சனி, 3 ஆகஸ்ட், 2019

ஜம்மு காஷ்மீர் .. வெளியேறும் 2.50 லட்சம் மக்கள், குவிக்கப்படும் கூடுதல் ராணுவம்! உச்சக்கட்ட பரபரப்பில்


tamil.indianexpress.com :ஜம்மு காஷ்மீர், லே மற்றும் லடக் பகுதியில் வசிக்கும் மக்கள் பயத்தில் உறைந்து போயிருக்கின்றனர். கடந்த 30 வருடங்களில் இதுபோன்றதொரு உச்சக்கட்ட பரபரப்பான சூழ்நிலையை இப்போது...
ஜம்மு காஷ்மீரில் திடீரென முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட, அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படலாம் என வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின. ஆனால், மத்திய அரசு இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தது. காஷ்மீரில் தரை, வான் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, அமர்நாத் யாத்திரை நேற்று திடீரென நிறுத்தப்பட காஷ்மீரை அதிகப்படியான பதற்றம் ஆட்கொண்டுள்ளது.
இந்த நிலையில், காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பை சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலவர தடுப்பு பிரிவு போலீசாரும் ஸ்ரீநகரின் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கை முன்னாள் முதல் அமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா ராஜ்பவனில் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீரின் நிலைமை குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக விளக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக், ஆதரவாளர்கள் அமைதியாக இருக்க வலியுறுத்துமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதேசமயம், ஜம்மு காஷ்மீர் மூன்றாக பிரிக்க உள்ளதாக வெளியான தகவலும் உண்மையில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், வரும் ஆக.6ம் தேதி தொடங்கவிருந்த புத்தா அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் புனிதப் பயணம் மேற்கொள்ளுபவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, இந்த யாத்திரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், “ஜம்மு காஷ்மீர், லே மற்றும் லடக் பகுதியில் வசிக்கும் மக்கள் பயத்தில் உறைந்து போயிருக்கின்றனர். கடந்த 30 வருடங்களில் இதுபோன்றதொரு உச்சக்கட்ட பரபரப்பான சூழ்நிலையை இப்போது தான் பார்க்கிறோம்.
ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள் ஆகியோர் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் விமான நிலையங்களில் காத்துக் கிடக்கின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையால் ஜம்மு – காஷ்மீரில் இருந்து வெளிமாநிலங்களைச் சேர்ந்த 2.50 லட்சம் மக்கள் வெளியேறுகின்றனர். இதில் மிக மோசமான விஷயம் என்னவெனில், ஸ்ரீநகரில் உள்ள NIT மாணவ, மாணவிகளும் உடனடியாக மாநிலத்தை விட்டு வெளியேறுகின்றனர்” என்று தெரிவித்து இருக்கிறார்.
தீவிரவாதிகள் ஊடுருவல், ஜம்மு காஷ்மீரை பிரித்தல், சிறப்பு அந்தஸ்து ரத்து என்று பல செய்திகள் மக்களிடைய உலா வர, இதில் எது உண்மை என்று தெரியாமல், அங்குள்ள மக்கள் பயத்தில் உறைந்து போயிருக்கின்றனர் என்பது மட்டும் உண்மை

கருத்துகள் இல்லை: