செவ்வாய், 16 ஏப்ரல், 2019

பணம் கொடுக்கும்போது காமிராவில் சிக்கிய எடப்பாடி.. ..பெர்போமான்ஸ் வீடியோ


மின்னம்பலம் : மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளான 16ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலத்தில் வீதி வீதியாகச் சென்று தேர்தல் அறிக்கையின் துண்டு சீட்டுகளைக் கொடுத்து ஓட்டு சேகரித்தார். அப்போது, பழ வியாபாரம் செய்யும் பெண் ஒருவரிடம் சீட்டு கொடுத்த எடப்பாடி பழனிசாமி, அதனுடன் சேர்த்து சிறிது பணத்தையும் கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
தேர்தல் பரப்புரையின்போது பணம் கொடுப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது என்பதுடன், வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் முதல்வர் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது பணம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை உருவாக்கியதுடன், வைரலாகவும் பகிரப்பட்டது. ஆனால், அங்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி முழுதும் தெரிந்துகொள்ள பல்வேறு வீடியோக்களையும், களத்தில் இருந்தவர்களையும் விசாரித்தபோது உண்மை தெரிந்தது.

பிரச்சாரத்துக்காக வீதி வீதியாக சென்ற எடப்பாடி, எப்போதும் இல்லாத வகையில் சேலத்தில் உள்ள பல கடைகளுக்கும் சென்றார். நாடாளுமன்ற பிரச்சாரத்தில் எந்த இடத்திலும் எடப்பாடி இப்படி செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிச் சென்றபோது, கொடுப்பதற்கு ஏதுமில்லாத ஏழை வியாபாரிகள் தங்கள் கடையிலிருந்த பொருட்களைக் கொடுத்து எடப்பாடியை வரவேற்றனர். அப்படியொரு பழ வியாபாரி எடப்பாடியிடம் வாழை சீப்பு ஒன்றினை அன்பளிப்பாகக் கொடுத்தபோது, அதற்கான பணத்தை, தனது பாதுகாவலரிடமிருந்து வாங்கி எடப்பாடி கொடுத்தார். ஆனால், அந்த முழு சம்பவத்திலிருந்து, எடப்பாடி பணம் கொடுக்கும் காட்சியை மட்டும் தனியாக வெட்டி இணையத்தில் பரவவிட்டதால், எடப்பாடி பிரச்சாரத்தின்போது பணம் கொடுத்ததாக மக்களால் புரிந்துகொள்ளப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியபோது, திமுக-வை சேர்ந்த தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் கனிமொழி மீது இப்படியொரு குற்றம் அதிமுகவினரால் சுமத்தப்பட்டது. அதன்பிறகே, கனிமொழி அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லை என்று தெரியவந்தது. அதுபோலவே, இப்போது எடப்பாடி பணம் கொடுத்ததாக புகார் சொல்லப்பட்டு அது உண்மையில்லை என்று தெரியவந்திருக்கிறது. டீக்கடை, பழக்கடை போன்ற பல இடங்களிலும் பணம் கொடுத்த எடப்பாடி எங்குமே சில்லறையை வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: