ஞாயிறு, 22 டிசம்பர், 2019

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி:திமுக காங்., மதிமுக, மஜக, எஸ்.டி.பி.ஐ .. வீடியோ


தினகரன் : சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக தலைமையில் நாளைநடைபெறும் பேரணிக்கு மதிமுக, மஜக, எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்):  மகாத்மா காந்தி கட்டமைத்த மதச்சார்பற்ற இந்தியாவைச் சீரழிக்க முனைந்துள்ள பா.ஜ.க. அரசுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களும் கிளர்ந்து எழவேண்டிய நேரம் வந்துவிட்டது. பாசிச பாஜக அரசின்  குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் மாபெரும் பேரணியில் அனைத்துத் தரப்பு  மக்களும் பங்கேற்று ஜனநாயகம் காக்க, மதச்சார்பற்ற தன்மையை நிலைநாட்ட கரம் கோர்த்து எழுவோம்.
கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): பா.ஜ.க. நிறைவேற்றிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரண்டு கடுமையாக எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாடு முழுவதும்  நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சென்னையில் பாஜக - அதிமுக தவிர்த்து அனைத்து கட்சியினரும், தங்களது எதிர்ப்பை போராட்டங்கள் மூலம் பதிவு செய்து வருகிறார்கள்.  வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக 800-க்கும் மேற்பட்டவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் எழுந்து வரும் கடும் எதிர்ப்பை ஒருமுகப்படுத்துகிற வகையில் நாளை  சென்னையில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன பேரணி நடைபெற உள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சியினர் ஆயிரக்கணக்கில் மூவர்ணக் கொடியுடன் மிகுந்த  எழுச்சியுடன் பங்கேற்க வேண்டும். தமிமுன் அன்சாரி எம்எல்ஏ(மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர்): நாட்டில் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, திமுக நடத்தவிருக்கும் பேரணிக்கு, திமுக சார்பில் மனிதநேய  ஜனநாயக  கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில்  விவாதித்தோம்.  நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி, ஒற்றுமை ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில், தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த இப்பேரணி உதவும் என கருதுகிறோம். எனவே இப்பேரணியில் பங்கேற்பது என மனிதநேய  ஜனநாயக கட்சி  முடிவு செய்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: