செவ்வாய், 24 டிசம்பர், 2019

என்.ஆர்.சிக்கு பதிலாகவா என்.பி.ஆர்? மத்திய அமைச்சரவை முடிவு!

என்.பி.ஆருக்கும் என்.ஆர்.சிக்கும் என்ன வித்தியாசம்? என்.பி.ஆரில் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினர் பட்டியலும் இருக்கும். ஆனால் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் வெளிநாட்டுக் குடிமக்களின் பெயர் இருக்காது.
என்.ஆர்.சிக்கு பதிலாகவா  என்.பி.ஆர்? மத்திய அமைச்சரவை முடிவு!மின்னம்பலம் : பிரதமர் மோடி தலைமையில் இன்று (டிசம்பர் 24) டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021, தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்.பி.ஆர்) புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.
என்.ஆர்.சி. பற்றி பாஜகவுக்குள் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வேறு வேறு குரல்களில் பேசி வரும் நிலையில் இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பற்றி விவாதிக்கப்பட்டது. என்.பி.ஆர். என்று அழைக்கப்படும் தேசிய மக்கள் பதிவேடு என்பது என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து வேறுபட்டது. ஆனால் என்பிஆர், என்.ஆர்.சி. ஆகியவை பற்றி மக்களிடையே புதிய குழப்பம் உருவாகியிருக்கிறது.
2021 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் அதே வேளையில் , என்பிஆர் புதுப்பித்தல் 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை அசாம் தவிர அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் நடக்கும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ .8,754 கோடியும், என்.பி.ஆர் புதுப்பிக்க ரூ .3,941 கோடியும் செலவிட உள்துறை அமைச்சகத்தின் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது”

தேசிய மக்கள் தொகை பதிவு (NPR) என்றால் என்ன?
என்.பி.ஆர். என்பது நாட்டின் வழக்கமான குடியிருப்பாளர்களின் பதிவு. இந்தியாவின் ஒவ்வொரு குடியிருப்பாளரும் இதில் பதிவு செய்வது கட்டாயமாகும். இதில் இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் இருவரும் உள்ளனர். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பாளரின் விரிவான அடையாள தரவுத்தளத்தை உருவாக்குவதே என்பிஆரின் நோக்கம். முதல் தேசிய மக்கள்தொகை பதிவு 2010 இல் தயாரிக்கப்பட்டது மற்றும் இந்த தரவுகளை புதுப்பிக்கும் பணி 2015 ஆம் ஆண்டில் வீட்டுக்கு வீடு கணக்கெடுப்பு மூலம் செய்யப்பட்டது. இதன் அடுத்த புதுப்பிப்பு 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் வீட்டுவசதி கட்டத்துடன் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும்.
என்பிஆருக்கு பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் இடம், கடைசியாக வசிக்கும் இடம், நிரந்தர கணக்கு எண் (பான்), ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் 21 விவரங்கள் திரட்டப்படுகின்றன. கடைசியாக 2010 இல் செய்யப்பட்ட என்பிஆரில், 15 வகையான தரவுகள் சேகரிக்கப்பட்டன. மேலும் அதில் ‘பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் இடம்’ மற்றும் கடைசியாக வசிக்கும் இடம் ஆகியவை இல்லை.
என்.பி.ஆருக்கும் என்.ஆர்.சிக்கும் என்ன வித்தியாசம்?
என்.பி.ஆரில் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினர் பட்டியலும் இருக்கும். ஆனால் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் வெளிநாட்டுக் குடிமக்களின் பெயர் இருக்காது.
ஏற்கனவே இருக்கும் குடியுரிமை (குடிமக்களின் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டைகளின் வெளியீடு) விதிகளின்படி, மக்கள் தொகை பதிவு என்பது 'பொதுவாக ஒரு கிராமம் அல்லது நகரப் பகுதியில் வசிக்கும் நபர்களின் விவரங்களைக் கொண்ட பதிவு. அதேசமயம், ‘இந்திய குடிமக்களின் தேசிய பதிவு’ என்பது இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியேயும் வாழும் இந்திய குடிமக்களின் விவரங்களைக் கொண்ட ஒரு பதிவாகும்

கருத்துகள் இல்லை: