வெள்ளி, 19 ஏப்ரல், 2019

ரஜினி : சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்

தேர்தல் எப்போது வந்தாலும் தயார்: ரஜினிகாந்த்மின்னம்பலம் : தமிழகத்திற்கு எப்போது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்கத் தயாராக உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாய் இருக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதாக 2017ஆம் ஆண்டின் வெவ்வேறு தருணங்களில் அறிவித்தனர். இவர்களில் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலில் தனித்து களம் கண்டுள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தை துவங்கிய ரஜினிகாந்த், வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். அவர் பாஜகவின் தேர்தல் அறிக்கையையும் வரவேற்றிருந்தார்.
இந்த சூழலில் தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடந்து முடிந்தது. வாக்குப் பதிவு நடந்த சமயத்திலேயே அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. தர்பார் படப்பிடிப்புக்காக மும்பை செல்வதற்கு முன்பு இன்று (ஏப்ரல் 19) போயஸ் கார்டன் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “ரசிகர்களின் ஆர்வம் எனக்குப் புரிகிறது. அவர்களை ஏமாற்றிவிட மாட்டேன்” என்று பதிலளித்தார்.

வாக்குப் பதிவு தொடர்பான கேள்விக்கு, “70 சதவிகித வாக்குப் பதிவு என்பது நல்ல விஷயம்தான். சென்னையில் மட்டும் 55 சதவிகிதம் பதிவாகியுள்ளது. தொடர் விடுமுறை விடப்பட்டதால் வாக்காளர்கள் சொந்த ஊருக்கு சென்றதால் இங்கு வாக்குப் பதிவு சதவிகிதம் குறைந்துள்ளது. வாக்குச் சாவடிகளை அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும்” என்று பதிலளித்தார்.
மோடி மீண்டும் பிரதமராவாரா என்பது 23ஆம் தேதி தெரிந்துவிடும் என்று குறிப்பிட்ட ரஜினிகாந்த், பொன்பரப்பி கலவரம் தொடர்பான கேள்விக்கு பதில் கூறுகையில், “கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களுக்கு இந்த முறை குறைவுதான். தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.
18 தொகுதி இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆட்சி மாற்றத்தால் பொதுத் தேர்தல் வந்தால் அதில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, “சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் தயாராக உள்ளோம்” என்று பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை: