

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகேயுள்ள பாப்பரம்பாக்கம் வாக்குச் சாவடி மையத்தில் ஏற்பட்ட தகராறில் வாக்குப் பெட்டியை வெளியே எடுத்துவந்த சில நபர்கள், அதற்கு தீவைத்து விட்டு தப்பியோடினர். இதனால் பாப்பரம்பாக்கம் வாக்குச் சாவடி அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருவள்ளூர் ஆட்சியர், “பாப்பரம்பாக்கம் பகுதியில் வாக்குப் பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டதால் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும்” என்று கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகேயுள்ள முள்ளிப்பட்டியில் வாக்குச் சாவடியின் பின்புற கதவை உடைத்த மர்ம நபர், பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரை தள்ளிவிட்டு வாக்குப் பெட்டியைத் திருடிச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த வாக்குப் பெட்டியை சீல் உடைக்கப்படுவதற்கு முன்பே காவல் துறையினர் மீட்டனர். இதுதொடர்பான விசாரணையில், மதுபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர், வாக்குப் பெட்டியை தூக்கிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
நாகை மாவட்டத்திலுள்ள வீரன்குடிகாடு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்ற சத்யசீலன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக கல்லூரி படிக்கும் மோகனை காவல் துறையினர் கைது செய்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக