வெள்ளி, 27 டிசம்பர், 2019

542 இடங்களில் நடைபெற்ற தேர்தல்களில் 347 தொகுதிகளில் மோசடி..

மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆனபிறகு..? இந்த குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்குமா..? என்றெல்லாம் உங்கள் மனம் வினவுகிறதா..? நெருப்பில்லாமல் புகையாதே..! பனிமூட்டம் கூட புகை போல் தான் தெரியும் என்று கலைஞர் வசனத்தையே காவிகள் துணைக்கு அழைக்கலாம்..! ஆனால் உண்மையின் மறுபக்கம் மிகவும் அருவருப்பானது மட்டுமல்ல, மக்களாட்சி அமைப்புக்கு ஆபத்தானதும் கூட..! இதை நாம் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்வோம்...!
2019 இன் பாராளுமன்ற தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடத்தப்பட்டுதான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது பாஜக என்பதை தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் அறிந்த பிறகும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அது பற்றி பேசாமல் தவிர்ப்பது பாசிச பாஜகவின் தேர்தல் முறைகேட்டை அங்கீகரிப்பதாகவே பொருள்.
சுமார் 70 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையில் வாக்குப்பதிவை பெற்றுள்ளனர் . இவர்களுக்கு எதிராக தோல்வி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களின் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையை காட்டுகின்றன. அதுமட்டுமின்றி பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே கணிசமான வேறுபாடு காணப்பட்டது. தேர்தல் முடிவுகள் அச்சு ஊடகங்களில் வெளிவந்த போது இந்த குறைகள் வெளிப்படையாக கவனிக்கப் பட்டது.
இது குறித்து Quint என்னும் பத்திரிகை தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியதுடன் புகார் மனுவையும் அனுப்பி இருந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட காவி ஆதரவு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப் பூர்வ பக்கத்தில் வெளியிட்ட வாக்கு விபரங்களை முழுவதுமாக அழித்து விட்டனர். இதுவரை நடந்த எல்லாத் தேர்தல்களிலும் கட்சிகள், வேட்பாளர்கள் பெற்ற வாக்குத் தரவுகள் இருக்க 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மட்டும் வாக்கு விபரங்கள் இல்லாமல் காணப்படுகிறது.
திருடர்கள் களவாடும் தருணங்களில் தங்களை அறியாமல் சில ஆதாரங்களை விட்டுச் செல்வதைப் போன்று ஓட்டு இயந்திரத்தில் செய்யப்பட்ட பல தில்லுமுல்லுகள் மனித மூளைகளிடம் தற்போது சிக்கியதை தொடர்ந்து இந்த தரவுகளை அழிக்கும் வேலையில் அதிகாரிகள் ஈடுபட்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லி சிக்கியிருக்கிறார்கள். 'ஓரு சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை தவறுதலாக நடந்திருக்கலாம் என அறிவித்ததோடு மற்ற தரவுகளை தேர்தல் ஆணையம் அழித்து விட்டது.

முறைகேடுகள் பாசிசத்திற்கு பழகியதுதான் , ஆனால் இந்த முறை தேர்தல் ஆணையத்தை தங்கள் கூலிப்படையாகவே கருதி களமிறங்கிய பாஜக மாபெரும் ஜனநாயக படுகொலையை நிகழ்த்தியிருக்கிறது. இவ்வளவு பெரிய இந்த முறைகேடு அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பில்லாமல் சாத்தியமில்லை..!
அதிகார போதை, அதுமட்டுமே தங்கள் நீண்டகால கனவை நனவாக்குமென நம்பி மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்..!
பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மக்களை நேரடியாக பாதிக்கும் விடயங்களை கையாண்டு தோற்ற ஒரு அரசை மக்கள் மீண்டும் தேர்வு செய்யமாட்டார்கள் என அறிந்து வெகுமக்களின் கோபம் நம்மை பழி தீர்க்குமென தெரிந்து வேறு வழியின்றி ஓட்டு இயந்திரத்தையும் தேர்தல் ஆணையத்தையும் நம்பி வென்றிருக்கிறார்கள் ..
நீண்டநாட்களாக எதிர்கட்சிகள் சந்தேகத்தை ஆணையத்திடம் சொல்லியும் கேட்க மறுத்த உச்சநீதிமன்றம் இப்போதுதான் இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்று தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளது.
2019 ம் ஆண்டு தேர்தலில் 542 இடங்களில் நடைபெற்ற தேர்தல்களில் 347 தொகுதிகளில் மோசடி நடந்ததாக உச்ச நீதிமன்றம் கவனத்திற்கு கொண்டு சென்ற ADR என்கிற NGO வின் சந்தேகத்தை தற்போது நீதிமன்றம் தவிர்க்க முடியாத நிலையில் தேர்தல் கமிஷன் முன் விளக்கம் கேட்டு உள்ளது. குறிப்பாக ஒவ்வொரு தொகுதிகளிலும் முரண்பாடு என்பதுாயிரம் ஒட்டில் இருந்து 1,01,323 என்கிற அளவில் வித்யாசம் இருப்பதாகவும் சதவீத கணக்கில் 10.49% சதவீதமாக இருப்பதாகவும் அந்த குறிப்பிட்ட NGO வழக்கு தொடர்ந்து உள்ளது..!
இது பாஜகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு. இந்த செய்தி கசிய தொடங்கியவுடன் உடனே அவசர அவசரமாக CAA, NRC,NPR சட்டங்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து மக்களின் கவனத்தை திசை திருப்பியிருக்கிறது காவி அரசு. எல்லோரும் குடியுரிமை சட்ட திருத்ததை கண்டு இந்தளவு கிளர்ந்தெழுந்துவார்கள் என அரசோ பாஜகவோ எதிர்பார்க்கவில்லை. உச்சநீதி மன்றம் NGO வின் நிரூபிக்கபட்ட குற்றசாட்டை முரண்பட்ட வாக்குவிகிதத்தை ஏற்றால் இந்த அரசை கலைக்க வேண்டி வரும் . மக்கள் முன் பாஜகவின் உருவம் கிழிசலாகிவிடும்.
1971 ல் தேர்தலில் போட்டியிட்ட இந்திராவுக்கு அரசு அதிகாரி தேர்தல் வேலை பார்த்தார் என்ற குற்றச்சாட்டுக்காக 1975 ல் இந்திராவின் பதவியை பறித்த அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை முடக்கவே இந்திரா நெருக்கடி நிலையை கொண்டுவந்தார். அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமான விதிமீறல்களை நிகழ்த்தி ஆட்சியில் தொடரும் மோடிக்கெதிராக என்ன தீர்ப்பை வழங்கப் போகிறது நீதிமன்றம் என்பதை தேசமே கவனித்துக் கொண்டிருக்கிறது. சர்வ தேச சமூகமும் கூட..! வழக்கு முடியும் வரை இந்த மோசடியான மத்திய அரசை முடக்கி வைக்க வேண்டும் உச்சநீதி மன்றம்...! செய்வீர்களா நீதி அரசர்களே..??
-ஜீவா வனத்தையன் தமிழரிமா

கருத்துகள் இல்லை: