வியாழன், 18 ஏப்ரல், 2019

கோயம்பேடு: நள்ளிரவில் பயணிகள் மீது தடியடி பயணிகளை ஊருக்கு செல்லவிடாமல் அடாவடி வீடியோ


கோயம்பேடு: நள்ளிரவில் மறியல் – பயணிகள் மீது தடியடி!போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் கோயம்பேட்டிலிருந்து வெளியூர்களுக்குச் செல்ல முடியாமல் விடிய விடிய பேருந்து நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் காத்துக் கிடந்தனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள 18 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 18) தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி சென்னையில் தங்கியிருக்கும் லட்சக்கணக்கானோர் வாக்களிக்க ஆர்வத்துடன் சொந்த ஊருக்குத் திரும்பினர். மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி, புனித வெள்ளி மற்றும் வார விடுமுறை எனத் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 1,500 சிறப்புப் பேருந்துகளைப் போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்திருப்பதாக அறிவித்தது. ஆனால், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பயணிகள் செல்வதற்குப் போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகினர். வழக்கத்தைவிட மிக மிகக் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன. சேலம், மதுரை, கோவை, திருச்சி, நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட ஒவ்வொரு பகுதி பேருந்துகளுக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காத்திருந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் ஓரிரண்டு பேருந்துகள் மட்டுமே கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையத்துக்குள் வந்து சென்றன. இதனால் யாரும் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.


பெண்களும், குழந்தைகளும் பேருந்து நிலையத்தில் விடிய விடிய அவதிப்பட்டனர். இதனால் ஆத்திரத்துக்குள்ளான பயணிகள் பேருந்து நிலையத்தின் வாயிலில் இரவு 12 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் சென்ற வாகனங்களை மறித்தும், போக்குவரத்து காவல் அதிகாரிகளை முற்றுகையிட்டும் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி, பேருந்து நிலையத்துக்குள் வந்த ஓரிரண்டு பேருந்துகளும் வர முடியாமல் ஆனது. தமிழக அரசுக்கும், போக்குவரத்துத் துறைக்கும் எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போக்குவரத்துத் துறைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கிடைத்த ஓரிரண்டு பேருந்துகளிலும் உள்ளே நெருக்கிக்கொண்டு ஏறியது மட்டுமில்லாமல், வண்டியின் மேற்கூரை மீதும் பயணிகள் ஏறிக்கொண்டனர். இதைப்பார்த்த மற்ற பயணிகள் எல்லா பேருந்துகளிலும் மேற்கூரை மீது ஏறி அமர்ந்து உயிரைப் பணயம் வைத்துப் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்தனர். காவல் துறையினர் கோயம்பேடு பேருந்து நிலையம் முழுவதும் குவிந்திருந்தும் இதைக் கண்டும் காணாததுமாக இருந்தனர்.

பேருந்து நிலையத்துக்குள் உள்ளே வந்த பேருந்துகளும் வெளியே செல்ல மணிக்கணக்கில் ஆனதால் கூடியிருந்த பயணிகள் ஓட்டுநர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மக்கள் கூடியிருந்த இடத்துக்கு முன்பாகவே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதால், ஆத்திரமடைந்த பயணி ஒருவர் ஓட்டுநருடன் சண்டையிட்டு, தானே ஏறி பேருந்தை உள்ளே எடுத்து வந்தார். பேருந்து வருமா, இல்லையா என்பதைப் பயணிகள் அறிந்துகொள்ளக்கூட போதிய ஊழியர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இல்லாததும் பயணிகளுக்குக் கூடுதல் அவதியை ஏற்படுத்தியது. ஆம்னி பேருந்துகளில் இமாலய கட்டணம் வசூலித்ததும், அந்தப் பேருந்துகளும் 11.30 மணிக்கு மேல் இல்லாததாலும் வேறு வழியின்றி விடிய விடிய தனியார் பேருந்து நிலையத்திலும் மக்கள் காத்துக் கிடந்தனர்.
ஓட்டுப்போட செல்லக்கூட இந்த அரசாங்கம் எங்களுக்குப் பேருந்து வசதி செய்து கொடுக்க வில்லை, இவர்களுக்கெல்லாம் எப்படி ஓட்டு போடுறது என்ற பேச்சு பேருந்து நிலையத்தில் பரவலாக எதிரொலித்தது. சொந்த ஊருக்குச் செல்ல இயலாமல் பெண்களும், குழந்தைகளும் பேருந்து நிலையத்திலேயே கவலையுடன் படுத்திருந்ததையும் காணமுடிந்தது.

கருத்துகள் இல்லை: