புதன், 31 அக்டோபர், 2018

இலங்கை நாடளுமன்றத்தை கூட்டுமாறு அமெரிக்கா கோரிக்கை

இலங்கை நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் - அதிபர் சிறிசேனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்மாலைமலர் : இலங்கையில் சபாநாயகருடன் கலந்து ஆலோசித்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அதிபர் சிறிசேனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது. கொழும்பு: இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் முற்றிய நிலையில், கடந்த 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து திடீரென ரனில் விக்ரமசிங்கேயை நீக்கினார், சிறிசேனா.
அத்துடன் நில்லாமல், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராகவும் நியமித்தார். மேலும் பிரதமர் இல்லத்தில் உடனடியாக வெளியேற விக்ரமசிங்கேவுக்கு உத்தரவிடப்பட்டதுடன், அவரது பாதுகாப்பும் அதிரடியாக குறைக்கப்பட்டது. இதனால் இலங்கை அரசியலில் திடீர் நெருக்கடி ஏற்பட்டது.
ஆனால் பிரதமர் பதவியில் தானே தொடர்வதாகவும், அதிபரின் முடிவு சட்டவிரோதமானது என்றும் அறிவித்த ரனில் விக்ரமசிங்கே, பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேற மறுத்து விட்டார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டி தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அதிபரை அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் இதை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி வரை அதிபர் சிறிசேனா முடக்கினார்.

இதை ஏற்க மறுத்த சபாநாயகர் கரு ஜெயசூர்யா, அதிபரின் நடவடிக்கையால் நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படும் என கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக சிறிசேனாவுக்கு கடிதம் எழுதிய அவர், தன்னிடம் ஆலோசனை செய்யாமல் நாடாளுமன்றத்தை முடக்குவது மிகப்பெரும் தவறு என அதில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அரசின் தலைவராக ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் நியமிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட கரு ஜெயசூர்யா, அவருக்கு எதிராக வேறொருவர் தனக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை ரனில் விக்ரமசிங்கேயின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த பரபரப்பான சூழலில் அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேற தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக விக்ரமசிங்கேயின் ஆதரவாளரும், மந்திரியுமான அர்ஜுனா ரணதுங்காவை கொழும்பு நகரில் முற்றுகையிட்ட ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் சுடப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.

இலங்கையில் நிலவும் இந்த அரசியல் குழப்பம் சர்வதேச நாடுகளை கவலை கொள்ள செய்திருக்கிறது. அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நவுரெட் கூறுகையில், ‘இலங்கையில் யார் தலைமையில் அரசு அமைப்பது? என்பதை மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் உறுதி செய்யும் பொருட்டு, சபாநாயகருடன் கலந்தாலோசித்து நாடாளுமன்றத்தை அதிபர் உடனடியாக கூட்ட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் நிகழ்வுகளை அமெரிக்கா தொடர்ந்து கவனிப்பதாக கூறிய நவுரெட், அங்கு வன்முறை மற்றும் அடக்குமுறையில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு அனைத்து தரப்பையும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதைப்போல இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு அமைதியாக தீர்வு காண வேண்டும் எனவும், அனைத்து கட்சிகளும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளுமாறும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனநாயக மதிப்பீடுகள் மற்றும் அரசியல் சாசன வழிமுறைகளை மதித்து சட்டத்தின் ஆட்சியையும், அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே நேற்று பிரதமர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் வெளிநாட்டு பத்திரிகையாளர் சங்கத்தில் நேற்று உரையாற்றிய ரனில் விக்ரமசிங்கே, நாடாளுமன்ற விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது எனக்கூறினார். நாடாளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறிய அவர், சபை கூடும்போது அதை நிரூபிப்போம் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகருக்கே அதிகாரம் இருப்பதாகவும், இது தொடர்பாக நாளை (இன்று) அவர் முடிவு எடுப்பார் என்றும் ரனில் விக்ரமசிங்கே கூறினார்.

இதைப்போல இலங்கையின் தற்போதைய அரசியல் குழப்பம் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள சபாநாயகர் கரு ஜெயசூர்யா, சிலர் இதை வெளியில் தீர்க்க முயல்வதாகவும், இது ரத்தம் சிந்தவே வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

கருத்துகள் இல்லை: