செவ்வாய், 24 டிசம்பர், 2019

யாழ்- சென்னை விமான சேவைகள் Ticket விலை மாற்றம் .. Luggage பொதியின் அளவிலும் மாற்றம் !


newlanka.lk : யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமானப் போக்குவரத்துக்குள் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய திங்கள், புதன், மற்றும் சனிக்கிழமைகளில் விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவின் சென்னையில் இருந்து காலை 10.35 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் நோக்கி வரும் விமானமானது மீண்டும், யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 2.10 மணிக்கு சென்னை நோக்கி புறப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை நோக்கி செல்ல ஒருவழி விமான சேவைக்காக 12,990 ரூபாய் அறவிடப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், முன்னுக்குப் பின் முரணான விமானச் சீட்டுக்களின் விலை தொடர்பில் வெளியாகும் தகவல்களினால் பயணிகள் கடும் அதிருப்தியடைந்திருக்கிறார்கள்.இதேவேளை, யாழ்ப்பாணம் – சென்னைப் பயணத்தில் பயணி ஒருவரின் பயணப்பொதி அளவு 15 கிலோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணப் பொதியின் அளவு குறைப்பானது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.ஏனெனில், வழமையாக கொழும்பு – சென்னை பயணத்தில் 30 கிலோ வரையிலான பொருட்கள் பயணிகளுடன் அனுமதிக்கப்படுகின்றன.ஆனால், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை புறப்படும் பயணிகள், சென்னையிலிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பும் பயணிகள் தமக்கான பொருட்களை கொண்டுவருவதில் பெரும் சிக்கல்களை எதிர் கொள்வதாக குறிப்பிடுகிறார்கள்.
சென்னையில் இருந்து திரும்பும் பயணிகள் 30 கிலோவுக்கும் அதிகமான பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு திரும்புவது வழமை. இந்நிலையில், சரிபாதியாக 15 கிலோவாக குறைக்கப்பட்டிருப்பதை பயணிகள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிடுகிறார்கள்.ஏற்கனவே விமானச் சீட்டின் விலை தொடர்பில் அதிருப்தியடைந்திருக்கும் பயணிகளுக்கு பயணப் பொதியின் எடைக் குறைப்பும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்றார்கள்.விமானச் சீட்டின் விலை தொடர்பில் அந்நிறுவனம் தகவல் வெளியிடும் போது;
விமானச் சீட்டுக்களின் விலை உயர்வுக்குத் தாம் காரணமல்ல என்று அலையன்ஸ் எயார் வானூர்தி நிறுவனம் ஊடகம் ஒன்றிற்கு தகவல் வழங்கியுள்ளது.பயணக் கட்டணமாகத் தமது தரப்பில் 45 அமெரிக்க டொலர்கள் மட்டுமே அறவிடப்படுகின்ற போதும் வரிகள் மற்றும் வானூர்தி நிலையப் பயன்பாட்டுக் கட்டணம் உள்ளடங்கலாக 50 அமெரிக்க டொலர்கள் இலங்கை அரசாங்கத்தினால், அறவிடப்படுவதாக தெரிவித்துள்ளது.யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலகுவாக பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று பெரும் எதிர்பார்ப்போடு இருந்த பயணிகளுக்குm விமானக் கட்டணத்தின் அதிகரிப்பும், பயணப் பொதிகளின் எடையிலும் குறைக்கப்பட்டமையானது, கடுமையான ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதுடன், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருப்பதாக பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: