நித்தியின் அப்பா ஏற்கனவே இறந்துபோய்விட்டார். அம்மா இருக்கிறார். அவர் பெயர் லோகநாயகி. நித்தி, அம்மாவின் செல்லப்பிள்ளை. பிள்ளை என்ன திருவிளையாடல் நடத்தினாலும் அம்மா கண்டுகொள்ள மாட்டாராம். லோகநாயகி அம்மாவை நித்தி-ரஞ்சிதா ஆபாச சி.டி. வெளியானதும் தனது பிடதி ஆசிரமத்திற்கு அழைத்து வந்துவிட்டார். சமீபத்தில் வெளிநாட்டுக்குப் போலி பாஸ்போர்ட்டுடன் நித்தி தப்பிச் செல்லும்போது பிடதி ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வயதான லோகநாயகி அம்மாவிடம் கொடுத்துவிட்டுத்தான் சென்றார். அத்துடன் பிடதி ஆசிரம செலவுகளுக்காக 20 கோடி ரூபாயை வங்கியில் போட்டிருக்கிறார்.

தன்னுடன் இருக்கும் பக்தர்களுக்கு சம்பளம் எதுவும் நித்தி கொடுப்பதில்லை. சாப்பாடும், உடைகளும் மட்டும்தான் நித்தியின் ஆசிரமத்தில் கிடைக்கும். அத்துடன் ஒவ்வொருவரும் நித்தியின் பெருமைகளைச் சொல்லி, வி.ஐ.பி.க்களை சந்தித்து நிதி திரட்டவேண்டும். எனவே ஆசிரமத்தில் செலவுகள் எதுவுமில்லை. இந்தியா முழுவதும் பலரது சொத்துகளை ஆட்டையைப் போட்ட நித்திக்கு மொத்தம் 600 வகையான சொத்துகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன. அவற்றில் பல பினாமி பெயர்களில் இருக்கின்றன. சொத்துக்கள் எல்லாவற்றையும் டிரஸ்ட்டுகள் மூலம் நித்தி நிர்வகித்து வந்தார்.

அவரை சந்தித்து “ஆன்மிக தியான வகுப்புகளுக்கு’ என கொடுக்கப்படும் பணத்தை அமெரிக்காவில் “லைப் ப்ளிஸ்’ என்ற பெயரில் இயங்கும் பதினைந்து அறக்கட்டளைகளில் நித்தி கட்டச் சொல்வார். இந்தியாவில் அந்தப் பணத்தை கட்டும்போதே அது அமெரிக்க பணமாகிவிடும். இப்படி நித்தி செய்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. என்றாவது ஒருநாள் இந்தியாவை விட்டு ஓடிப்போக நேரிடும் என நித்திக்குத் தெரியும்” என்கிறார்கள் நித்தியின் பக்தர்கள்.

“இந்தமுறை அவர் நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் போது எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி ரஞ்சிதாவை தனது சொத்துகளுக்கான வாரிசு என நித்தி அறிவிக்கவில்லை. நித்தியின் அன்னையான லோகநாயகியைத்தான் தனது சொத்துகளுக்கான வாரிசாக நியமித்தார். லாப நோக்கில் செயல்படாமல் ஆன்மிக நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளையை அப்படியே குடும்பச் சொத்தாக மாற்றினார் நித்தி. அமெரிக்க டிரஸ்ட்டுகள் பெயருக்கு இந்தியாவில் உள்ள அக்கவுண்ட்களில் பணத்தை மாற்றினார். இப்படி நித்தி வெளிநாடுகளுக்கு கொண்டு போன பணம் மட்டும் நாலாயிரம் கோடி ரூபாய்.
எல்லோரும் நித்தியை மனநிலை சரியில்லாதவர் என்கிறார்கள். நித்தி ஒரு பக்கா கிரிமினல். பணத்தையெல்லாம் தன் பெயரில் திரட்டினார். அதற்காக மற்றவர்களின் சொத்துகளை அபகரித்தார். தனக்கு அடியாட்கள் வேலை செய்வதற்கு படித்த, பணக்கார இளைஞர்களை ஆண்-பெண் என திரட்டினார். அவர்கள் தப்பித்துப் போகாதபடி மிரட்டினார். எல்லாம் பக்கா கிரிமினல்தனமான வேலைகள்” என்கிறார்கள் நித்தியைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்.
சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்புகளை அம்மா லோகநாயகிக்கு கொடுத்தாரேயொழிய செக் புத்தகங்களில் கையெழுத்துப் போடும் அதிகாரத்தை அவருக்கு தரவில்லை. உலகம் முழுக்க உள்ள வங்கிகளிலும் நித்தியின் கையெழுத்தில்தான் வங்கி பரிவர்த்தனை கணக்குகள் நடைபெறுகின்றன.
இங்கிலாந்துக்கு கொண்டுபோன நாலாயிரம் கோடியில்தான் பசிபிக் கடல் பகுதியில் நித்தி தீவு வாங்கினார். அதற்கு “கைலாசா’ என பெயரிட்ட பிறகு நித்திக்கு காலம் கெட்டுப் போய்விட்டது. ரஞ்சிதாவிற்கு ஒருசில கோடிகள் மட்டும் தந்திருக்கிறார். அதுதான் அவர் வாழ்க்கையில் செலவு செய்த அதிகபட்ச நன்கொடை. கைது நடவடிக்கைகள், புகார்கள், வழக்குகள் என வந்தபிறகு இந்தியாவில் பினாமி பெயர்களில் இருந்த சொத்துகளை நித்தி விற்று வருகிறார். அவரது அம்மா லோகநாயகியைப் பயன்படுத்தி, நித்தியின் பெயரில் உள்ள டிரெஸ்ட்டுகளின் சொத்துக்களை விற்றுவருவதுதான் அவரது லேட்டஸ்ட் மூட்டை கட்டும் நடவடிக்கைகள் என்கிறார்கள் அவரது சீடர்கள். நித்தி இருக்குமிடத்தை சொல்ல வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் சொன்ன வழக்கு எதிர்பார்த்தபடி 18-ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வரவில்லை. அதனால் நித்தியை “தேடப்படும் குற்றவாளி’ என கர்நாடக போலீசாரின் புலனாய்வுப் பிரிவு அறிவிக்கிறது. புளூ கார்னர் நோட்டீஸ் எனப்படும் இந்த அறிவிப்பை கர்நாடக அரசின் சிபாரிசைப் பெற்று மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது. நித்திமேல் பிடிவாரண்ட் இல்லாததால் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. அடுத்த கட்டமாக நித்தி மீதான இரண்டு வழக்குகளை விசாரிக்கும் குஜராத் ஹைகோர்ட்டோ, கற்பழிப்பு புகாரை விசாரிக்கும் கர்நாடக உயர்நீதிமன்றமோ வாரண்ட் பிறப்பித்தால் அது ரெட் கார்னர் நோட்டீஸ் ஆகிவிடும். ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட ஒருவரை எந்த நாட்டு போலீசாலும் கைது செய்ய முடியும். விமானத்தில் பறக்க முடியாது என ஏகப்பட்ட சிக்கல் உருவாகும்.
பொருளாதார குற்றவாளிகளான விஜய்மல்லையா, நீரவ் மோடி போன்றவர்கள் இந்தியாவிலிருந்து தப்பி இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்குச் சென்றார்கள். “நிதியமைச்சரிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றேன்’ என்றார் மல்லையா. இங்கிலாந்து நாட்டு சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பை மீறி இந்தியாவால் சட்டென நடவடிக்கை எடுக்க முடியாது. அதனால்தான் அவர்களை இங்கே கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது. ஆனால், நித்தியோ பாலியல் குற்றவாளி. அவர் பதுங்கியிருப்பதோ தென் அமெரிக்க நாடுகளின் ஏரியாவில். அங்குள்ள சட்டங்களை சர்வதேச போலீஸ் உதவியுடன் இந்தியா எளிதாக கையாள முடியும். அதனால் நித்தி வேட்டை தீவிரமாகும்” என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
இது போதாதென்று “எங்கள் குழந்தைகளை நித்தி கடத்தி வைத்திருக்கிறார்’ என பலரும் கோர்ட்டுகளில் வழக்குப் போட்டு நித்திக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறார்கள்.
nakkeeran