சனி, 3 ஆகஸ்ட், 2019

வேலூர் தொகுதிக்கு கடைசி வரை வராத கனிமொழி.. திமுகவில் நடப்பது என்ன?

களம் வராத கனிமொழி tamil.oneindia.com - veerakumaran. : பிரச்சார களத்திற்கே வராத கனிமொழி..என்ன காரணம்?-
வேலூர்: நாளை மறுநாள் வேலூர் லோக்சபா தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக முக்கிய தலைவர் கனிமொழி இதுவரை பிரச்சார களத்திற்கே வராமல் தவிர்த்திருப்பது பெரும் சர்ச்சைகளுக்கு காரணமாகியுள்ளது.
பணப் பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் தொகுதிக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் அக்கட்சியின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.கதிர் ஆனந்த்
தனது அரசியல் வாழ்க்கையில் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், திமுகவினர் பம்பரமாக சுழன்று அவரது வெற்றிக்காக பாடுபட்டு வருகிறார்கள். திமுகவின் இளைஞரணி செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் கூட, நிறைய இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை பார்க்க முடிந்தது. ஆனால் கட்சியின் சீனியர் தலைவர்களில் ஒருவரும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி களத்துக்கே வரவில்லை. திமுக தொண்டர்கள் நடுவே இதுதொடர்பாக வாத விவாதங்கள் எழுந்துள்ளன.
வேலூர் தொகுதியில் கணிசமான அளவிற்கு முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். சமீபத்தில் லோக்சபாவில் என்.ஐ.ஏ சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக திமுக வாக்களித்ததால் முஸ்லிம்களும், திமுகவின் நிலைப்பாடு மீது அதிருப்தியில் உள்ளனர்.
அந்த மசோதா மீதான வாக்கெடுப்பின்போது பங்கேற்காத ஒரே திமுக எம்பி கனிமொழி மட்டுமே. அவர் அந்த நேரத்தில் அவையில் இருப்பதை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே வேலூருக்கு கனிமொழி வந்து பிரச்சாரம் செய்திருந்தால் சிறுபான்மையினர் வாக்குகளை இன்னும் அதிகமாக பெற முடியும்.

 இதெல்லாம் தெரிந்திருந்தும் கூட, திமுக தலைமை எதற்காக கனிமொழியை வேலூரில் களம் இறக்கவில்லை என்ற கேள்விகள் அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும் எழுந்துள்ளன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள் டெல்லியில் இருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக உள்ளூர் திமுக பிரமுகர்கள் ஊடகங்களிடம் தெரிவிக்கிறார்கள். ஆனால் டி.ஆர். பாலு மட்டும் எப்படி வேலூர் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்தார் என்ற கேள்வி இயல்பாகவே எழத்தான் செய்கிறது.


லோக்சபா தேர்தல் டிரென்ட்படி பார்த்தால், எப்படியும் திமுக வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று திமுக தலைமை யூகிக்கிறது. அந்த வெற்றியின் முழு பலனையும், ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகிய இருவரும் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.

எனவே வேலூர் தொகுதியில் உதயநிதி அதிக அளவில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். ஒருவேளை வேலூர் தொகுதி தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தால் தான் வெற்றி கிடைத்தது என்று ஒரு செய்தி மக்களிடமும், திமுக தொண்டர்களிடமும் சென்று சேரும் என்று தெரிகிறது. இது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு உரம் போடும் வாய்ப்பாக மாறும்.

கருத்துகள் இல்லை: