திங்கள், 29 ஜூலை, 2019

சேலத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் அரிவாளால் வெட்டிக்கொலை.. இருவர் கைது

sநக்கீரன் : சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் தங்கமணியை கடந்த 16ம் தேதி  மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.   தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தங்கமணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேலம் பெரியசோரகையை சேர்ந்த தங்கமணி என்பவர், நங்கவள்ளியில் சொந்தமாக ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடந்த 16ஆம் தேதி இவரது கடைக்கு 2 இளைஞர்கள் துணி வாங்குவது போல் வந்தனர்.  தங்கமணியிடம் பேச்சு கொடுத்தவாறே டி-ஷர்ட் வாங்கினர். அதற்கு தங்கமணி பணம் கேட்கவும், திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டிவிட்டு  தப்பி ஓடினர்.


ரத்த வெள்ளத்தில் கிடந்த தங்கமணியை ஜவுளி கடை ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்தர். தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 


இந்த தாக்குதல் சம்பந்தமாக  கடையில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த இந்த சம்பவத்தின் வீடியோவை ஆராய்ந்ததில் தங்மணியை வெட்டியது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், மணிகண்டன் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.   போலீசாரால் தேடப்பட்டு வந்த இருவரும் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து, இருவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த தங்கமணி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்

கருத்துகள் இல்லை: