ஏ.சி சண்முகம் மற்றும் கதிர் ஆனந்த் என இருவருமே வலிமையான வேட்பாளர்கள் என்பதால் களத்தில் போட்டி மிக கடுமையாக உள்ளது. சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கி இங்கு குறிப்பிட்ட அளவில் இருப்பது திமுகவுக்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஏ.சி.சண்முகத்துக்கு தனிப்பட்ட முறையில் சமூக வாக்குகள் இருப்பது அவருக்கு வலிமையைத் தருகிறது. இருவரும் சமபலத்துடன் மோதும் சூழல் உள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலேயே இங்கு பரபரப்புக்குப் பஞ்சமில்லை. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் கடந்த மாதம் 29, 30 தேதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. அதன்பின் இம்மாதம் 1 மற்றும் 2-ம் தேதி துரைமுருகனுக்கு நெருங்கி உறவினர் வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட வைத்திருக்கலாம் என கூறப்பட்டது. இதையடுத்து தேர்தலை நிறுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியானது. ஆனால், இந்த விஷயத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எந்தநேரத்திலும் தேர்தல் நிறுத்தப்படலாம் என்ற பரபரப்பு வேட்பாளர்களை மட்டுமல்லாமல், தொகுதி மக்களையும் உலுக்குகிறது. இதனால் உச்சபட்ச பரபரப்பில் வேலூர் தொகுதி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக