சனி, 20 ஏப்ரல், 2019

BBC : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்: மீது பாலியல் புகார் ..


இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தற்போதைய தலைமை நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் புகார் ஒன்றை எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து ரஞ்சன் கோகாய் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அவசர விசாரணை ஒன்றை நடத்தியது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியோடு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அப்போது தம் மீதான புகார்களை மறுத்த ரஞ்சன் கோகாய், நீதித்துறையின் சுதந்திரம் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், நீதித்துறை பலிகடா ஆகக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
அந்தப் பெண் அளித்துள்ள புகார் தொடர்பாக தாம் எதுவும் விசாரிக்கப் போவதில்லை, பிற மூத்த நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்று ரஞ்சன் கோகாய் கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின்னால் சதி இருப்பதாகவும், தலைமை நீதிபதியின் அலுவலகம் செயல்படுவதை முடக்கும் நோக்கத்துடன் இதன் பின்னால் பெரும் சக்திகள் உள்ளதாகவும் கூறினார்.
"20 ஆண்டுகள் நீதிபதியாக இருந்தபின் என் வங்கிக்கணக்கில் 6.80 லட்சம் ரூபாய்தான் உள்ளது. என் அலுவலக உதவியாளரிடம்கூட அதிகப் பணம் உள்ளது, " என்று அப்போது கோகாய் குறிப்பிட்டார்.

பணம் மூலம் தம்மை யாராலும் வளைக்க முடியாது என்பதால் இப்படி ஒரு புகார் தம் மீது கூறப்படுவதாக கோகாய் கூறியுள்ளார் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
புகார் கூறியுள்ள பெண் மீது இரு குற்ற வழக்குகள் இருப்பதாக ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.e>இந்த விவகாரம் தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்காத உச்ச நீதிமன்றம், நீதித்துறையின் சுதந்திரத்தைக் காக்க ஊடகங்கள் சற்று கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பதிவு ஒன்று தெரிவிக்கிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சொலிஸிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, இது ஒரு முக்கியமான சம்பவம், என்றும் இது பேசப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

யார் இவர்?

ரஞ்சன் கோகாய் இந்திய உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக 2018ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி பதவியேற்றார்.
ரஞ்சனின் தந்தை அசாமின் முன்னாள் முதலமைச்சர் கெசாப் சந்திர கோகாய் ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கெசாப் சந்திர கோகாய் கடந்த 1982ஆம் ஆண்டு அசாமின் முதலமைச்சராக இருந்தார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் ஒன்றிலிருந்து இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நபர் ரஞ்சன் கோகாய்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட "கவுகாத்தி ஹை கோர்ட், ஹிஸ்டரி அண்ட் ஹெரிடேஜ்" என்ற புத்தகத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள ரஞ்சன் கோகாய் பற்றிய ஆச்சர்யமளிக்கும் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
அசாமில் முன்னாள் முதலமைச்சரும் ரஞ்சன் கோகாயின் தந்தையுமான கெசாப் சந்திர கோகாயிடம் அவரது நண்பர் ஒருவர், உங்களது மகனும் ஒருநாள் அரசியலில் குதித்து முதலமைச்சராவாரா என்று கேட்டார். எவ்வித தயக்கமுமின்றி தன்னுடைய மகன் திறைமைவாய்ந்த வழக்கறிஞர் என்றும், அவர் இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாவதற்கு வாய்ப்புள்ளது என்றும் கெசாப் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களது சொத்து விவரங்களை வெளியிட்ட 11 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் இவரும் ஒருவர். அவர் வைத்திருக்கும் நிலம், நகைகள், பணம் போன்றவற்றின் விவரங்களை பார்த்தால் அவர் எப்படிப்பட்ட எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார் என்பது தெரியும். ரஞ்சனிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை. எப்போதெல்லாம் மாற்றம் உள்ளதோ, அப்போதெல்லாம் தனது சொத்து விவரத்தை ரஞ்சன் புதுப்பித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் ரஞ்சனும் மற்ற சில உச்சநீதிமன்ற நீதிபதிகளும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முக்கியமான, சர்ச்சைக்குரிய வழக்குகளை குறிப்பிட்ட சில நீதிபதிகளும் மட்டுமே விசாரணைக்கு ஒதுக்கீடு செய்கிறார் என்னும் திடுக்கிடும் குற்றச்சாட்டை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்வைத்தனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பற்றி சக நீதிபதிகளால் பொதுவெளியில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது அதுவே முதல்முறை

கருத்துகள் இல்லை: