரை கீர்த்தியின் இலுப்படிச்சேனை சித்திரவதை முகாமில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டனர். கைகள் பின்னே கட்டப்பட்டு கண்கள் கட்டப்பட்ட நிலையில் பலத்த சித்திரவதையின் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராபட்டை சுடமுயன்றபோது கண்கட்டையும் கையையும் அவிட்டுவிட்டு நெஞ்சில் சுடுமாறு அவர் வேண்டியதாக அறியக்கிடைக்கின்றது. இவர்கள் அனைவரும் மாவடியோடை பிரதேசத்திற்கப்பாலுள்ள கிறவல்குழிகளில் சுடப்பட்டு அக்குழிகளிலேயே எரிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் யுத்தவரலாற்றில் குறுகிய நேரத்தில் அதிக கொலைகள் இடம்பெற்ற நாளாகவும் பெருநிலப்பரப்பொன்றில் குறுகிய நேரத்தில் ரத்தபெருக்கெடுத்த நாளாகவும் ஏப்ரல் 10ம் திகதி பதிவாகியுள்ளது. ஆனால் மனித உரிமைகளின் காவலர்களோ சமாதானத்தின் தேவ – தேவதைகளோ இந்த கொடூரமான நாள் தொடர்பில் அவர்களது நாளேட்டில் எதையும் பதிவு செய்து கொள்ளவில்லை. இது தொடர்பாக பேசுவதை தீண்டாமையாக கருதுகின்றார்கள்.

மேலும் குறிப்பிட்டாகவேண்டிய அசிங்கம் யாதெனில் கொல்லப்பட்டும் , குற்றுயிரும் குறையுயிருமாக கிடந்த பெண்போராளிகளின் உடைகளை களைந்தெறிந்து அசிங்கப்படுத்தியுள்ளனர். இச்செயலை வடக்கிலிருந்து வந்திருந்த பெண்புலிகளே மேற்கொண்டதாக உறுதியாக கூறப்படுகின்றது. அத்துடன் அங்கு கொல்லப்பட்ட பெண்போராளிகள் நடாத்தப்பட்டவிதம் தொடர்பில் பல்வேறான கதைகள் பேசப்படுகின்றன. அச்சம்பவங்களை என்னால் நம்பமுடியவில்லை. சிலர் கற்பழிக்கப்பட்டதாகவும் , சிலரது மார்புகள் அறுக்கப்பட்டதாவும் பேசப்படுகின்றன. இவை எவற்றையும் இன்றுவரை உறுதிசெய்யமுடியவில்லை.

இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் யாவரையும் பட்டியலிட்டு நீதிகோரும் தமிழ் சமூகம் புலிகளால் கிழக்கில் வாழ்வுரிமை மறுக்கப்பட்டவர்கட்கு வாழத்தகாதவர்கள், துரோகிகள் என்று தீர்ப்பெழுதிவைத்துள்ளது. இவர்களுக்கு கருணை காருணியம் காட்டுவதற்கு எவரும் இல்லை. நீதிபெற தகுதியற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள். புலம்பெயர்ந்து பாதுகாப்பான சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற கிழக்கின் புத்திஜீவிகள்கூட சிறுசிறு தவறுகள் இடம்பெற்றுள்ளதுதான் என்ற வார்த்தையுடன் தமது நவதுவாரங்களையும் அடைத்துக்கொள்கின்றனர். கிழக்கு புத்திஜீவிகளின் பார்வையில் இந்த மன்னிக்கமுடியாத சமூப்படுகொலை சிறுதவறு (மைனெர் ஒபன்ஸ்). இந்தியாவினுள் நுழைந்து அந்நாட்டின் பிரதமர் ரஜீவ் காத்தியை கொலை செய்துவிட்டு, அக்கொலையை அன்ரன் பாலசிங்கம் துன்பியல் சம்பவம் என்றதுபோல்.

மட்டக்களப்பு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் கண்களுக்கு இங்கு புலிகளால் கொல்லப்பட்ட எவரும் வாழ்வுரிமையுடைய மனிதர்களாகவோ , பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களு இங்கு கொல்லப்பட்ட பெண்கள் எவரும் பெண்களாகவோ தெரியவில்லை. Chanel 4 ,டBBC ,அல்ஜசீரா போன்ற ஊடகங்கள் இலங்கையில் நடந்தவிடயங்களை தேடித்தேடி ஆய்வு செய்தன. ஆனால் அவர்கள் வெருகல் படுகொலை தொடர்பில் பேசுவதற்கு இன்றுவரை மறுக்கின்றனர். இருட்டடிப்புச் செய்கின்றனர்.

இந்த சமூகபடுகொலையில் புலிகளுடன் சேர்த்து மேற்குலகத்தினரும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படவேண்டியவர்கள். இலங்கையில் யுத்தநிறுத்தம் ஒன்று பிரகடனம் செய்யப்பட்டிருந்த காலத்திலேயே வெருகலில் மனிதபேரவலம் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டமெங்கும் போர்நிறுத்த மீறல்களை கண்காணிக்கவென கண்காணிப்பாளர்களை களமிறக்கியிருந்த மேற்குலகின் சமாதான தூதர்கள் தாக்குதல் இடம்பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தங்களது காரியாலயத்தை அங்கிருந்து அகற்றி புலிகளின் பாசிச கொள்கை நிறைவேற வழிவிட்டனர். அத்துடன் மூன்று பஸ்களில் வன்னியிலிருந்து புறப்பட்ட கொலைப்படைக்கு திருமலைவரை வழித்துணை வழங்கினர். எனவே மேற்குலகின் பார்வைக்கும் மட்டக்களப்பு போராளிகள் கொல்லப்படவேண்டியவர்களாகவே காணப்பட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்டவர்களுக்கு மாத்திரமல்ல மாவட்டத்திலுள்ள அநேகருக்கும் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் கொல்லப்படவேண்டியவர்களாகவும் நீதிக்கு உரித்தற்றவர்களாகவுமே காணப்படுகின்றனர். இந்நிலையில்தான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சி மாத்திரம் உயிர்பறிக்கப்பட்டவர்களை வருடாந்தம் நினைவு கூர்ந்து வருகின்றது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமான விடயம் யாதெனில் இப்பிளவுக்கு கொலைகளுக்கும் காரணகர்த்தாவாகவிருந்த கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் இறந்தவர்களை நினைவுகூறும் எந்தவொரு நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை என்பதாகும்.

இவ்வருடம் வெருகல்படுகொலைகளை நினைவுகூறுவதற்கு கொரோணா தடைபோட்டுள்ளது. எனவே அவர்களை தத்தமது வீடுகளிலிருந்து இன்று மாலை 6.05 க்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்துமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை கேட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: