வியாழன், 18 ஏப்ரல், 2019

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது 2,430 கோடி ரூபாய்!

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது 2,430 கோடி ரூபாய்!மின்னம்பலம் : மக்களவைத் தேர்தலோடு 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மினி சட்டமன்ற இடைத் தேர்தலும் நடப்பதால் மத்திய ஆட்சி, மாநில ஆட்சி இரண்டுக்குமான பரீட்சையாக அமைந்திருக்கிறது இந்தத் தேர்தல். வாக்குக்கு பணம் என்பது வெளிப்படையாக எல்லோராலும் கண்டிக்கப்பட்டாலும், இன்னொரு பக்கம் பெரும்பாலான கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுப்பதை தேர்தல் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகவே வைத்திருக்கின்றன.
பொதுவாக மக்களவைத் தேர்தல் என்றால் ஒரு தொகுதிக்கு அதிகபட்சம் பத்து லட்சம் வாக்காளர்கள், சட்டமன்றத் தேர்தல் என்றால் அதிகபட்சம் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பதுதான் தேர்தல் களக் கணக்கு.
வரையறுக்கப்பட்ட தேர்தல் செலவு வரம்புகளை எல்லாம் அடித்து நொறுக்கி செய்யப்படும் இந்த செலவுகள் பற்றிய ஒரு கணக்குக் கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.
அதிமுக: 960 கோடி ரூபாய்
எட்டு வருடமாக ஆளுங்கட்சியாக இருப்பதால் அதிமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறது என்ற புகார் மிகப் பரவலாக எழுந்திருக்கிறது.
துணை முதல்வர் ஓ.பன்னீர் பையன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனியில் ஆரம்பித்து பல தொகுதிகளில் பணப்பட்டுவாடா வெளிப்படையாகவே நடந்திருக்கிறது.
அதிமுக சார்பில் முதலில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் 10 லட்சம் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் கொடுப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால் தேர்தல் நெருங்க, நெருங்க களத்தின் நிலையை உணர்ந்த அதிமுக மேலிடம் 500 வேண்டாம் 300 ரூபாய் போதும் என்று முடிவெடுத்துவிட்டனர்.
அதன்படி அதிமுக சார்பில் ஒரு மக்களவைத் தொகுதிக்கு 30 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆக அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கும் சேர்த்தால் மொத்தம் 600 கோடி ரூபாய் ஆகிறது.
சட்டமன்ற இடைத்தேர்தல்:
சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிகபட்சம் ஒரு லட்சம் பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் வாரி வழங்கியிருக்கிறது அதிமுக. அதன்படி ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் ஆகிறது. 18 தொகுதிக்கும் கணக்குப் பார்த்தால் 360 கோடி ரூபாய். ஆக அதிமுகவின் உத்தேச வாக்காளர் பண செலவு 960 கோடி ரூபாய் என்று ஆகிறது. இது சராசரி குறைந்தபட்ச கணக்கீடுதான். ஒவ்வொரு தொகுதியிலும் அந்த வேட்பாளரின் செழிப்புக்கு ஏற்ப பண விநியோகம் இன்னும் அதிகமாகிறது. அது இந்தக் கணக்கில் வரவில்லை.
திமுக- 490 கோடி
திமுக சார்பில் ஒரு மக்களவைத் தொகுதிக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பார்த்தால் பத்து லட்சம் வாக்காளர்களுக்கு தலா 100 அளிக்க முடிவு செய்திருக்கிறது அக்கட்சி. இதுவும் அக்கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்குமான கணக்கு அல்ல. விஐபி வேட்பாளர்களுக்கு இது கூட போய் சேரவில்லை. ஆனால் திமுகவின் அனைத்து வேட்பாளர்களும் சராசரியாக ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுப்பதாக வைத்துக் கொண்டால் தொகுதிக்கு 20 கோடி வருகிறது. அதன்படி 20 தொகுதிகளுக்குக் கணக்கிட்டால் மொத்தம் 400 கோடி ரூபாய்.
சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக ஓரு ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு வழங்குகிறது என்பது கணக்கு. அதன்படி ஒரு தொகுதிக்கு 5 கோடி ரூபாய். 18 தொகுதிகளுக்கும் கணக்கிட்டால் 90 கோடி ரூபாய். ஆக திமுகவின் மொத்த செலவு 490 கோடி ரூபாய்.
அமமுக-580 கோடி ரூபாய்
அமமுக சார்பில் குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு மட்டுமே தலைமை வாக்காளர்களுக்கு பணம் வழங்க நிதி ஒதுக்கியிருப்பதாகக் கேள்வி. ஆனாலும் அக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் எம்பி தேர்தலுக்கு ஓட்டுக்கு 200 ரூபாய் வழங்கி வருவதாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன. அதன்படி சராசரி பத்து லட்சம் ஓட்டுக்கு 200 என்றால் 20 கோடி ஆகிறது. அமமுக 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஆனால் அனைத்து தொகுதிகளிலும் பணம் கொடுக்கவில்லை. எனவே திமுக, அதிமுக போல 20 தொகுதிகள் என்று கணக்கிட்டாலும் 20 தொகுதிக்கு 20 கோடி வீதம் 400 கோடி செலவாகிறது.
சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் அள்ளித் தருகிறது. அதாவது ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் எனில், மொத்தம் 10 கோடி ரூபாய். 18 தொகுதிகளுக்கும் சேர்த்து 180 கோடி ரூபாய். மொத்தம் 20 எம்.பி, 18 எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கும் சேர்த்து அமமுகவின் சராசரி செலவு 580 கோடி ரூபாய். ஆக மொத்தம் 580 கோடி ரூபாய்.
ஆக அதிமுக 960 கோடி ரூபாய், திமுக 490 கோடி ரூபாய், அமமுக 580 கோடி ரூபாய் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொத்தம் 2 ஆயிரத்து 30 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு கொடுக்கிற பணம் மட்டுமே வருகிறது. இது மிக மிகக் குறைந்த பட்ச பணம்.
தவிர திமுக, அதிமுக ஆகிய போட்டியிடும் 20 தொகுதிகளுக்கு மட்டுமே கணக்கிடப்பட்டிருக்கிறது. அதிமுக அணியில் போட்டியிடும் பாமக தர்மபுரி, அரக்கோணம் உள்ளிட்ட சில தொகுதிகளில் வாரி வழங்குவதாக சொல்கிறார்கள் மக்கள். அதேபோல தேமுதிக போட்டியிடும் தொகுதிகளிலும் வாக்குக்கு பணம் வழங்கப்படுகிறது.
திமுக கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீக் ராமநாதபுரத்தில் செழிப்பாக இருப்பதாக வாக்காளர்கள் சொல்கிறார்கள். காங்கிரஸ் சார்பில் சிற்சில இடங்களில் கொடுக்கப்படலாம். கம்யூனிஸ்டுகளுக்கு வழியில்லை. ஆக மொத்தம் கூட்டணிக் கணக்கு 400 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட தமிழகத்தில் இந்த தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் சுமார் 2,430 கோடி என்பதுதான் குறைந்தபட்சக் கணக்கீடு.

கருத்துகள் இல்லை: