திங்கள், 29 ஜூலை, 2019

ஒரு கோடி மரங்களை அழித்த மத்திய அரசு!

ஒரு கோடி மரங்களை அழித்த அரசு!மின்னம்பலம் : நரேந்திர மோடியின் முந்தைய
ஆட்சிக் காலத்தில் ஐந்து ஆண்டுகளில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
2014-19 காலகட்டத்தில் மத்திய அரசானது தனது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த 1,09,75,844 மரங்களை வெட்டியுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் வழங்கியுள்ளது. வெட்டப்பட்ட மரங்கள் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச் சூழல் துறை இணையமைச்சரான பபுல் சுப்ரியா அளித்துள்ள பதிலில் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார். அதாவது மோடியின் ஆட்சிக் காலத்தில் (2014-19) மொத்தம் 1.09 கோடி மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. 2014-15ஆம் ஆண்டில் 23,34,319 மரங்களும், 2015-16ஆம் ஆண்டில் 16,96,917 மரங்களும், 2016-17ஆம் ஆண்டில் 17,01,416 மரங்களும், 2017-18ஆம் ஆண்டில் 25,52,164 மரங்களும் வெட்டப்பட்டுள்ளன.

2018-19ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 26,91,028 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. வளர்ச்சித் திட்டங்களுக்காகத்தான் மரங்கள் வெட்டப்படுகின்றன என்று கூறியுள்ள மத்திய அரசு, மரங்களை வளர்ப்பதற்காகக் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.237.07 கோடி நிதியை அரசு வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் 12 மாநிலங்களில் 87,113.86 ஹெக்டேர் பரப்புக்கு வன விரிவாக்கத்துக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவின் வனப் பரப்பை 50 லட்சம் ஹெக்டேர் உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
தேசிய மரம் நடும் திட்டத்துக்காக ரூ.328.90 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: