புதன், 17 ஏப்ரல், 2019

தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு .. செய்த விபசாரம் போதும்

2016 சட்டமன்றத் தேர்தலின் பொழுது தேர்தல் பறக்கும் படையால் தடுத்துச் சிறைவைக்கப்பட்ட கண்டெய்னர் லாரிகள் 
தேர்தல் தேதி அறிவிப்பு, பக்கச்சார்பு, சின்னம் ஒதுக்குவதில் அழுகுணி ஆட்டம் என தனது ஒவ்வொரு செயலிலும் தேர்தல் ஆணையம், பா.ஜ.க.வின் ஜி-டீம் (G Team - Government Team) ஆகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
 புதிய ஜனநாயகம் : முழுக்க நனைந்தபிறகும் முக்காடு போட்டுக் கொண்டு நிற்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். சட்டப்படி, அது ஒரு தன்னாட்சி அமைப்பு. இந்திய அரசியல் சாசனம் அப்படித்தான் சொல்கிறது. ஆனால், நடைமுறையில் அது பா.ஜ.க-வின் கூட்டணி கட்சிகளில் ஒன்றாகவே செயல்பட்டு, ‘கொண்டை’யை மறைக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது.
மோடி நாட்டைச் சுற்றி முடிக்கும் வரை தேர்தல் தேதியை அறிவிக்காமல் தள்ளிப்போட்டது; கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கியதில் கடைப்பிடித்த அழுகுணி ஆட்டம்; அரசின் அத்தனை துறைகளும் ஆளும்கட்சிக்கு சார்பாகவும் எதிர்கட்சிகளை ஒடுக்கவும் பயன்படுத்தப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் பக்கச்சார்பு; தமிழ்நாட்டில் மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை ஏப்ரல் 18 அன்று நடத்தாமல் இழுத்தடித்து அறிவித்திருக்கும் சகுனித்தனம்… என தனது ஒவ்வொரு செயலிலும் தேர்தல் ஆணையம், பா.ஜ.க.வின் ஜி-டீம் (G Team – Government Team) ஆகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலுடன், தமிழ்நாட்டில் காலி யாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். (சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. மறைந்ததை அடுத்து, இவை 22 தொகுதிகளாயின) இந்தத் தொகுதிகளில் தி.மு.க. விருப்ப மனுகூட வாங்கத் தொடங்கிவிட்டது. ஆனால், ஆணையம் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் அறிவித்தது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அங்கு தேர்தல் இல்லையாம்.
ஒட்டப்பிடாரத்தில், எதிர்த்தரப்பு வேட்பாளர் வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை மறைத்துவிட்டார் என்பது டாக்டர் கிருஷ்ணசாமியின் வழக்கு. அரவக்குறிச்சியில் தி.மு.க., அ.தி.மு.க. இரு தரப்பு வேட்பாளர்களும் வாக்குக்குப் பணம் கொடுத்ததை எதிர்த்து ஒரு சுயேச்சை வேட்பாளரின் வழக்கு. திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க.வின் ஏ.கே.போஸுக்கு இரட்டை இலை ஒதுக்கக்கோரிய கடிதத்தில் இருந்தது ஜெயலலிதாவின் கைரேகையா எனச் சந்தேகம் எழுப்பிய டாக்டர் சரவணனின் வழக்கு. இப்படி ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாத காரணங்களைக் கொண்ட இந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் தேர்தலை ஏப்ரல் 18 அன்று நடத்தாமல், நிறுத்தி வைத்ததன் காரணம் என்ன?



திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தேர்தல் படிவத்தில் ஜெயாவின் கைரேகை.
ஒரே காரணம்தான். எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை இண்டு இடுக்குகளில் நுழைந்தாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற துடிப்பு. 22 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று அனைத்திலும் தி.மு.க. வெற்றிபெற்றால், மாநிலத்தில் ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்பு அதிகம். ஆகவே, தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் எண்ணிக்கையை முடிந்தவரைக்கும் குறைப்பதன் மூலம், ஆளும் அ.தி.மு.க.வின் ஆட்சிக்காலம் நூலிழையில் தப்பிப் பிழைத்திருக்கத் தேர்தல் ஆணையம் வழி அமைத்துக் கொடுத்தது. அதனால், வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தேர்தல் நடத்த முடியாது என்பது போங்கு.
2001-ஆம் ஆண்டு ஆண்டிபட்டி, புவனகிரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை ஆகிய நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார். இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவது சட்டவிரோதம் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. 15 ஆண்டுகளாக இந்த நான்கு தொகுதிகளுக்கும் தேர்தலே நடத்தவில்லையா?

இதில் திருப்பரங்குன்றம் தொகுதி இன்னும் விசேசமானது. 2016 சட்டமன்றத் தேர்தலில் இங்கு சீனிவேல் என்பவர் அ.தி.மு.க. சார்பில் வெற்றிபெற்றார். பதவியேற்பதற்கு முன்பே அவர் மரணம் அடைந்தார். இதனால் அதே ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி திருப்பரங்குன்றத்துக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் ஏ.கே.போஸ் போட்டியிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரிய கடிதத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதிலாக கைரேகை இடம் பெற்றிருந்தது. அப்போது ஜெயலலிதா அப்பல்லோவில், கோடி ரூபாய் மதிப்புள்ள இட்லியும் சட்னியும் சாப்பிட்டுக்கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
தேர்தலுக்குப் பிறகு டிசம்பர் 5-ஆம் தேதி அவர் மரணம் அடைந்தார். இடைத்தேர்தலின் முடிவில் ஏ.கே.போஸ் வெற்றிபெற்ற பிறகு, அது ஜெயலலிதாவின் கைரேகைதானா என்பதில் சந்தேகம் எழுப்பிய தி.மு.க. வேட்பாளர் சரவணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே ஏ.கே.? போஸும் மரணம் அடைந்தார்.
இந்நிலையில்தான், மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கிடையாது என்பது உறுதியான அடுத்த சில நாட்களில் திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு வந்தது. “அது ஜெயலலிதாவின் கைரேகைதான் என்பதற்கு உரிய ஆதாரம் இல்லை” என்று சொன்ன நீதிமன்றம், ஏ.கே.போஸின் வெற்றி செல்லாது என்று அறிவித்தது. அது மட்டுமல்ல, “அந்த நேரத்தில் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்கானி, அரசின் முதன்மை செயலாளர் ஆகியோர் ஆளும் அரசுடன் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருந்தனரா?” என்றும் கேள்வி எழுப்பியது.



ஜெயலலிதாவிடமிருந்து உருட்டப்பட்ட கைரேகையை அங்கீகரித்த முன்னாள் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.
தேர்தல் ஆணையமும், ஆளும் கட்சியும் இணைந்து கூட்டுச்சதி என்பது மிகக் கடுமையான சொற்பிரயோகம். நியாயமாக, ‘நடுநிலை குமார்’ தேர்தல் ஆணையம் இதற்குக் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆவேசத்துடன் சென்று, “அது ஜெயலலிதாவின் கைரேகைதான்” என்பதைச் சட்டப்படி நிரூபித்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையமோ எருமை மாட்டில் மழை பெய்தது போல, பா.ஜ.க.வின் அடுத்த அசைன்மெண்ட்டுக்குள் சென்றுவிட்டது.
வேட்புமனுவில் இருந்தது ஜெயலலிதாவின் கை ரேகை இல்லை என்றால், அது யாருடையது? ஒரு முதலமைச்சரின் கைரேகையில் பித்தலாட்டம் செய்ய முடியும் எனில், அதைச் செய்தவர்கள் மாபெரும் குற்றவாளிகள் அல்லவா? அப்படியே அது ஜெயலலிதாவின் கைரேகைதான் என்றாலும், அவர் சுயநினைவுடன் இருக்கும்போது, அவருடைய சம்மதத்துடன் பெறப்பட்டதா? அல்லது சுயநினைவின்றி மயங்கிக்கிடக்கும்போது அவருக்கே தெரியாமல் உருட்டப்பட்டதா? கைரேகை அவர் வைத்ததுதான் என்றால், கைரேகை வைக்கும் அளவுக்கு சுய உணர்வுடன் இருந்த ஒருவரால் கையெழுத்துப் போட முடியாதா?
2016 நவம்பர் காலகட்டத்தின் தமிழக அரசியல் சூழலை ஒரு கணம் மனதில் கொண்டு வாருங்கள். அப்பல்லோவில் ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பாக எண்ணற்ற ஊகங்கள் வந்து கொண்டிருந்த சமயம். அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதே மர்மமாக இருந்த நேரம். நியாயமாக, “வேட்புமனுவில் இருப்பது ஜெயலிதாவின் கைரேகையா?” என்ற சந்தேகம் தேர்தல் ஆணையத்துக்கு வந்திருக்க வேண்டும். எப்போதும் கையெழுத்துப் போடுபவர் இந்த முறை ஏன் கைநாட்டு வைத்திருக்கிறார் என்ற கேள்வி மிக அடிப்படையானது. ஆனால், ஆணையம் மௌனமாக அனைத்தையும் ஏற்றுக்கொண்டு தேர்தலை நடத்தியது.
அப்படியானால், தேர்தல் ஆணையத்தின் பணிதான் என்ன? ஆண்டு முழுவதும் உறைநிலை கோமாவில் இருக்கும் ஆணையம் தேர்தல் காலத்தில் திடீரென உயிர்த்தெழுந்து சூப்பர் ஹீரோ அவதாரம் எடுப்பதன் அரசியல் அர்த்தம் என்ன? “இங்கு தேர்தல் முறையாக, விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறது” என்ற தோற்ற மயக்கத்தை ஏற்படுத்த ஆணையம் முயல்கிறது. ஆனால், இம்முறை இந்த நாடகம் மிகவும் பரிதாபகரமான முறையில் அம்பலப்பட்டு நிற்கிறது. தேர்தல் ஆணையம் ஒரு பஃபூன் என்ற நிலையில் இருந்து, ஆளும்கட்சியின் ஆணைக்கு அடிபணியும் ஓர் அடியாள் என்பது திட்டவட்டமாக அம்பலப்பட்டிருக்கிறது. மாநில அளவிலும், தேசிய அளவிலும் ஒவ்வொரு நாளும் வெளிவரும் செய்திகளே இதற்கான உதாரணங்கள்.
தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், தமிழகத்திலுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகள் கடந்த 20 மாதங்களாகக் காலியாக உள்ளன. அத்தகுதி நீக்கத்தை ஆறு மாதங்களுக்கு முன்பே உயர்நீதி மன்றம் உறுதி செய்து விட்ட நிலையிலும் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தேர்தலை நடத்த முன்வரவில்லை. அதேபொழுதில், இந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் குஜராத்தில் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்குத் தாவினார்கள். அந்த மூன்று தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23-இல் தேர்தல். குஜராத்துக்கு வந்தால் ரத்தம், தமிழ்நாட்டுக்கு வந்தால் தக் காளி சட்னியா?
கோவா மாநில முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் மரணமடைந்து, அவரது சடலம் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே, அவர் உறுப்பினராக இருந்த சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் சூலூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு, வேறுவழியின்றித் தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் என்ன நடந்தது? விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கடைசி நேரம் வரை இழுத்தடித்துப் பானைச் சின்னம் ஒதுக்கினார்கள். தினகரனுக்கு, வேட்புமனு தாக்கல் எல்லாம் முடிந்து உச்சநீதி மன்றம் சொன்னபிறகு, பரிசுப்பெட்டி என்ற பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், தினகரனுக்கு தர மறுத்த குக்கர் சின்னத்தை, அவரது கட்சி வேட்பாளர்களை எதிர்த்து அதே பெயருடன் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். இவ்வளவு விசுவாசத்துடன் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்குப் பணிபுரியும் தேர்தல் ஆணையத்துக்கு, கூட்டணியில் இரண்டு சீட்டுகள் ஒதுக்காதது மட்டும்தான் பாக்கி.
எனினும், இப்படி அபாண்டமாக நாம் குற்றம் சொல்லிவிட முடியாதவாறு சில அதிரடிகளைச் செய்வதற்கும் ஆணையம் தவறுவது இல்லை. தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தப் பிறகு, நாடு முழுவதும் எதிர்கட்சியினரின் வீடுகள், நிறுவனங்கள் மீது வருமான வரித் துறையினரின் தொடர் சோதனைகள் நடைபெற்றன. வேலூரில், தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்குச் சொந்தமான கல்லூரிகள், நிறுவனங்களில் சோதனை, மத்தியப்பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத்தின் நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் சோதனை… என்ற இந்த சோதனைகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.



எதிர்த்தரப்பை பழிவாங்கும் நோக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை.
உடனே தேர்தல் ஆணையம், வருமான வரித்துறைக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. “இது தேர்தல் காலம் என்பதால் வருமான வரித்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும்” என்பது அந்த நோட்டீஸின் உள்ளடக்கம். இதைச் சொல்வதற்குத் தேர்தல் ஆணையத்துக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா?
தேர்தல் காலத்தில் ஒரு வேட்பாளர் 10 விநாடிக்கு ஒரு ரேடியோ விளம்பரம் கொடுத்தால் கூட ஆணையத்துக்குக் கணக்குக் காட்ட வேண்டும். ஆனால், “நமோ டி.வி.” என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி திடீரென ஒளிபரப்பைத் தொடங்கியிருக்கிறது. மோடியின் உருவத்தையே “லோகோ”வாகக் கொண்டு, 24 மணி நேரமும் மோடி புகழ் பாடி, பா.ஜ.க. சாதனைகளைப் பஜனை செய்து கொண்டிருக்கிறது. டாடா ஸ்கை, ஏர்டெல் உள்ளிட்ட அனைத்து டி.டி.ஹெச். சேவைகளிலும் திடீரென வரத் தொடங்கியுள்ள “நமோ டி.வி”க்கு மைய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகமோ, தேசியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமோ அனுமதியோ, உரிமமோ வழங்கவில்லை. ஆனாலும், ஒளிபரப்பாகிறது. கேட்டால், டி.டி.ஹெச். சேவையை வழங்கிவரும் நிறுவனங்கள், “இது ஒரு சிறப்பு சேவை ஒளிபரப்பு” என்று பதில் சொல்கிறார்கள். இந்தச் “சிறப்புச் சேவை”, வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்றும்கூடத் தொடரும். தேர்தல் ஆணையத்தால் என்ன செய்து விட முடியும்? அதிகபட்சம் ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றலாம். வேறு எதுவும் செய்ய முடியாது.



நரேந்திர மோடியை சகலகலா வல்லவனாகக் காட்டும் பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்திற்குக் கடைசி நேரத்தில்தான் தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
PM Narendra Modi என்ற பெயரில் மோடியின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக வெளியாகிறது. இதைத் தேர்தல் ஆணையம் தடுக்குமா? முடியுமா? இந்திய இராணுவத்தை “மோடியின் சேனை” என்று அழைக்கிறார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? “வாக்குச் சாவடிகளில் நாம்தான் இருப்போம்… நாம்தான் இருப்போம்… நான் சொல்வது புரிகிறதா?” எனத் திறந்த மேடையில் வாக்குச்சாவடியைக் கைப்பற்ற அழைப்பு விடுத்தார் பா.ம.க.வின் அன்புமணி. அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
தி.மு.க.வின் ஜெகத்ரட்சகன், இலங்கையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். “அவை என் குடும்பத்துக்குச் சொந்தமானதுதான்” என்று பேட்டியும் கொடுத்திருக்கிறார். ஆனால், சொத்து மதிப்பில் இதைக் குறிப்பிடவில்லை. இதற்காக ஜெகத்ரட்சகனின் மீது நடவடிக்கை எடுப்பார்களா? இது எதுவும் நடக்கப்போவது இல்லை.
எதிர்கட்சிகளை நோக்கி, “சபரிமலையைப் பற்றிப் பேசக்கூடாது. அது மதப் பிரச்சினையைத் தூண்டி விடுவதாகிவிடும்” என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், பா.ஜ.க., தனது தேர்தல் அறிக்கையிலேயே ராமர் கோயில் கட்டப்படும் என வாக்குறுதி அளிக்கிறது. இது மத உணர்வைத் தூண்டுவது ஆகாதா? புல்வாமா தாக்குதலை தொடர்ந்து தேசப்பக்தியை விற்பனை சரக்காக்குவது தடைசெய்வதற்குத் தகுதியானது இல்லையா?
பார்ப்பன இந்து மதத்தில் பாவங்களுக்கு ஏற்ற பரிகாரங்கள் உண்டு. மேற்கண்ட பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடிக்கொள்ளும் முகமாகத்தான் தமிழகத்தின் நான்கு தொகுதிகளுக்குத் திடீரெனத் தேர்தல் அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது போலும்.

இப்படிப் பச்சையாகவும் தரம் தாழ்ந்தும் காவி பாசிஸ்டுகளுக்குச் சொம்படிக்கும் இழிவான நிலையில் ஆணையம் இருக்க, தேர்தல் ஆணையர்களோ ஊர் இன்னமும் தங்களை நம்புவதாக நினைத்துக்கொண்டு, யாராவது 50 ஆயிரம், 60 ஆயிரம் கொண்டு செல்பவர்களை பிடித்துவைத்துக்கொண்டு சீன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.



ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நடந்த பணப்பட்டுவாடா தொடர்பாகச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை (கோப்புப் படம்)
முதலாளித்துவ அறிவு ஜீவிகளோ, இந்த உண்மைகளையெல்லாம் விழுங்கிக் கொண்டு, எப்படியாவது சுதந்திரமான, வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதை அதிகாரிகள் உத்தரவாதப்படுத்த வேண்டும். ஏனென்றால், ஒரு சொட்டு மையின் மூலம்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படியே ஒரு பேச்சுக்காக, இந்த முதலாளித்துவ அறிவுஜீவிகளின் பிதற்றல்களை நாம் உண்மையாக எடுத்துக் கொள்வோம் எனில், அதற்கு முதலில் செய்ய வேண்டியது, தேர்தல் ஆணையமே, நடையைக் கட்டு எனக் குரல் கொடுப்பதுதான்.
– செழியன்

கருத்துகள் இல்லை: