புதன், 17 ஏப்ரல், 2019

தேர்தலை நிறுத்துவேன்: ஜோதிமணியை மிரட்டிய கரூர் கலெக்டர்


minnambalam : தன்னிடம் புகார் கொடுக்க வந்ததற்காக கரூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலையே நிறுத்துவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம், கருர் தொகுதி தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அன்பழகன் மிரட்டல் தொனியில் பேசிய ஆடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 16 ஆம் தேதி இறுதிப் பிரச்சார நிகழ்வுக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கும், அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கும் அனுமதி கொடுப்பதில் கோட்டாட்சியரான உதவி தேர்தல் அலுவலர் பாரபட்சமாக செயல்பட்டார் என்று திமுக –காங்கிரஸ் குற்றம் சாட்டினர்.

ஏப்ரல் 16 பிரச்சாரத்தின் இறுதி நாளன்று கரூர் பேருந்து நிலையம் அருகே கடைசி கட்ட பிரச்சாரம் செய்ய திமுக-காங்கிரஸ் கூட்டணி தரப்பில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் திமுகவின் கோரிக்கையை நிராகரித்த கோட்டாட்சியர், அதிமுக வேட்பாளர் தம்பிதுரை அதே இடத்தில் மதியம் 1 மணி முதல் 6 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதித்தார்.
இதை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, திமுக மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி ஆகியோர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அதிமுகவினர் கொடுத்த விண்ணப்பத்தில் இருந்த பல தவறுகளை சுட்டிக் காட்டி அதை எப்படி ஏற்றுக் கொண்டீர்கள் என்று கேள்விகளால் துளைத்தனர். பெரும் பரபரப்பாகி, வஜ்ரா வாகனங்கள் எல்லாம் குவிக்கப்பட்ட நிலையில் திமுகவினர் வாதத்தை ஒப்புக் கொண்ட கோட்டாட்சியர் ஜோதிமணிக்கு அனுமதி கொடுத்தார்.
இந்தத் தகவல் கேள்விப்பட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் கொதித்தார். திட்டமிட்டப்படி பஸ் நிலையத்தில் பிரச்சாரம் நடக்கும் என்று அறிவித்துவிட்டு கலெக்டரை அணுகினார். அதன்படியே அவர்கள் மதியம் முதல் மாலை வரை அதே இடத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து நேற்று முன் தினம்(ஏப்ரல் 15) இரவு திமுக-காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் செந்தில்நாதன் தலைமையில் கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் வீட்டுக்குச் சென்றவர்கள், இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் சம்பந்தமாக முறையீடு அளிக்க வேண்டுமென்று கோரினர். ஆனால் கலெக்டரோ நாளை காலை 10 மணிக்கு வாங்க என்று சொல்லிவிட்டார். ஆனால், ‘நாளையோடு தேர்தல் பிரச்சாரம் முடிகிறது. அவரசமாக இதை பரிசீலித்து முடிவு சொல்ல வேண்டும்’ என்று அவர்கள் கேட்க அதற்கு கலெக்டர் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு இந்த சம்பவத்துக்குப் பிறகு வேட்பாளர் ஜோதிமணிக்கு கரூர் கலெக்டர் அன்பழகன் போன் போட்டிருக்கிறார். பிரச்சாரத்தில் இருந்ததால் கலெக்டரின் போனை எடுக்க முடியாமல் பிரச்சாரம் முடித்துத் திரும்புகையில் மீண்டும் கலெக்டருக்கு போன் செய்தார் ஜோதிமணி.
அந்த உரையாடலின் ஒரு பகுதி இதோ...
“வணக்கம் மேடம்… உங்க செந்தில்குமார்னு அட்வகேட் ராத்திரி 11 மணிக்கு என் வீட்டுக்கு வந்து அப்பீல் கொடுக்கனும்னு நூறு பேரோட வந்தாருங்க. நான் அவர்கிட்ட, காலையில ஆபீஸ் டயத்துல வாங்கனு சொன்னேன். ஆனா அவர் ரொம்ப தப்பா அராஜகம் பண்ணிட்டாருங்க. எல்லாத்தையும் வீடியோ பண்ணியிருக்கேங்க. நான் பாரபட்சம் பார்க்காம நடந்துக்கிட்டிருக்கேன் மேடம்…
‘சார் உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும். அப்சர்வரோட அட்வைஸ்படிதான் ஆர்.ஓ. கிட்ட அப்பீல் கொடுக்கச் சொல்லியிருக்காங்க. ஏ.ஆர். உத்தரவை மினிஸ்டர் பப்ளிக்கா மீறுறாரு. த்ரட்டன் பண்றாரு. அப்ப நாங்க ஆர்.ஓகிட்டதான வரமுடியும்? இது எலக்‌ஷன் டைம் சார். எமர்ஜென்சிங்குறதால உங்களைத் தேடி வர்றோம். அது சட்ட விரோதமான கூட்டம் அல்ல” என்று ஜோதிமணி விளக்கம் கொடுக்கிறார்.
பேசிக் கொண்டே இருக்கும் கலெக்டர் அன்பழகன், ஒருகட்டத்தில், ‘மேடம்.. யாரையும் ஆளைவிட்டு மிரட்டாதீங்க. நான் இதப் பத்தி ஹையர் அஃபீசியல்கிட்ட அனுப்பிட்டேன். நான் இந்த எலக்‌ஷனையே கேன்சல் பண்ணச் சொல்லி எலக்‌ஷன் கமிஷன்கிட்ட வேண்டுகோள் வைக்கப் போறேன்’ என்று சொல்கிறார்.
இதைக் கேட்டு கோபம் அடையும் ஜோதிமணி, ‘’அதுக்குதான் நீங்க வர்றீங்கனு தெரியும். தம்பிதுரை எலக்‌ஷன்ல தோக்கப் போறாரு. அதனால நீங்க எலக்‌ஷன்ல கேன்சல் பண்ணப் போறீங்க. இந்திய ஜனநாயகம் உங்களை நம்பி இந்தப் பதவியை உங்ககிட்ட ஒப்படைச்சிருக்கு. ஆனா நீங்க தம்பிதுரைக்கும், மினிஸ்டருக்கும் ரெப்ரசண்ட் பண்றீங்க. நீங்க யாரு சார் தேர்தலை நிறுத்தணும்னு சொல்றதுக்கு? நீங்க செய்யுங்க. எங்கள்கிட்ட மக்கள் இருக்காங்க” என்று பதில் கொடுக்கிறார்.
இதன் பிறகுதான் நேற்று தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக போலீஸாரிடமும், தேர்தல் ஆணையத்திடமும் புகார் கொடுத்திருக்கிறார் கரூர் கலெக்டர். “ தேர்தலை நிறுத்துவது என்று நேற்று முன் தினமே திட்டமிட்டு அதன்படியே நேற்று புகார் கொடுக்கிறார் கலெக்டர்” என்கிறார்கள் திமுக காங்கிரஸார்.
தேர்தல் நடத்தும் அலுவலர்களே தேர்தலை நிறுத்தும் அலுவலர்களாக மாற்றப்படும் கொடுமை ஜனநாயகத்தின் முகத்தில் காரி உமிழ்வதாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை: