செவ்வாய், 30 ஜூலை, 2019

உமா மகேஸ்வரி கொலை: ஏன், எப்படி? -புலனாய்வு ரிப்போர்ட்!

மின்னம்பலம் : உமா மகேஸ்வரி கொலை: ஏன், எப்படி? -புலனாய்வு ரிப்போர்ட்!தென்மாவட்டங்களை உலுக்கிய முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் உள்ளிட்ட 3 பேரின் கொலை விவகாரத்தில் உறவினர்கள், நண்பர்கள், அரசியல்வாதிகள் என 100க்கும் மேற்பட்டோரிடம் நெல்லை காவல் துறை விசாரணை நடத்தியது. அதில், திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை விசாரணைக்கு அழைத்த காவல் துறையினர், தீவிர விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளனர். 3 பேரையும் கொலைசெய்தது தான்தான் என்று கார்த்திகேயன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
கொலை நடந்தது ஏன், எப்படி என தீவிர விசாரணையில் பல தரப்பிலும் மின்னம்பலம் இறங்கியது.
உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்திவந்த காவல் துறையினர், ஒருகட்டத்தில் உமா மகேஸ்வரியின் வீட்டிலிருந்து 700 மீட்டர் தொலைவில் ஒரு இடத்திலிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில், கொலை நடந்ததாக சொல்லப்படும் நேரத்தில் அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமாக கறுப்பு நிற கார் நிறுத்தப்பட்டிருந்ததும், சிறிது நேரத்தில் கிளம்பிச் செல்வதும் தெரியவந்தது. இந்த சிறு பொறியை வைத்து ஒவ்வொரு நூலாகப் பிடித்துச் செல்ல ஆரம்பித்தனர் தனிப்படை போலீசார். அந்த கார் சென்ற வழித்தடங்களில் ஒவ்வொரு பகுதியிலும் காவல் துறை மற்றும் தனியாருக்கு சொந்தமாக இயங்கிவந்த 40 சிசிடிவி கேமராக்களை அலசி ஆராய்ந்தனர். கார் கடைசியாக திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு எதிரேயுள்ள காந்தி நகருக்குச் சென்றதும் சீனியம்மாள் வீட்டிற்கு முன்பு கார் நிற்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
காந்தி நகரிலுள்ள தனது இல்லத்திலிருந்து கார் மூலம் புறப்பட்ட கார்த்திகேயன், 6 கி.மீ தொலைவிலுள்ள உமா மகேஸ்வரி வீட்டுக்கு சென்றிருக்கிறார். செல்போன் எடுத்துச் சென்றால் மாட்டிக்கொள்வோம் என்று தனது செல்போனையும் வீட்டிலேயே வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
சிசிடிவி கேமாராவில் முகம் தெரியாமல் இருப்பதற்காக தலையில் தொப்பி அணிந்திருக்கிறார். ஒரு மஞ்சள் பையில் கொலை செய்வதற்கான ஆயுதம், மாற்று உடை, ஆப்பிள் பழம் போன்றவற்றோடு விருந்தாளி போல உமா மகேஸ்வரி வீட்டுக்குச் சென்றுள்ளார்.
வீட்டிற்குள் சென்றதும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உமா மகேஸ்வரி, முருக சங்கரன் இருவரையும் கத்தியால் சரமாரியாகக் குத்தத் தொடங்கிவிடுகிறார். இதனைப் பார்த்து கத்தியபடியே ஓடிவந்த மாரியம்மாளையும் குத்திக் கொலை செய்கிறார். உமா மகேஸ்வரியின் வீட்டிலிருந்து சிறிதுதூரம் தள்ளியே மற்ற வீடுகள் இருப்பதால் மூவரின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. மூவரும் இறந்ததை உறுதிசெய்துகொண்ட பிறகு, ரத்தம் தோய்ந்த தன் சட்டை, பேன்டை கழட்டியுள்ளார். பையிலிருந்த மாற்று பேன்ட், சட்டையை அணிந்துகொண்டு கத்தி, ரத்தக்கரை பட்ட துணிகளை பையில் எடுத்துவைத்துக்கொண்டார். வழக்கை திசைதிருப்புவதற்காக அங்கிருந்த நகைகளையும் எடுத்துக்கொண்டு, கிளம்பியுள்ளார்.
காரில் போகும்போது வழியில் ஓரிடத்தில் நிறுத்தி ரத்தக் கறை படிந்த தனது சட்டையையும் பேன்டையும் எரித்துள்ளார். ஆயுதத்தையும் வீசிவிட்டு தன்னை யாரும் கண்டுபிடிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
கொலைக்கு காரணம்
திமுக நிர்வாகியான சீனியம்மாளுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மகள்கள் இருவரும் நன்றாக படித்து ஒருவர் மருத்துவராகவும், ஒருவர் பேராசிரியையாகவும் பணியாற்றிவருகிறார்கள். ஆனால் எஞ்சினியரிங் படித்திருக்கும் மகன் கார்த்திகேயனுக்கு மது, சிகரெட், கஞ்சா, குட்கா என போதைப் பழக்கங்களும் இருந்துள்ளது. போதாக்குறைக்கு படிப்பில் ஏகப்பட்ட அரியர்ஸ். அவருடைய நட்பு வட்டங்களும் மோசமாகவே இருந்திருக்கிறது. இந்தக் காரணங்களும் சீக்கிரம் செட்டில் ஆகவில்லையே என்ற எண்ணமும்தான் 31 வயதான கார்த்திகேயனை திசைமாற வைத்திருக்கிறது.
1996ஆம் ஆண்டு மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு உமா மகேஸ்வரி, சீனியம்மாள் இடையே போட்டி நிலவியிருக்கிறது. ஆனால், படித்தவர் என்பதால் உமா மகேஸ்வரிக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மேயரும் ஆனார். அதன்பிறகு கட்சியில் சீனியாரான தனது அம்மாவுக்கு சங்கரன்கோவில் சட்டமன்றத் தேர்தலிலும் சீட் கிடைக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள இந்த நேரத்திலாவது தனது அம்மாவுக்கு சீட் கிடைக்கும் என கார்த்திகேயன் எதிர்பார்த்தார். ஆனால், சீனியம்மாள் அதிமுகவுக்கு செல்லவுள்ளதாக உமா மகேஸ்வரி தகவல் பரப்புகிறார் என கார்த்திகேயன் கோபமாக பேசிவந்திருக்கிறார்.
அந்த கோபம் வெடித்த தேதிதான் ஜூலை 23. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி தாமிரபரணி ஆற்றில் தூப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நினைவு நாள் அன்று, காவல் துறையினர் நினைவு தின நிகழ்ச்சிக்கு போய்விடுவார்கள் என்று அந்த தினத்தை கொலைக்காக தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் கார்த்திகேயனை கைதுசெய்துவிட்டனர் தனிப்படை போலீசார்.
சிபிசிஐடிக்கு மாற்றம் ஏன்?
தனிப்படையின் விசாரணை ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும்போதே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார் டிஜிபி திரிபாதி. திமுகவின் உட்கட்சிப் பிரச்சினை, உள்ளூர் காவல் துறையினருக்கு இருக்கும் பல வழக்குகளின் நெருக்கடிகள், சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை நடத்தினால் குற்றவாளிக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்பதினால் இந்த மாற்றம் நடந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: