வெள்ளி, 27 டிசம்பர், 2019

CAA: உத்தரப்பிரதேசத்தில் 21 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் - தொடரும் போராட்டங்கள்


BBC : குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதை அடுத்து, உத்தரப் பிரதேசத்தின் 21 மாவட்டங்களில் அம்மாநில அரசு இணைய சேவையை முடக்கியுள்ளது. உத்தர பிரதேசத்தின் 21 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) நாள்முழுவதும் இணைய சேவை முடக்கம் நீடிக்கும் என்று அம்மாநில காவல்துறை இயக்குநர் ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
"மாநிலம் முழுவதும் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இணைய சேவை முடக்கப்பட்டுள்ள 21 மாவட்டங்கள் விரைவில் நிலைமை சீராகும்" என்று ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்தன. எனினும், உத்தர பிரதேசத்தில்தான் ஒப்பீட்டளவில் அதிகளவிலான வன்முறை சம்பவங்கள் பதிவாகின.
எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்? குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் இதுவரை நடந்துள்ள போராட்டங்களின்போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 - 16 உயிரிழந்து இருக்கலாம் என்று அம்மாநிலத்தின் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதை தவிர்த்து, ஃபெரோசாபாத்தில் நடந்த போராட்டத்தின்போது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரஷீத் என்பவரும், வாரணாசியில் எட்டு வயது முகமது சாகீர் எனும் சிறுவன் கூட்டநெரிசலில் சிக்கியும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன சொல்கிறது காவல்துறை?

பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தோட்டாக்களை தவிர்த்து தாங்கள் வேறு எதையும் பயன்படுத்தவில்லை என்று உத்தர பிரதேச காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
"மாநிலத்தின் பல்வேறுபட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அசாதாரண சூழலை தவிர்க்கும் வகையில் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது" என்று உத்தர பிரதேச காவல்துறையின் கூடுதல் காவல் இயக்குநர் பி.வி. ராம சாஸ்திரி கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
e>இதுமட்டுமின்றி, சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் உள்ளடக்கங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில், அண்மையில் லக்னோ, மீரட், சம்பல், ராம்பூர், முசாபர்நகர், ஃபெரோசாபாத், கான்பூர் நகர், மவு மற்றும் புலந்த்ஷர் ஆகிய இடங்களில் நடந்த போராட்டங்களின்போது பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பாக 498 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச மாநில தகவல் மற்றும் தொடர்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, "வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய நபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து, இழப்புகளை ஈடுகட்டுவோம்" என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: