சனி, 3 ஆகஸ்ட், 2019

கம்போடிய அங்கோர் வாட் – தங்கநிறத்தில் தகதகக்கும் டைம் மெஷின்!

Angkor TempleAngkor Watவிகடன் - நித்திஷ் : அங்கோர் வாட் என்பது நாம் படங்களில் பார்க்கும் அந்த ஒரே ஒரு கோயிலை மட்டும் குறிப்பதல்ல. சிறியதும் பெரியதுமாக 292 கோயில் அமைப்புகளை உள்ளடக்கிய பிரமாண்ட பரப்பு அது. அங்கோர் வாட் – தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணப்பட விரும்பும் மனங்கள், அங்கோர் வாட் மேல் வட்டமடிக்காமல் தாய்நாடு திரும்பாது. தங்கநிறத் தகதகப்பில் பிரமாண்டமாய், தண்ணீரின் நிழல் அலையில் தன்னடக்கமாய், இளஞ்சிவப்பு மேகப் பின்னணியில் சிணுங்கும் குழந்தையாய்… கண்கள் நிறைக்கும் கட்டடக் கலை அது! நீளும் பாம்பாய் சயனித்திருக்கும் அதன் பாதைகளில் நடக்க நடக்க காலம் நம்மை பின்னோக்கி இழுத்துச்செல்வதை உணரமுடியும். அப்பேர்ப்பட்ட அங்கோர் வாட்டில் ஒருநாள் எப்படி இருக்கும்?
அங்கோர் வாட் என்பது நாம் படங்களில் பார்க்கும் அந்த ஒரே ஒரு கோயிலை மட்டும் குறிப்பதல்ல. சிறியதும் பெரியதுமாக 292 கோயில் அமைப்புகளை உள்ளடக்கிய பிரமாண்ட பரப்பு அது. ஏறத்தாழ 160 ஹெக்டேர்களுக்கு பரந்துவிரிந்திருக்கிறது.
அத்தனை கோயில்களையும் பார்ப்பதற்கு, நீங்கள் அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து மாதக்கணக்கில் தங்கினால்தான் சரிவரும். அதனால் கம்போடிய சுற்றுலாத்துறையே அங்கு வருபவர்களுக்கு மூன்று ஆப்ஷன்களைக் கொடுக்கிறது. ஒரே ஒரு நாள் பாஸ், மூன்று நாள்களுக்கான பாஸ், ஒரு வாரத்திற்கான என்ட்ரி பாஸ். ஒரு நாள் உள்ளே சுற்றிவருவதற்கான பாஸின் கட்டணம், ஒரு ஆளுக்கு 37 அமெரிக்க டாலர்கள். (கம்போடியாவில் உள்ளூர் கரன்சியைவிட டாலரே அதிகம் புழங்குகிறது). மூன்று நாள்கள் என்றால் 62 டாலர்கள். ஒரு வாரமென்றால் 72 டாலர்கள்.


கம்போடியாவைப் பொறுத்தவரை அதன் சுற்றுலா வருவாயில் பெரும்பகுதி அங்கோரை நம்பியே இருக்கிறது. அதனால்தான் இந்த விலை. ஆனாலும் ஆண்டுக்கு குறைந்தது 25 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் அங்கோரில் குவிகிறார்கள். தங்குமிடங்களில் சொன்னால், அவர்களே முந்தைய நாள் என்ட்ரி பாஸ் எடுத்துக்கொடுப்பார்கள். நாமும் நேரில் சென்று எடுத்துக்கொள்ளலாம். உங்கள் புகைப்படத்தோடு வரும் துண்டுச்சீட்டுக்கு மட்டும்தான் அங்கோர் வளாகத்தில் அமோக செல்வாக்கு.



Angkor Wat
Angkor Wat
அங்கோரின் பிரதான கோயில், அங்கோர் வாட். கெமர் சாம்ராஜ்ஜியத்தின் இரண்டாம் சூர்யவர்மனால் கட்டப்பட்ட கோயில் அது. 12-ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டபோது, விஷ்ணுவுக்கான கோயிலாகத்தான் இருந்தது. 50 தசாப்தங்களுக்குப் பிறகு புத்தத்துறவிகளின் வசிப்பிடமாகி, இன்று வரை பெளத்தம் பின்பற்றுபவர்களின் ஆஸ்தான தலமாக விளங்குகிறது.
அங்கோர் வாட்டை சுற்றிவர அதிகாலைதான் சிறந்த நேரம். சூரியன் கிழக்கிலிருந்து எழுந்து அங்கோர் வாட்டை தங்கநுரை தளும்பத் தளும்ப குளிப்பாட்டுவதைப் பார்க்கவே ஆயிரக்கணக்கில் குவிகிறார்கள் பார்வையாளர்கள். 4 மணிக்கெல்லாம், தங்கியிருக்கும் இடத்திலிருந்து புறப்பட்டுவிட வேண்டும். கம்போடியாவில் பயணிக்க, டுக்டுக்தான் சரியான வழி. நம்மூர் ரிக்‌ஷாவின் மோட்டார் வடிவம்தான் டுக்டுக். தெருவுக்கு நூறு டுக்டுக்குகள் ஆட்டோவைப்போல குறுக்கும் நெடுக்குமாக அலையும். விலையும் டாக்சிகளைவிட ரொம்பவே குறைவுதான்.




பக்கத்து நகரமான ஷியாம் ரிப்பிலிருந்து டுக்டுக் மெதுவாக அந்நியப்பட, குளிர்க்காற்று உக்கிரமாக முகத்திலடிக்கிறது. சர்சர்ரென முந்திச்செல்லும் சக பயணிகளை உள்ளடக்கிய டுக்டுக்குகளின் இரைச்சல் கடந்துசெல்கிறது. ‘அருகில்தான் இருக்கிறேன்’ என பூச்சிகளின் சங்கேத பாஷை வழியே அறிவிக்கிறது காடு. வானத்தைத் தொட்டுவிடும் முயற்சியில் வளர்ந்துகொண்டிருக்கும் நீண்ட அடர்த்தியான மர வரிசையைப் பிளந்தபடி செல்லும் சாலை உணர்த்துகிறது, அங்கோர் நெருங்குவதை. நான்கு புறமும் அகழி போன்ற அமைப்பு சூழ்ந்திருக்க, நடுவே மெல்லப் புலரும் காலையில் இருள்கோடுகளாய் தூரத்தில் தெரிகிறது அங்கோர் வாட்.
டுக்டுக்கிலிருந்து இறங்கும் அத்தனை பேரின் உடல்மொழியிலும் அவசரம் தெறிக்கிறது. சூரிய உதயத்தை வசதியான இடத்திலிருந்து பார்த்துவிட வேண்டும் என்ற அவசரம் அது. பின்னே? உலக உருண்டையின் பல வளைவுகளிலிருந்து வந்திருக்கும் புகைப்படக் கலைஞர்களின் எண்ணிக்கை மட்டுமே நூற்றுக்கணக்கில் இருக்கும். இதுபோக, பார்வையாளர்கள் ஆயிரக்கணக்கில் வந்திருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் வசதியான, இரைச்சல் அதிகமிருக்காத இடத்தைக் கண்டுபிடித்து அமர்வது அசாத்திய சாதனைதான்.



t
சாம்பல் நிற மேகங்கள் மெல்ல நிறமிழக்கின்றன. அவற்றில், தன் ரேகைத் தூரிகைகள் கொண்டு ஆரஞ்சு வண்ணம் பூசுகிறது சூரியன். அங்கோர் வாட்டின் சுவர்கள் அதிலிருந்து கொஞ்சத்தைக் குழைத்தெடுத்து, தங்கள் மேல் பூசிக்கொள்கின்றன. மழை கண்டதும் துளிர்த்தெழும் சிறுவிதையைப் போல சூரியனைக் கண்டதும் தன் மேலிருக்கும் இருளின் துகள்களை உதிர்த்துவிட்டுப் பாய எத்தனிக்கிறது அங்கோர் வாட். 800 ஆண்டுகளாக சலிக்காமல் நடக்கும் விளையாட்டு இது. இந்த விளையாட்டைப் பார்க்கும் படைப்பாளிகளுக்கு கைகள் பரபரக்கக்கூடும். ஆச்சர்யத்தில் படபடக்கின்றன கேமராக் கண்கள்.
மிஞ்சிப்போனால் சில நிமிடங்கள். அதன்பின் அந்த மந்திரத்தன்மை மறைந்து இயல்பாகிவிடுகிறது சூழல். அங்கோர் வாட்டின் நடுவே நிமிர்ந்து அமர்ந்திருக்கிறது கோபுரம். முன்னொரு காலத்தில், மன்னர் மட்டுமே அந்தக் கோபுரத்தில் ஏறுவாராம். புராதனக் கோபுரம் என்பதால், இப்போது எண்ணி எண்ணி அனுப்புகிறார்கள். நட்டுக்குத்தலான படிகளை மூச்சுப்பிடிக்க ஏறினால், நாற்புறமும் காடுகள் சூழ அமர்ந்திருக்கும் அங்கோர் வாட்டின் பரப்பளவை விழி விரியக் காணலாம்.



Bayon Temple
Bayon Temple
அங்கோர் வாட்டின் அடுத்த முக்கியமான இடம், பேயோன் கோயில். முந்தைய இடத்திலிருந்து மூன்று கி.மீ தூரம். பேயோனை நீங்கள் எந்தப் பக்கமிருந்து நெருங்கினாலும் அந்தக் கோயில் தூண்களுக்குத் தகவல் போய்விடும். காரணம், ஏகப்பட்ட மனித முகங்களைப் பேயோன் கோயில் முழுக்க சிறியதும் பெரியதுமாக செதுக்கி வைத்திருக்கிறார்கள். அம்முகங்கள் இரண்டாம் ஜெயவர்மனின் சாயலை ஒத்திருப்பதாகக் கதைகளும் உண்டு. வெளிப்புறச் சுவர்களில் கெமர் சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய நிகழ்வுகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. நேரமும் பொறுமையும் இருந்தால் எதிரே அமர்ந்து பொறுமையாக டீகோட் செய்யலாம்.
பேயோனைச் சுற்றி முடிக்கவே நண்பகலாகிவிடும். அதன்பின்னர், ‘ட ப்ரோம்’ கோயிலுக்கு டுக்டுக்கை விடலாம். மற்ற கோயில்களில் இல்லாத ஸ்பெஷல் இங்குண்டு. பல நூற்றாண்டுக் கால பழைமையான கோயில் சுவர்களை ஊடுருவி, பிரமாண்ட வேர்களைப் பரப்பியபடி எழுந்து நிற்கின்றன மரங்கள். தங்களைப் பார்க்க வரும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைப் பற்றி கிசுகிசுத்துக்கொள்கின்றன அவ்வேர்களும் சுவர்களும். சிலருக்கு அக்கோயிலை எங்கேயோ பார்த்தது போல இருக்கலாம். ஏஞ்சலினா ஜுலியின் ‘டாம்ப் ரைடர்’ படம் இங்கேதான் படமாக்கப்பட்டது.



Angkor Wat
Angkor Wat
இதற்கும் மேல் நேரமும் வெளிச்சமும் இருந்தால், அருகிலிருக்கும் ஒன்றிரண்டு கோயில்ளுக்கு ஒரு நடைபோய்விட்டு வரலாம். எத்தனை கோயில்களுக்குச் சென்றாலும் அத்தனையிலிருந்து வெளிவரும்போதும் டைம் டிராவல் செய்துமுடித்த எண்ணமே தோன்றும். கூடவே, அக்கோயில்கள் நம் காதோடு சொன்ன பல்லாண்டுக் கால கதைகளும்!

 vikatan.com

கருத்துகள் இல்லை: