சனி, 20 ஏப்ரல், 2019

டெல்லி லாபி!' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா?. 12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்.. பட்டுவாடா நிறைவு?

தினகரன், சசிகலா`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி!' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா?vikatan.com - vijayanand.a : `அழைக்க மறந்துவிட்டோம். 4 தொகுதிகளுக்கான தேர்தல் மே 19 அன்று நடக்கிறது. கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்றால் 30 நாள்களுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அதைக் கணக்கில் வைத்தே நேற்று பொதுச் செயலாளர் தேர்வு நடந்தது'.அ.ம.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் தினகரன். இதுகுறித்து சசிகலா அளித்த ஒப்புதல் கடிதத்தை அ.ம.மு.க வெளியிடவில்லை. `சசிகலாவின் ஒப்புதலோடுதான் அனைத்தும் நடக்கிறது என நிர்வாகிகளைச் சமாதானப்படுத்திவிட்டார் தினகரன். நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரையில் அமைதியாக இருந்ததுதான் சந்தேகத்தை எழுப்புகிறது' என்கின்றனர் மன்னார்குடி குடும்பத்தினர்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் `மினி சட்டசபைத் தேர்தல்' எனச் சொல்லப்படும் அளவுக்கு 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தது. அடுத்ததாக, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், அரூர் ஆகிய 4 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 30 நாள்கள் இருக்கக் கூடிய சூழலில், அ.ம.மு.க-வின் பொதுச் செயலாளராகப் பதவி ஏற்றிருக்கிறார் தினகரன். இதில் எந்த இடத்திலும், ` சசிகலாவை நீக்கிவிட்டுப் பதவியேற்றுக் கொண்டார்' எனக் குறிப்பிடவில்லை. சிறையில் இருக்கும் சசிகலா கொடுத்ததாகச் சொல்லப்படும் கடிதத்தையும் நிர்வாகிகளிடம் காண்பித்திருக்கிறார் டி.டி.வி.
நேற்று நடைபெற்ற புதிய பொதுச் செயலாளர் தேர்வு நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பில்லை. கழகத்தின் 6 செய்தித் தொடர்பாளர்களுக்கு இதுகுறித்த விவரமே சொல்லப்படவில்லை. தினகரன் தேர்வானது குறித்து அ.ம.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவிடம் கேட்டுள்ளனர். அவர்களுக்குப் பதில் கொடுத்த பிரபு, `அழைக்க மறந்துவிட்டோம். 4 தொகுதிகளுக்கான தேர்தல் மே 19 அன்று நடக்கிறது. கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்றால் 30 நாள்களுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அதைக் கணக்கில் வைத்தே நேற்று பொதுச் செயலாளர் தேர்வு நடந்தது. இதுதொடர்பான பணிகளில் தீவிரமாக இருந்ததால் பலருக்கும் அழைப்பு அனுப்ப முடியவில்லை' எனக் கூறியிருக்கிறார். இந்தப் பதிலைக் கேட்டு நிர்வாகிகளும் அமைதியாக இருந்துவிட்டனர்.
தினகரனின் முடிவால் சசிகலாவின் குடும்ப உறவுகள் ஆதங்கத்துடன் உள்ளனர். ``இரட்டை இலை மீதான உரிமத்தை விட்டுவிடக் கூடாது என்பதுதான் குடும்பத்தினரின் விருப்பமாக இருந்தது. ஆர்.கே.நகர் தேர்தலின்போதுகூட, `இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம், கட்சியைக் கைப்பற்றுவோம்' என்பதுதான் பிரதான முழக்கமாக இருந்தது. இதை நம்பித்தான் அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர்கள் பலரும் தினகரன் பின்னால் வரத் தொடங்கினர். இப்போது புதிய பொதுச் செயலாளராக தன்னை அறிவித்திருக்கிறார் தினகரன். `சின்னம்மாவை ஒதுக்கிவிட்டு டி.டி.வி இப்படிச் செய்திருக்கக் கூடாது' என நிர்வாகிகளில் சிலர் புலம்புகின்றனர். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குச் சற்றும் சளைக்காமல் வாக்காளர்களுக்குப் பணத்தைக் கொடுத்தது அ.ம.மு.க. ஒவ்வொரு பூத்திலும் 400 ஓட்டுக்கு தலா 200 ரூபாய் என விநியோகித்தினர். `இந்தக் கணக்கின்படி பார்த்தால் 1 கோடியே 50 லட்சம் வாக்குகள் வந்து சேரும். இத்தனை வாக்குகள் வந்து சேர்ந்தாலே 12 முதல் 15 தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெற்றுவிட முடியும்' என நினைக்கிறார் தினகரன்.
அப்படி ஒருவேளை வெற்றி வந்து சேரும்போது, `சுயேச்சை எம்.பி-க்களாக இருந்தால் அவர்களை கையில் வைத்துக்கொண்டு செயல்பட முடியாது. இதில் சிலர் அணி மாறிவிட்டால், நிலைமை சிக்கலாகிவிடும். அந்த 12 பேரையும் வைத்து லாபி செய்ய வேண்டும்' என்பதால்தான் அ.ம.மு.க-வைக் கட்சியாகப் பதிவு செய்தார். ஆனால், களநிலவரத்தைக் கணிக்க முடியாத சூழல் இருக்கிறது. தினகரனால் 40 தொகுதிகளிலும் கணிசமான அளவுக்கு வாக்குகளை வாங்கிவிட முடியும். அனைத்திலும் வெல்ல முடியுமா என்பது சந்தேகம்தான். மானாமதுரை, ஆண்டிபட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அ.ம.மு.க வெல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தநேரத்தில், `கட்சியாகப் பதிவு செய்தால் 4 சட்டமன்றத் தொகுதிகளில் தீவிரமாகத் தேர்தல் வேலை பார்க்க முடியும்; தனிச்சின்னத்தைப் பெற்றுவிட முடியும்' என நினைக்கிறார். அதற்காக நீதிமன்றத்தில் தெரிவித்த உறுதிமொழியை உதாரணமாகக் காட்டுகிறார்கள். தினகரனின் பொதுச் செயலாளர் பதவியால், அ.ம.மு.க-வில் உள்ள சசிகலா ஆதரவாளர்கள் பலரும் ஒதுங்குவதற்கான வாய்ப்புகளே அதிகம்" என விவரித்தவர்கள்,
தினகரன்
``சிறையில் சசிகலாவை தினகரன் சந்தித்து சில வாரங்கள் ஆகிவிட்டன. வழக்கறிஞர்கள் மூலமாகவே சசிகலாவை அவர் சமாதானப்படுத்திவிட்டார் என்கிறார்கள். `பொதுச் செயலாளர் பதவியை வைத்துக் கொள்' என சசிகலா கையொப்பம் போட்டுக் கொடுத்ததாகச் சொல்லப்படும் கடிதத்தை யாரும் வெளியிடவில்லை. அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது என்றும் தெரியவில்லை. தொடக்கத்திலிருந்தே சசிகலாவுக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறார் தினகரன். `ஆர்.கே.நகர் தேர்தலில் குடும்பத்தினர் யாரும் போட்டியிடக் கூடாது' என்பதில் உறுதியாக இருந்தார் சசிகலா. `அங்குப் போட்டியிடுவதற்கு கட்சிக்காரர்கள் யாருமே தயாராக இல்லை' என்றார் டி.டி.வி. சொல்லப் போனால், அப்போது மதுசூதனன் உள்ளிட்டவர்கள் தயாராக இருந்தனர். அதையும் மீறி தினகரன் போட்டியிட்டார்.
பின்னர், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ வெளியானது. `என்னைக் கொலைகாரி என்று சொன்னால்கூட இந்த வீடியோக்களை வெளியிடக் கூடாது' எனச் சத்தியம் வாங்கிக் கொண்டுதான் சிறைக்குப் போனார் சசிகலா. இந்த விவகாரத்தில் வெற்றிவேல் மீது பழியைப் போட்டார். வீடியோ விவகாரத்தில் கோபத்தைக் காட்டிய இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியாவையும் ஓரம் கட்டினார். இப்போது `நீ அ.தி.மு.க-வைக் கைப்பற்று, நான் அ.ம.மு.க-வைப் பார்த்துக் கொள்கிறேன்' என சசிகலாவிடம் கூறிவிட்டார். ஜெயா டி.வி அலுவலகமும் தினகரனின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டால், அனைத்தும் வந்ததுபோல ஆகிவிடும். ஜெயா டி.வி அலுவலகத்துக்கு 2 முறை அனுராதா வந்துவிட்டுப் போனதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
தினகரனின் இந்த முடிவை 4 தொகுதிகளுக்கான பிரசாரமாக முன்னெடுக்கத் திட்டமிட்டிருக்கிறது ஆளும்கட்சி. இதற்காக சசிகலாவின் குடும்ப ஆட்களைப் பேச வைக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். சசிகலாவின் சம்மதத்துடன்தான் தினகரன் இவ்வாறு செய்தார் என்கின்றனர். ஆனால், அ.தி.மு.க-வுடன் பகையை அதிகப்படுத்தும் நோக்கிலேயே ஏமாற வைக்கப்பட்டிருக்கிறார் சசிகலா" என்கின்றனர் ஆதங்கத்துடன்.

கருத்துகள் இல்லை: